||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||
ஆதிசங்கரர் காட்டும் பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணனே!
(விஷ்ணுவே பரமாத்மா என்னும் கொள்கையை உடையவர் ஆதிசங்கரர் என்று அவருடைய நூல்களிலிருந்து நிரூவிப்போம்)
ஆதிசங்கரர் பல தெய்வங்களை ஒவ்வொரு நெறிமுறைகளில் பரம்பொருளாக காட்டினார் என்று அவைகள் சைவம்,வைணவம்,சாக்தம்,காணாபத்யம்,கௌமாரம்,சௌரம் என்னும் மதங்கள் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அவற்றுக்கு ஷண்மதங்கள் என்று பெயர் என்றும் கூறுவதற்கு ஐந்நூறு வருடங்களுக்குள் ஏற்பட்ட சங்கரவிஜயம் முதலான சில நூல்களில் அத்வைதிகள் கற்பித்து எழுதிவரும் கட்டுக்கதைகளைத் தவிர ஆதிசங்கரர் முதலான ப்ராசீனரான அத்வைதாசார்யர் களின் நூல்களிலும், மற்ற பண்டைச் சான்றோர்களின் நூல்களிலும் எவ்வித ஆதாரமும் கிடையாது. பண்டையச் சான்றோர்களின் நூல்களில் ஷண்மதங்கள் என்றும், ஷட்தர்ஸனங்கள் என்றும் வழங்கப் படுபவை வேதத்துக்குப் புறம்பான (1)சாக்யம்(பௌத்தம்) (2)உலூக்யம்(வைஸேஷிகம்) (3)அக்ஷபாதமதம்(நையாயிகம்) (4)க்ஷபணக(சமண)மதம் (5)கபில(ஸாங்க்ய)மதம் (6)பதஞ்சலி(யோக)மதம் என்னும் ஆறு மதங்களேயாம். "பிணக்கற்ற அறுவகைச் சமயமும்" [திருவாய்1-3-5] என்னுமிடத்தின் வியாக்யானங்களைக் காணலாம், ஐந்நூறு வருடத்திற்கு முற்பட்ட எந்த மதநூலிலும் ஷண்மதம் என்று காணாபத்யம் முதலானவற்றைக் கூறியிருப்பதாக்காணவில்லை. இதிலிருந்தே இக்கற்பனை ஐந்நூறு வருடங்களுக்குள் ஏற்பட்டது என்பதும், ஆதிசங்கரர் இந்த ஷண்மதங்களை ஸ்தாபித்திருக்கமுடியாது என்பதும் விளங்கும்.
அவருடையவையென்று ஆராச்சியாளர் அனைவராலும் இசையப்பெற்ற ப்ரஹ்மஸூத்ர,கீதா, உபநிஷத், ஸஹஸ்ரநாம பாஷ்யங்களைப் பார்த்தாலும் அவர் ஷண்மதங்களை ஸ்தாபித்திருக்க இடமேயில்லை என விளங்கும். விஷ்ணு ஸஹஸ்ரநாமபாஷ்யத்தில் அவர் ஒவ்வொருநாமத்தின் பாஷ்யத்திலும் நாராயணனே பிரமன், உருத்திரன் முதலான அனைவரையும் படைத்த ஸகுணப் ரஹ்மம் என்று கோஷிக்திருக்கிறார். இனி உபனிஷத் ப்ரஹ்மஸூத்ர கீதாபாஷ்யங்களிலிருந்து சிலவிடங்களை எடுத்துக்காட்டுவோம்.
ப்ருஹதாரண்யகம்(3-7-3) "ய: ப்ருதிவ்யாம் திஷ்டந்" என்னும் அந்தர்யாமி ப்ராஹ்மண வாக்யத்தை விவரிக்கும் போது, "ய:--- ஈத்ருகீஸ்வரோ நாராயணாக்ய:- ப்ருதிவீம் --- ப்ருதிவீதேவதாம் யமயதி-நியமயதி ஸ்வவ்யாபாரே. அந்தர:- .... அப்யந்தரஸ்திஷ்டந் ஏஷ தே ஆத்மா --- தே தவ மம ச ஸர்வபூதாநாம் ச இத்யுபலக்ஷணார்த்தமேதத்"
[இப்படிப்பட்ட ஈச்வரனான நாராயணன் என்னும் பெயரை யுடைய தேவனே பிருதிவீதேவதையை உள்ளே நின்றுகொண்டு தன் தொழிலில் நியமிக்கிறான். அவனே உனக்கும் எனக்கும் எல்லா பூதங்களுக்கும் ஆத்மா] என்று மூலத்தில் பரம்பொருளின் பெயரைக் குறிப்பிடாமலிருந்த போதிலும். "யஸ்ய ப்ருதிவீ ஸரீரம்-திவ்யோ தேவ ஏகோ நாராயண;" என்னும் ஸுபாலோபனிஷத்திலுள்ள அந்தர்யாமி ப்ராஹ்மண வாக்கியத்தை நெஞ்சிற்கொண்டு நாராயணாக்ய: [நாராயணன் என்னும்பெயரைஉடையவன்] என்று பரம்பொருள் இன்ன தேவதை என்பதைக் கையிலங்கு கனியாகக் காட்டினார். இந்த பாஷ்யத்துக்கு வார்த்திகமிட்ட ப்ராசீனரான அத்வைதாசார்யரும்,
"க்ருஷ்ணத்வைபாயநோ வ்யாஸோ வேதாத்மா த்வாந்த ஹாநிக்ருத்|
ப்ராஹேமமேவ பஹுஸ: ப்ராணிநாம் ஹிதகாம்யயா|| நாராயண: பரோவ்யக்தாத் அண்டமவ்யக்தஸம்பவம்| அண்டஸ்யாந்தஸ்த்விமே லோகா: ஸப்தத்வீபா ச மேதிநீ|| தஸ்மை நமோஸ்து தேவாய நிர்க்குணாய குணாத்மநே| நாராயணாய விஸ்வாய தேவாநாம் பரமாத்மநே|| ஏதமேவ ஸமுத்திஸ்ய மந்த்ரோ நாராயணஸ் ததா| வேதவித்பிர் மஹாப்ராஜ்ஞை: புருஷைர் விநியுஜ்யதே||"
[வேதஸ்வரூபியாய் அஞ்ஞானவிருளைப் போக்குகிறவரான க்ருஷ்ணத்வை பாயனரென்னும் வியாஸர். உயிர்களை உய்விக்கும் பொருட்டு இவ்வர்த்தத்தைப் பலகால் சொன்னார்; அவ்யக்கம் எனப்படும் மூலப்ரக்ருதிக்கு மேற்பட்டவன் நாராயணன்: அந்த அவ்யக்தத்தி லிருந்து உண்டானது அண்டம் அண்டத்தினுள்ளிருப்பவையே இவ்வுலகங்களும், ஏழு தீவுகளையுடைய பூமியும். குணமற்றவனும், குணமுள்ளவனும் எல்லா தேவர்களுக்கும் பரமாத்மாவாயிருப்பவனும் எல்லாமாயிருப்பவனுமான அந்த நாராயணனுக்கு நமஸ்காரம். வேதமறிந்த பேரறிவாளர்களான மஹாபுருஷர்களால் இவனைக் குறித்தே(தைத்திரீய) நாராயண மந்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.] என்று சங்கரர் வியாஸஸித்தாந்த்தை அநுஸரித்து நாராயணன் ஒருவனையே பரதெய்வமாகக் கொண்டவர் என்று காட்டினார். இந்த வார்த்தியத்திற்கு டீகையிட்ட ஆநந்தகிரி என்னும் ப்ராசீநரான அத்வைதாசார்யரும், ""ந கேவலம் புராணாகமாப் யாமேவ ஸோதிகம்யதே| கிந்து ஸ்ருத்யக்ஷரைரபீத்யாஹ-ஏதமேவேதி| ஸஹஸ்ரஸீர்ஷம் தேவமக்ஷரம் பரமம் ப்ரபும் இத்யாதிர் மநத்ரோ வேதார்த்தவித்பிரந்தர்யாமிணமுத்திஸ்ய விநியுக்த:| அத: ஸ வைதிக இத்யர்த்த|| [நாராயணன் புராணாகமங்களால் மாத்திரம் அறியப்படுகிறவனல்லன்: வேதாக்ஷரங்களாலும் அறியப்படுகிறவன் என்பதை "ஏதமேவ" என்று தொடங்கும் ச்லோகத்தாலே கூறுகிறார். "ஸஹஸ்ரஸீர்ஷம் தேவம்" என்று தொடங்கும் நாராயணாநுவாகமந்திரம் வேதத்தின் பொருளை அறிந்தவர்களாலே அந்தர்யாமி விஷயத்திலே விநியோகிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால் நாராயணன் வேதப்ரதிபாத்யனான அந்தர்யாமியே என்று பொருள்.] என்று நாராயணனே வேதத்தில் காட்டப்பட்ட பரம்பொருள் என்று நிலைநாட்டினார். நிற்க.
இப்படி நாராயணனே பரமாத்மா என்று ப்ருஹதாரண்யகபாஷ்யத்தில் காட்டிய ஆதிசங்கரர் சாந்தோக்யம் மூன்றாவது அத்தியாயத்தில் ""ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீத்"" என்று தொடங்கி, ப்ரஹ்மத்தினால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்களை காட்டும் வேதம், ""இந்த்ரோ வருண: ஸோமோ ருத்ர:" என்று படித்திருக்கும் வாக்கியத்தை விவரிக்கும் போது... "இந்த்ரோ சேவாநாம் ராஜா....ருத்ர: பஸூநாம்" என்று பாஷ்யமிடுவதன்மூலம் பசுபதியான உருத்ரன் ப்ரஹ்மத்தால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவனே என்று காட்டினார்.
ப்ரஹ்மஸூத்ரம் (2-2-4) "உத்பத்யஸம்பவாத்" என்னும் ஸூத்ரபாஷ்யத்தில் பாஞ்சராத்ரத்தைப்பற்றி விசாரிக்கும்போது ""தத்ர யத்தாவதுச்யதே யோஸௌநாராயண: பரோவ்யக்தாத் ப்ரஸித்த: பரமாத்மா ஸர்வாத்மா...இதி, தந்ந நிராக்ரியதே|.... யதபி தஸ்ய பகவதோபிகமநாதி லக்ஷண மாராதநமஜஸ்ரமநந்யசித்தயாபிப்ரேயதே. ததபி ந ப்ரதிஷித்த்யதே||"
[நாராயணன் அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலானவனென்றும் பிரஸித்தனென்றும் பரமாத்மாவென்றும் ஸர்வாத்மா வென்றும், பாஞ்சராத்ரிகள் கூறுவதை நாம் மறுக்கவில்லை, பகவானான அவனை அபிகமனம் முதலான வகைகளிலே எப்போதும் வேறுஎவரிடமும் நெஞ்சைச் செலுத்தாமல் ஆராதிப்பதை அவர்கள் ஆதரிப்பதை நாம் தள்ளவில்லை.] என்று நாராயணனே பரமாத்மா என்றும், வேறு எந்த தேவதையிடமும் நெஞ்சு செலுத்தாமல் நாராயணன் ஒருவனிடமே பக்திசெலுத்த வேண்டும் என்று கூறும் பாஞ்சராத்ர மதமே தம் மதம் என்று காட்டியிருக்கிறார் ஆதிசங்கரர்.
கீதாபாஷ்யத்திலும், ""நாராயண: பரோவ்யக்தாத் அண்டமவ்யக்தஸம்பவம்| அண்டஸ்யாந்தஸ்த்விமே லோகா: ஸப்தத்வீபா ச மேதிநீ||"" என்று (முன் வார்த்திககாரரால் கையாளப்பட்ட) நாராயணனையே ஸகல ஜகத்காரணனாகக் காட்டும் மங்களச்லோகத்தை முதலில் இட்டு. அவதாரிகையில் ""ஆதிகர்த்தா நாராயணாக்யோ விஷ்ணு: பௌமஸ்ய ப்ரஹ்மண: ப்ராஹ்மணத்வஸ்ய ச அயிரக்ஷணார்த்தம் தேவக்யாம் வஸுதேவாதம்ஸோ க்ருஷ்ண: கில் ஸம்பபூவ""
[உலகிற்கெல்லாம் ஆதிகர்த்தாவாய், நாராயணன் என்னும் பெயரையுடைய விஷ்ணு பூமியிலுள்ள அந்தணர்களையும், ப்ராஹ்மண்யத்தையும் ரக்ஷிப்பதற்காகவே தேவகீ வஸுதேவர்களுக்குப் பிள்ளையான கிருஷ்ணனாம் அம்சாவதாரமாகப் பிறந்தார்] என்று மிகத்தெளிவாகப் பரதத்வ நிர்ணயம் செய்தார். மற்றும் பலவிடங்களில் இதுபோலவே நாராயணனே பரமாத்மாவென்று காட்டியிருந்தபோதிலும், மூன்றிடங்களையே இங்கு காட்டுவோம். கீதை (6 ---47) பாஷ்யத்தில், ""யோகிநாமபி ஸர்வேஷாம் --- ருத்ராதித்யாதி பராணாம் மத்கதோ-மயி வாஸுதேவே ஸமாஹிதேந அந்தராத்மநா-அந்த: கரணேந ஸ்ரத்தாவாந்-ஸ்ரத்ததாந: ஸந்பஜதே-ஸேவதே யோ மாம் ஸமே-மம, யுக்ததம:- அதிஸயேநயுக்த:- மத:-- அபிப்ரேத: இதி||" [உருத்திரன், ஆதித்யன் முதலானவர்களிடம் பக்தி செலுத்தும் யோகிகளைக்காட்டிலும், என்னிடத்தில் நெஞ்சு செலுத்தியவனாய் ஸ்ரத்தை யுடையவனாய் எவனொருவன் என்னை ஸேவிக்கிறானோ அவனே மிகச்சிறந்த யோகி என்று என்னால் கருதப்படுகிறான் என்று கருத்து.] என்றும், கீதை (7-23) பாஷ்யத்தில், ""அந்தவத்-விநாஸி து பலம் தேஷாம் தத் பவதி அல்பமேதஸாம் அல்ப ப்ரஜ்ஞாநாம்| தேவாந் யஜந்த இதி தேவயஜ: தே தேவாந் யாந்தி மத்பக்தா: யாந்தி மாமபி| ஏவம் ஸமாநே ஆபி ஆயாஸே மாமேவ ந ப்ரதிபத்யந்தே அநந்தபலாய அஹோ கலு கஷ்டதரம் வர்த்ததே. இத்யநுக்ரோஸம் தஸர்யதி பகவாந்||""
[அற்பமான அறிவுடைய அவர்களுக்கு அழிவுள்ள பலன்களே கிடைக்கின்றன, மற்றதேவர்களை ஆராதிப்பவர்கள் "தேவயஜ" என்று கூறப்படுகிறார்கள் அவர்கள் தேவர்களை அடைகின்றார்கள் அவர்கள் தேவர்களை அடைகிறார்கள். என் பக்தர்கள் என்னை அடைகிறார்கள். இப்படி ஆயாஸம் ஸமானமாயிருந்த போதிலும் அழிவற்ற பலனை அடைய என்னை அடையவில்லையே இவர்கள் | இது என்ன கஷ்டம் || என்று வருத்தத்தைக் காட்டுகிறான் பகவான்.] என்றும் கீதை (9-23,25)
பாஷ்யத்தில், ""யேபி...அந்யாஸு தேவதாஸு பக்தா: ஸ்ந்த... பூஜயந்தி...தேபி மாமேவ யஜந்தி அவிதிபூர்வகம்| அவிதி: அஜ்ஞாநம் தத்பூர்வகம் யஜந்தே இத்யர்த்த:|| தேவவ்ரதா: தேவாந் யாந்தி பித்ரூந்.... யாந்தி பித்ருவ்ரதா:... பூதாநி விநாயகமாத்ருகண சதுர்பகிந்யாதீநி யாந்தி பூதே ஜ்யா:--- பூதாநாம் பூஜகா:....மத்யாஜிந: --- மத்யஜநஸீலா வைஷ்ணவா: மாம் யாந்தி| ஸமாநே அபி ஆயாஸே மா மேவ ந பஜந்தே அஜ்ஞாநாத்| தேநதே அல்பபலபாஜ: பவந்தி இத்யர்த்த||""
[எவர்கள் வேறு தேவதைகளிடம் பக்தர்களாயிருந்துகொண்டு பூஜிக்கிறார்களோ. அவர்களும் என்னையே அவிதியை முன்னிட்டு பூஜிக்கிறார்கள். அவிதியாவது அஜ்ஞானம், அஜ்ஞானத்தோடு பூஜிக்கிறார்கள் என்று கருத்து. தேவபூஜகர்கள் தேவர்களை அடைகிறார்கள்: பித்ருபூஜகர்கள் பித்ருக்களை அடைகிறார்கள்; பூதகணங்களைப் பூஜிப்பவர்கள் விநாயகயர் மாத்ருகணம் சதுர்பகிநீமுதலான பூதங்களை அடைகிறார்கள் என்னைப் பூஜிக்கும் வைஷ்ணவர்கள் என்னையே அடைகிறார்கள். மற்றவர்களைப் பூஜிப்பவர் களுக்கும் பூஜிக்கும் சிரமம் ஒன்றாயிருந்தபோதிலும் நானே ஸகலயஜ்ஞங்களுக்கும் ஸ்வாமி என்பதை அறியாமையாலே அவர்கள் என்னை அடைவதில்லை அதனால் அவர்கள் அற்ப பலனைப் பெறுகிறார்கள் என்று கருத்து.] என்றும் கல்வெட்டாகக் காட்டியிருக்கிறார் ஆதிசங்கரர்.
இவற்றிலிருந்து ஆதிசங்கரரும், அவருக்கு ஸமீப காலத்திலிருந்த வார்த்திகடீதாகாரர்களும் நாராயணனையே ஸகுணப்ரஹ்மமாகக் கொண்டி ருந்தனர் என்றும், சிவன், விநாயகன்,ஸூர்யன் முதலான தேவர்களை ஜீவர்களாகவே கொண்டிருந்தனர் என்றும் தெளிவாக விளங்குகிறது. இப்படியிருக்கும்போது சிவன்,சக்தி கணபதி,முருகன்,ஸூர்யன் என்னும் தெய்வங்களைப் பரம்பொருளாகக்கொண்ட மதங்களையும் அவரே ஸ்தாபித்தார் என்று எப்படிக் கொள்ளமுடியும்? மேலும், அத்வைத ஸித்தாந்தப்படியும் அனைத்துலகையும் படைத்து அளித்து அழித்து மோக்ஷமளிக்கும் ஸகுணப்ரஹ்மம் ஒன்றாயிருக்க முடியுமேயொழிய எப்படி ஆறாயிருக்கமுடியும்? ஒவ்வொரு தேவதையைப் பரம்பொருளாகக் கொண்ட ஆறு மதங்களையும் மனஸ்ஸாக்ஷியுள்ள ஒருவரே எப்படி ஸ்தாபிக்கமுடியும்? கீதாபாஷ்யத்தில் நாம் எடுத்துக்காட்டிய வாக்கியங்களில் சிவன்,விநாயகன்,ஸூர்யன் முதலான தேவர்களை உபாஸிப்பவர்களுக்கு அழியும் பலனே கிடைக்குமென்றும், விஷ்ணுவை உபாஸிப்பவர் களுக்கே அழியாப்பலன் கிடைக்குமென்றும் ஆதிசங்கரர் கோஷித்திருக்கிறார். ஆதி சங்கரர் ஸ்ரீமந் நாராயணனையே பரம்பொருளாக கொண்ட வைணவத்தையே ஆமோதிக்கிறார் என்று புலனாகிறது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
ஆதாரம்:-[சங்கரரும் வைணவமும் என்னும் ஸ்வாமி கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் இயற்றிய நூலிலிருந்து ஒரு சுருக்கமாக]