Sunday, March 24, 2019

ஸ்ரீவைஷ்ணவமத விஜயம்

ஸ்ரீ S. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் இயற்றிய "ஸ்ரீவைஷ்ணவமத விஜயம்" என்னும் நூலில் இருந்து அரால் வைஷ்ணவ துவேசிகள் மீது எழுப்ப பட்ட கேழ்விகள் சில வற்றை இங்கே பார்ப்போம்.

சங்ககாலத்தில் பரம்பொருளாக திருமாலையே அக்கால சான்றோர்கள் கொண்டனர். என்னும் ஸ்வாமியின் வாதத்திற்கு மறுப்பளித்தவர்களுக்கு அவர் முன் வைத்த கேழ்விகள் இங்கே...!

(1)திருமாலைப் போற்றுவதான இரண்டாவது பரிபாடலில் கீரந்தையார் என்னும் சங்ககாலச் சான்றோர் --- உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட முறையிலே பிரளய காலத்தையும், அதைத் தொடர்ந்து வரும் ஸ்ருஷ்டிகாலத்தில் மூலப்ரக்ருதியிலிருந்து ஆகாசமும், அதிலிருந்து காற்றும், அதிலிருந்து தீயும், அதிலிருந்து புனலும், அதிலிருந்து நிலமும் முறையே படைக்கப்பட்டதையும் விரிவாக வர்ணிக்கிறார், இப்படிப் படைத்தவன் யார் என்னும் கேள்வியெழ ""கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு ஊழி யாவரும் உணரா; ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது""  என்று சுவேதவராஹகல்பத்தின் ஆதியிலே சுவேதவராஹ உருவோடு பிரளயஜலத்திலிருந்து பூமியை எடுத்து நிலை நிறுத்திய திருமாலே எவராலும் தன் முதுமையைக் காண முடியாத அந்த மூலமுதற்பொருள் என்று முழங்குகிறார்.
இதுபோல் வேறொரு தெய்வத்தைச் சங்ககாலச் சான்றோர் மூலமுதற்பொருள் என்று முழங்கியிருக்கிறார்களா?.

(2)திருமாலைப் புகழும் முதற்பரிபாடலைப் பாடிய சங்காலப்புலவர் ""அவனன்றி ஓரணுவும் அசையாது"" என்று அப்பாடலில் காட்டிவரும்போது ""பூவனும் நாற்றமும் நீ""
[பூவில்பிறந்த பிரமனும், அவன் செய்யும் படைப்புத்தொழிலும் உன்னதீனமே]  என்றும், ""ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ"" [ஐந்து தலைகளை உடையவனாய், இந்திரன் முதலான தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாய், பகைவர்க்கு அச்சத்தை விளைப்பவனாய், மிக்க வீர்யத்தையும் பலத்தையும் உடையவனான சிவனும், அவன் செய்யும் அழிக்கும் தொழிலும் உன் அதீனமே] என்றும் பிரமனும் சிவனும் செய்யும் படைக்கும் தொழிலும் அழிக்கும் தொழிலும் அவர்களுக்குள்ளிருந்து திருமால் செய்வதே என்று காட்டுகிறார். இதுபோல் திருமாலும் அவன் செய்யும் காத்தல் தொழிலும் மற்றொரு தெய்வத்துக்கு அதீனம் என்று எந்தக் சங்கப்புலவராவது காட்டியிருக்கிறாரா?.

(3)அதே முதற்பரிபாடலில் "இன்னோர் அனையை இனையையால் என அன்னோர் யாம் இவண் காணாமையின் பொன்அணி நேமி வலம் கொண்டு ஏந்திய மன்னிய முதல்வனை ஆதலின் நின்னோர் அனையை நின் புகழொடும் பொலிந்தே!"
[நீ இன்னாரை ஒத்தவன், இத்தகையவன் என்று உனக்கு உவமை சொல்லும்படி எவரையும் காணுமையால், பொற்சக்கரத்தை ஏந்திய நீயே நிலைநின்ற ஜகத்காரணனாய், எல்லா குணங்களோடும் கூடியிருக்கையால் தானே தனக்குவமனாயிருக்கின்றாய்] என்று கூறுவதன் மூலம் பிரமன், சிவன் முதலான எவரும் இவனுக்கு ஒத்தவர்கள் அல்லர் என்றும், தனக்குவமை இல்லாதானாய், அவர்களனைவரையும் படைத்த நிலைநின்ற ஜகத்காரணன் இவனே என்றும் மிகத்தெளிவாகக் காட்டுகிறார். இதுபோல் மற்றொரு தெய்வம், ஒப்பற்ற ஜகத்காரணப் பொருளாகச் சங்கநூல்களில் எங்காவது கூறப்பட்டுள்ளதா?.

(4)மூன்றாம் பரிபாடலில் கடுவன் இளவெயினனார் என்னும் சங்ககாலச்சான்றோர் "தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், திதியின் சிறாரும், விதியின் மக்களும், மாசுஇல் எண்மரும், பதினொரு கபிலரும், தா மா இருவரும், தருமனும் மடங்கலும், மூ - ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும் மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும் நீ என மொழியுமால், அந்தணர் அருமறை"
[ஐந்து பூதங்களும், சூரியசந்திரர்களும், யாகம் செய்பவனும், மற்ற ஐந்து கிரகங்களும் அசுரரும், பன்னிரு ஆதித்யர்களும், எட்டு வசுக்களும், பதினொரு உருத்திரரும், அசுவினி தேவர்களும், யமனும், கூற்றமும் எல்லா உலகங்களும், அவ்வுலகிலுள்ள உயிர்களும், மாயோனாகிற உன்னிடமிருந்தே உண்டானவர் என்பதை அழியாத வேதம் சொன்னபடி முறைதப்பச் சொன்னோம். வேதமாகிற ஓடையிலே மலர்ந்த (வேதத்தால் ஓதப்பட்ட) தாமரைப்பூவில் பிறந்தவனாகிற பிரமனும் நீ என்றும், அவனுக்குத் தந்தையும் நீ என்றும், அந்தணர் ஓதும் அருமறைகள் முழங்குகின்றன.] என்று உலகிலுள்ள எல்லாப் படைப்புக் கடவுளாகப் பிரசித்திபெற்ற பிரமனையும் உந்தித் தாமரையில் படைத்து, மற்ற பொருள்களை அவனுக்கு அந்தர்யாமியாயிருந்து திருமாலே படைக்கிறான் என்றும் வேதங்கள் ஓதுகின்றன என்று தெளிவாகக் காட்டுகிறார்.
"பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!" என்று புருஷ ஸூக்தம் முதலான வேதப் பகுதிகளிலே கணக்கற்ற கைகளையுடைய ஜகத்காரணப்பொருளாக ஓதப்படுபவன் இவனே என்று காட்டுகிறார். "இனைத்து என எண்வரம்பு அறியா யாக்கையை" என்று உலகிலுள்ள கணக்கற்ற பொருள்களனைத்தையும் தன் சரீரமாகக்கொண்டிருப்பவனாகையாலே இவனே ஜகத்காரணப் பொருளாயிருக்கமுடியும் என்று நிரூபிக்கிறார். "முன்னை மரபின் முதுமொழி முதல்வ!" என்று அனாதிகாலமாக ஓதியும், ஓதுவித்தும் பரவுகின்ற முதுமொழியாகிய வேதத்தில் ஜகத்காரணனாக ஓதப்படுபவன் திருமாலே என்று முழங்குகிறார்.
"அமரர்க்கு முதல்வன் நீ... அவுணர்க்கும் முதல்வன் நீ" என்று பறைசாற்றுகிறார். "காலமுதல்வனை; எஏ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்" [சாமவேதம் காலத்துக்கும் காரணமாயிருப்ப வன் என்றும் உன்னைக் கூறுகையாலே நாங்கள் அப்படித் தெரிந்துகொண்டோம்.] என்று சாமவேதத்தைப் பிரமாணமாகக் காட்டி, திருமாலைக் காலமுதல்வன் என்று பறை சாற்றுகிறார். "முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலின் பிறவாப் பிறப்பில்லை பிறப்பித்தோரிலையே"  என்று முதலில் செய்யப்படும் படைப்புத் தொழிலில், நடுவில் செய்யப்படும் காத்தல்தொழில், முடிவில் செய்யப்படும் அழித்தல் தொழில் என்னும் முத்தொழில்களையும் செய்வதற்காகத் திருமால் எல்லாப் பிறப்புக்களையும் எடுக்கிறான் என்றும், அப்படி அவன் பிறக்கும் போது தன் விருப்பத்தால் பிறக்கிறானேயொழிய இவனைப் பிறக்கச் செய்தவர்கள் எவருமில்லை என்று முழங்கி, முத்தொழில்களையும் செய்யும் தனிமுதல்வன் இவனே என்று பறைசாற்றுகிறார். "இருநிழல் படாமை மூ - ஏழ் உலகமும் ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ!"
என்று எல்லா உலகையும் ஏகசக்ராதிபதியாக ஆள்பவன் திருமாலே என்று முழங்குகிறார்.
"பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என, இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என, ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என, நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை" என்று காட்டுகிறார். "மாயா மன்ன! உலகாள் மன்னவ! " என்று என்றும் அழியாத ஸர்வலோக சக்ரவர்த்தி இவனே என்று விளம்புகிறார்.
"மா நிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே" என்று பிரளய காலத்தில் எல்லாப் பொருளும் பரமாத்மாவான தன்னோடு ஒன்றிக்கிடந்தபோது பிரமனை முதலில் உந்தித் தாமரையில் படைத்தவன் திருமாலே என்று முழங்குகிறார்.

இதே கடுவன் இளவெயினனார் தம் நான்காம் பரிபாடலில்
"நின்னில் தோன்றிய நிரை இதழ்த்தாமரை நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை" என்று உலகத்துக்குக் காரணமான தாமரை திருமாலிடமிருந்தே தோன்றிற்று என்று --- தேவிற்சிறந்த திருமாலைப்போலே நூலிற் சிறந்த அந்தணர் அருமறை ஓதுகிறது என்று உணர்த்தினார். இதுபோல் மற்றொரு தெய்வத்தைச் சங்கநூல்கள் எங்காவது பாடியதுண்டா?.

(5)திருமாலைப் பற்றிய பதின்மூன்றாம் பரிபாடலில் நல்எழுநியார் என்னும் சங்ககாலப்புலவர் "முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும் கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை"
[கழிகாலம், நிகழ்காலம், வருங்காலம் எனப்படும் மூன்று காலங்களையும் கடந்தவன் நீ. அக்காலங்கள் வந்து தங்கியிருக்கும் திருவடி நிழலையும் உடையவன் நீ] என்று திருமாலே காலத்தைக் கடந்தவன், காலத்துக்கும் முதல்வன் என்று காட்டினார். "ஒருமை வினை மேவும் உள்ளத்தினை" என்னும் பகுதியினாலே திருமால் முத்தொழிலையும் செய்யும் முதல்வனானாலும், காத்தல் தொழிலிலேயே அவன் திருவுள்ளம் பொருந்தியிருக்கிறது எனக்காட்டினார். இதுபோல் சங்கநூல்களில் எங்காவது மற்றொரு தெய்வத்தை முத்தொழில்களைச் செய்யும் முதல்வனாகவும் காலங்களைக் கடந்தனாகவும் கூறியதுண்டா?.

(6)பரிபாடல் திரட்டில் எட்டாம் பாடலில் "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்பூ" என்றும், "பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி" என்றும் மாயோனாகிற திருமாலின் உந்திலேயே உலகனைத்துக்கும் ஆதாரமான தாமரை மலர்ந்தது என்றும், பிரமனும் அப்பூவினுள் பிறந்தவனே என்றும் கூறுகையால் திருமாலே முழுமுதல்வன் என்று விளங்குகிறது. பத்துப்பாட்டிலுள்ள பெரும்பாணாற்றுப்படையில் 402-வது அடி தொடங்கி "நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த் தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி" என்று நீலநிறத்து நெடியவனாகிற திருமாலது உந்தித்தாமரையி லிருந்தே நான்முகன் படைக்கப்பட்டான் என்னும் இவ்விஷயம் வலியுறுத்தப்பட்டது. இதுபோல உலகனைத்தையும் படைத்ததாக மற்றொரு தெய்வத்தைச் சங்கநூல்கள் எங்காவது கூறியதுண்டா?.

(7)திருமாலைப்பற்றிய இரண்டாம் பரிபாடலிலே "வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்" [குற்றமற்ற கொள்கைகளையுடைய குணம் மிக்கவர்களால் ஆராயப்படுவதும், ஆதியில்லாததாகையாலே அழிவுமில்லாததும், காதால் கேட்கப்பட்டே பரவுதலால் 'கேள்வி' எனப்படுவதுமான வேதத்தினுள் அனைத்துக்கும் அந்தர்யாமியாகச் சொல்லப்படுகிறவனும் நீயே] என்று திருமாலே வேதத்தில் ஸர்வந்தர்யாமியாக முழங்கப்படுகிறான் என்று விளக்கப்பட்டது. "உவ்வும் எவ்வயினோயும் நீயே என்னும் அருமறைப்பொருள்"  [குறிப்பால் உணர்த்தத்தக்கவனாய், எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாயிருப்பவன் நீயே என்று அரிய மறைகள் ஓதுகின்றன.]  என்று இவ்விஷயம் வலியுறுத்தப்பட்டது. மூன்றாம் பரிபாடலில் "கீழ் ஏழுலகமும் உற்ற அடியினை" என்று திருமால் திரிவிக்கிரமனாய், தன் ஓரடியாலே கீழேயுள்ள எல்லாவுலகங்களையும் அளந்தான் என்று கூறுவதன் மூலம், தன் திருமேனியாலும் எங்கும் வியாபிக்கல்லவன் என்று காட்டப்பட்டது. நாலாம் பரிபாடலிலும் "எவ்வயினோயும் நீயே" என்று இவனுடைய ஸர்வவ்யாபகத்வம் வலியுறுத்தப்பட்டது. இதுபோல் மற்றொரு தேவனைச் சங்கநூல்கள் எல்லாவிடத்திலும் வியாபித்திருப்பவனாகக் கூறியதுண்டா?.

(8)மூன்றாம் பரிபாடலில் "இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை" என்று எங்குமுள்ள கணக்கற்ற பொருள்களனைத்தும் திருமாலின் சரீரங்களே என்று முழங்கப்பட்டது.
"இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும், ஏமம் ஆர்ந்த நிற் பிரிந்து, மேவல் சான்றன, எல்லாம்"  என்று நாலாம் பரிபாடலில் எல்லாப் பொருள்களும் திருமாலைக் காட்டிலும் வேறுபட்டவையா யிருந்தபோதிலும் அவனுடைய சரீரமாக அவனோடு ஒன்றியும் நிற்கின்றன என்று காட்டப்பட்டது. பதின்மூன்றாம் பரிபாடலிலும்
"அதனால், நின் மருங்கின்று -- மூ ஏழ் உலகமும்"  என்று இவ்விஷயம் வலியுறுத்தப்பட்டது. இதுபோல் உலகனைத்தும் மற்றொரு தெய்வத்தின் சரீரமென்று சங்ககாலச் சான்றோர் எவராவது பேசியதுண்டா?.

(9) "விறல் மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும் அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ, திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ, அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும் திங்களும் தெறு கதிர்க் கனலியும் நீ, ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ, நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமும் நீ, வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் நிலனும் நீடிய இமயமும் நீ" [முதற்பரிபாடல்] என்றும், "தீயினுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீ, கல்லினுள் மணியும் நீ, சொல்லினுள் வாய்மை நீ, அறத்தினுள் அன்பு நீ, மறத்தினுள் மைந்து நீ, வேதத்து மறை நீ, பூதத்து முதலும் நீ, வெஞ்சுடர் ஔியும் நீ, திங்களுள் அளியும் நீ, அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்" [மூன்றாம் பரிபாடல்] என்றும், "பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என, இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என, ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என, நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை" [மூன்றாம் பரிபாடல்] என்றும், "நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று  உள; நின் தண்மையும் சாயலும் திங்கள் உள; நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள; நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள; நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள; நின் தோற்றமும் அகலமும் நீரின் உள: நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள; நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள" [நாலாம் பரிபாடல்]
என்றும், "சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு, அவையும் நீயே, அடுபோர் அண்ணால்! அவை அவை கொள்ளும் கருவியும் நீயே; முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும், ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே; இரண்டின் உணரும் வளியும் நீயே; மூன்றின் உணரும் தீயும் நீயே;  நான்கின் உணரும் நீரும் நீயே; ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே; அதனால், நின் மருங்கின்று -- மூ - ஏழ் உலகமும் மூலமும், அறனும், முதன்மையின் இகந்த காலமும், விசும்பும், காற்றொடு கனலும்"[பதிமூன்றாம் பரிபாடல்] என்றும் சங்ககாலச் சான்றோர்கள் முழங்கியிருப்பதிலிருந்து, உலகிலுள்ள பொருளனைத்தையும் அந்தர்யாமியாய் நின்று நியமிக்கையாலே, எல்லாம் திருமாலுக்கு வசப்பட்டிருப்பதை யிட்டு, அவையனைத்தும் திருமாலே என வழங்கலாம் என்பதே சங்ககாலச் சான்றோர்களின் தீர்ந்த முடிவு என விளங்குகிறது. இப்படி
'எல்லாம் அவனே' என்பதற்குக்  காரணம் அனைத்தையும் அவன் வியாபித்திருக்கையே என்பதை
"அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்" [மூன்றாம் பரிபாடல்] என்றும், உலகனைத்தும் திருமாலைக் காட்டிலும் வேறுபட்டிருந்தபோதிலும், அவனுடைய சரீரமாக அனோடு ஒன்றிநிற்கின்றது என்பதை
"நிற் பிரிந்து மேவல்சான்றன எல்லாம்" [நாலாம் பரிபாடல்] என்றும் கூறியிருப்பதிலிருந்து, உலகும் பரம்பொருளும் வெவ்வேறு தத்துவங்களாகையாலே வேறுபாட்டையும், அவை முறையே சரீரமாகவும் ஆத்மாவாகவு மிருக்கையாலே ஐக்கியத்தையும் ஒப்புக்கொள்ளும் விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ மதத்தையே சங்ககாலச் சான்றோர்கள் தழுவியிருந்தனர் என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது. இதுபோல் சிவனைப் பரம்பொருளாகக் கூறும்  சைவமதம் சங்கநூல்களில் எங்காவது ஆதரிக்கப்பட்டுள்ளதா?.

(10)மூன்றாம் பரிபாடலில் "நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்" என்று உயிர்கள் தன்னையடைவதற்கு உபாயங்களை அறியும் பரம்பொருள் திருமாலே என்று காட்டி, "நின்னைப்புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ, முன்னை மரபின் முதுமொழி முதல்வ?" என்று திருமாலுடைய பெருமையை அவன் ஒருவனே உணரமுடியும் என்று முழங்குகையாலே, திருமால் ஒருவனே எல்லாமறிந்தவன் என்று அறுதியிடப்பட்டது. "நீயா நினைவ" 
[நீங்காத அறிவை உடையவனே!] என்றும் இவனுடைய ஸர்வஜ்ஞத்வம் வலியுறுத்தப்பட்டது. இதுபோல் எல்லாமறிந்தனாக மற்றொரு தேவனைச் சங்ககாலச் சான்றோர்கள் கூறியிருக்கிறார்களா?.

(11)மூன்றாம் பரிபாடலில் திருமாலே எல்லாம் வல்ல ஸர்வசக்தன் என்பதை "இரு கை மாஅல்! முக் கை முனிவ!  நாற் கை அண்ணல்! ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்! எழு கையாள! எண் கை ஏந்தல்! ஒன்பதிற்றுத் தடக்கை மன் பேராள! பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை" என்னும் பகுதியாலே கடுவன் இளவெயினனார் காட்டினார். இது போல் எல்லாம் வல்ல ஸர்சக்தி யுடையதாக வேறொரு தெய்த்தைச் சங்ககாலச் சான்றோர் பாடியிருக்கிறார்களா?.

(12)மூன்றாம்பரிபாடலில்
"மாஅயோயே! மாஅயோயே! மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!" என்று உயிர்களின் மறுபிறப்பை அறுக்கும் குற்றமற்ற திருவடிகளையுடைய அப்ராக்ருதத் திருமேனியை உடையவன் திருமாலே என்று கடுவன் இளவெயினனார் முழங்கினார்.
"ஆறு அறிகடவுள்" என்று உயிர்களை உய்விக்கும் வழிகளை யறிந்தவன் திருமாலே எனக்கூறி இதை வலியுறுத்தினார்.
பதின்மூன்றாம் பரிபாடலில்
"நின் திருவரை அகலம் தொழுவோர்க்கு உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து" என்று நல்எழுநியார் திருவின்நாயகனைத் தொழுகின்றவர்களே பரமபதமாகிற வீட்டுலகத்தை அடையலாம் என்று காட்டினார்.
"இருமை விளையும் இல ஏத்துமவை" என்று ஜீவர்கள் மோக்ஷத்தை அடையாமலிருப்பதற்குக் காரணமான புண்யபாபங்களாகிற இருவினைகளும் திருமாலைத் துதிப்பவர்களுக்கு நீங்கிவிடும் என்றும் நவின்றார். பதினைந்தாம் பரிபாடலில் இளம்பெருவழுதியார்
"நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்?" என்று துழாய்மாலை அணிந்த திருமால் கொடுத்தாலல்லது வீட்டுலகை எவராலும் அடையமுடியாது என்றும், "அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப" என்று 'அரிய உபாயங்களைச் செய்வதன் மூலம் கிடைக்கும் வீட்டுலகம், மாலிருஞ்சோலையில் வாழ்வ தாலேயே எளிதில் அடையத்தக்கது என்றும் பறைசாற்றினார். இதுபோல் மறுபிறப்பையும் இருவினைகளையும் அடியோடு அறுப்பவனாகவும் வீட்டுலகத்தை அளிப்பவனாகவும் அச்சான்றோர் சங்கநூல்களில் வேறொரு தேவனைப் பாடியிருக்கிறார்களா?.

(13)முதற்பரிபாடலிலே "நின் ஒக்கும் புகழ் நிழலவை" [உன்னுடைய நற்குணங்களின் ஔி உன்னைப் போல் எங்கும் பரவியுள்ளது.] என்றும், "எண் இறந்த புகழவை" [கணக்கில்லாத குணங்களை உடையவனாயிருக்கிறாய்] என்றும் திருமாலின் நற்குணங்கள் கணக்கற்றவையாய், எங்கும் பரவியுள்ளன எனக் காட்டப்பட்டது. இரண்டாம் பரிபாடலிலே கீரந்தையார் "வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மை நாடின் இருநிலம்" [தப்பாது வருகின்ற நாளைப்போலே உன் உண்மையுரை தப்பாதது. உலகில் மிகச் சிறந்த நின் பொறுமைக்கு பூமியே உவமையாகக் கூடியது] என்று திருமாலின் வாய்மை, பொறுமை ஆகிய இரண்டு குணங்களின் பெருமையைப் பேசினார்.
மூன்றாம் பரிபாடலிலும் ஒன்றுமுதல் நூறாயிரம் வரை திருமாலின் கைகளைப் பெருக்கிக் கொண்டு போகும்போது
"நின் புகழ் உருவின கை" [உனது புகழை ஒத்தவை உன் கைகள்] என்கையாலே, திருமாலின் கல்யாணகுணங்கள் கணக்கற்றவை என்று காட்டினார். பதின்மூன்றாம் பரிபாடலிலும்
"சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ! ஏவல் இன் முது மொழி கூறும் நற்புகழவை" [கருடனாகிற மிகவுயர்ந்த கொடியையுடைய செல்வனே! ஒருவரால் ஏவப்படாததாய், அனாதியான வேதங்களும் ஓதும் நல்ல கல்யாண குணங்களை உடையவன் நீ] என்று இனுடைய கல்யாண குணங்கள் வேதத்தில் காட்டப்பட்டவை என்று முழங்கினார்.
"கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை" [கேள்வித்திறமையும்,அறிவும் தர்மமும் ஸூக்ஷ்மமாக உடையவனாயிருக்கிறாய்] என்றும், "வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை" [யஜ்ஞங்களில் விருப்பத்தையும், அதர்மத்தில் சீற்றத்தையும் உடையவனாயிருக்கிறாய்] என்றும் திருமாலின் கல்யாண குணங்களில் சில பேசப்பட்டன. பதினைந்தாம் பரிபாடலில்
"அன்பது மேஎய் இருங்குன்றத்தான்" என்று திருமாலிருஞ்சோலைத் திருமால் அன்பே வடிவெடுத்தவன் என்று காட்டினார். "பெரும் பெயர் இருவரைப் பரவுதும்" என்று ஸங்கர்ஷண வாசுதேவர்கள் பெரிய புகழை உடையர்கள் எனக் காட்டினார். பரிபாடல் திரட்டிலும்
"நல்லவை எல்லாம் இயை தரும் தொல்சீர்..... குளவாய் அமர்ந்தான் நகர்" என்று குளவாய் என்னும் திருப்பதிக்கும், அதில் அமர்ந்திருக்கும் திருமாலுக்கும் நல்ல குணங்கள் எல்லாம் சேர்ந்திருக்கின்றன என்று உணர்த்தினார். தொல்காப்பியரும் பூவைநிலையைக் கூறும்போது "தாவா விழுப்புகழ் மாயோன்" என்று அழியாத சீர்மைமிக்க குணங்களையுடையவன் திருமால் என்று காட்டினார். "தேயா விழுப் புகழ் தெய்வம்" என்று இவ்வர்த்தம் முல்லைக்கவி மூன்றாம் பாடலிலும் வலியுறுத்தப்பட்டது. புறநானூற்றிலும் "புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை" [56] என்று அரசனின் புகழுக்குத் திருமாலின் புகழை உவமையாகக் காட்டி, அடுத்ததான 57-ம் பாடலில் "வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!" என்ற முதல் மூன்று அடிகளில் "கல்வி நிரம்பியவராயினும் நிரம்பப் பெற்றவராயினும் புகழத் தொடங்கியவர்க்குத் திருமாலை ஒத்த (புகழமுடியாத) பாண்டியனே!" என்று கூறுகிறார். இதுபோல் சங்ககாலச் சான்றோர்கள் வேறொரு தேவனைத் தாழ்வற்றவனாகவும், எல்லாக் கல்யாணகுணங்களையும் உடையவனாகவும் பாடியிருக்கிறார்களா?.

(14)முதற்பரிபாடலில் "தெருள நின் வரவு அறிதல் மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே" [பரமபதத்திலிருக்கும் நீ (திருமால்) இவ்வுலகில் வந்து அவதரிப்பதைத் தெளிவாக அறிவது மயக்கமற்ற அறிவை உடைய முனிவர்களுக்கும் அரியதாகும்.] என்று திருமாலின் அவதார ரஹஸ்யம் அறிவாளிகளுக்கும் அறிதற்கு அரிது என உணர்த்தப்பட்டது. இரண்டாம்  பரிபாடலிலும்
"கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு ஊழி யாவரும் உணரா" என்று வராஹாவதாரம் எடுத்த திருமாலின் முதுமையைப் பல்லூழி காலத்தில் எவருமே உணரமாட்டார்கள் என முழங்கப்பட்டது. "உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று" [வராஹாவதாரத்தின் பெருமையை ஞானிகள் ஓதும் வேத வாக்கியங்களே கூறுகின்றன. அவையும் இவ்வவதாரத்தின் பெருமையைப் பேசத்தக்க சிறப்புடையவையல்ல] என்றும் பறைசாற்றப்பட்டது. மூன்றாம் பரிபாடலில் -- திருமாலின் திரிவிக்கிரமாவதாரம், வராஹாவதாரம், ஹம்ஸாவதாரம் என்னும் அவதாரங்களை எடுத்து "ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து நாலு எண் தேவரும் நயந்து நிற்பாடுவோர்"  என்று நிலத்தேவர்களாகிய மறையவர்களும் வானத்திலுள்ள எல்லாத் தேவர்களும் இவ்வவதாரங்களின் பெருமையைப் பாடுவார்கள் என்று கூறப்பட்டது. அதையடுத்து, கிருஷ்ணாவதாரத்தையும், மோஹனாவதாரத்தையும், மற்றும் பற்பல அவதாரங்களையும் பேசி "நின்னைப்புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ, முன்னை மரபின் முதுமொழி முதல்வ!"
என்று இப்பெருமைகளை அநாதி வேதத்தில் முதல்வனாக ஓதப்படும் திருமாலைத் தவிர வேறு எவராலும் உணரமுடியாது என்று அறுதியிடப்பட்டது.  அதற்குப்பின்..
"முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழில் பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே" என்று உலகைப் படைத்தளித்தழிப்பதற்காகத் திருமால் எல்லா யோனிகளிலும் பிறக்கிறான் என்றும், ஆயினும் அப்படி அவனைப் பிறப்பித்தவர் எவரும் இல்லை ஆகையாலே அவனுக்கு இப்பிறப்புக்கள் சிறப்புக்களைத் தருமேயொழியத் தாழ்வுகளைத் தரமாட்டா என்றும் உணர்த்தப்பட்டது. இப்பாடலின் கடைசியிலும்..

"செங்கட்காரி! கருங்கண் வெள்ளை! பொன்கட் பச்சை! பைங்கண் மாஅல்! இடவல! குடவல! கோவல! காவல! காணாமரப! நீயா நினைவ! மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! தொல் இயல் புலவ! நல்லியாழ்ப்பாண! மாலைச் செல்வ! தோலாக் கோட்ட! பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண! பருதி வலவ! பொருதிறல் மல்ல! திருவின் கணவ! பெருவிறல் மள்ள!"  என்று எம்பெருமானுடைய பலவகைப்பட்ட வியூஹங்களையும் அவதாரங்களையும் பேசி அவற்றின் புகழைப் பறைசாற்றுகின்றார் கடுவன் இளவெயினனார்.  நாலாம் பரிபாடலிலும் "மனக்கோள் நினக்கென வடிவு வேறிலையே" என்று இவனுடைய அவதாரங்கள் இவனுடைய விருப்பத்தாலும், இவனுடைய அடியார்களது விருப்பத்தாலும் ஏற்படுகின்றனவேயொழிய, மற்றவர்களுடைய பிறப்பைப் போல் கர்மம் காரணமாக ஏற்படுகின்றவையல்ல என்று தெளிவாக்கப்படுகிறது. இப்படித் திருமால் அவதாரம் எடுப்பது அவனுக்கு உயர்வைத் தருமேயொழிய தாழ்வைத் தாராது என்னும் வைணவ மதக்கொள்கை பரக்கப் பேசப்பட்டிருப்பதுபோல், பரம்பொருளுக்கு அவதாரமெடுப்பது இழுக்கு என்னும் சைவ மதக்கொள்கை சங்கநூல்களில் எங்காவது பேசப்பட்டுள்ளதா?.

(15)முதற்பரிபாடலில் "அன்ன மரபின் அனையோய்! நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது?"
[அப்படிப்பட்ட பெருஞ்சிறப்புக்களை உடைய பெரியவனே! உன்னை இப்படிப் பட்டவன் என்று உரைப்பது சிற்றறிவாளர்களான எமக்கு எப்படி எளிதாகும்] என்று திருமாலே அளத்தற்கரிய பரம்பொருள் என்று பேசினார், இதையே..  "இன்னோர் அனையை இனையையால் என அன்னோர் யாம் இவண் காணாமையின்" என்று திருமாலே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பரம்பொருள் என்று அறுதியிடுவதன் மூலம் வலியுறுத்தினார். மூன்றாம் பரிபாடலிலும்..    "இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை" என்று திருமாலின் சரீரங்களை இவ்வளவு என்று எண்ணமுடியாது என்று கடுவன்இளவெயினனார் காட்டினார். 
"நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ, முன்னை மரபின் முதுமொழி முதல்வ!"  என்று திருமாலை அறிவது அவன் ஒருவனைத் தவிர வேறு எவர்க்கும் எளிதன்று என்றும் முழங்கினார்.
"நினக்கு --- விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், வலியினும், மனத்தினும், உணர்வினும் எல்லாம் வனப்பு வரம்பு அறியா மரபினோயே!"
[அளவற்ற வேதங்கள் அனைத்தினாலும் எத்தனையேனும் பலமுடையவர்களாலும், எவ்வளவு தூயநெஞ்சினாலும், எவ்வளவு அகன்ற அறிவினாலும் உன்னுடைய ஸ்வரூபம், ரூபம், குணங்கள், செல்வங்கள் ஆகிய அனைத்தின் அழகையும் அறியமுடியாது; எல்லையையும் அறியமுடியாது] என்று திருமாலே அளத்தற்கரிய பரம்பொருள் என்பதைத் தெளிவாக விளக்கினார்.
"காணா மரப!" என்று விளிப்பதன்மூலம் இவன் எவராலும் அளவிட்டு அறியமுடியாத முறைமையினை உடையவன் எனக் காட்டினார். நாலாம் பரிபாடலைத் தொடங்கும் போதே உலகியலைக் கடந்த ஞானிகளே திருமாலின் புகழைப் பாடமுடியுமேயொழிய மற்றையோரால் பாட இயலாது' எனக்கூறி "அவை நினக்கு இறும்பூது அன்மை நன்கு அறிந்தேம்" [அப்புகழுரைகளும் உன் இயல்வையே சொல்லுகின்றனவாகையாலே உனக்கு வியத்தற்குரியவை யல்ல என்பதை நாம் நன்கு அறிந்தோம்.] என்று இதையே அறுதியிட்டார். "அளப்பரியவை" என்று அளத்தற்கரியவனாயிருக்கிறாய் என்றே திருமாலை வர்ணிக்கிறார். புறநானூற்றிலும் (57)
"வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற" என்று இவ்வுலகில் எவராலும் அளவிடமுடியாத புகழை உடைய பாண்டியனுக்குத் திருமாலை உவமையாகக் காட்டியிருப்பதும் இதை வலியுறுத்துகிறது. இதுபோல் அளத்தற்கரிய புகழுடையவனாக வேறு எந்த தேவனாவது சங்ககாலச் சான்றோர்களால் பாடப்பட்டிருக்கிறானா?.

(16)மூன்றாம் பரிபாடலில்
"ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து நாலு எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்" என்று முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமாலை விரும்பிப் பாடுவார்கள் என்று கூறுவதன்மூலம் அவனே தேவாதிதேவன் என்று கடுவன் இளவெயினனார் அறுதியிட்டார்.
"அமரர்க்கு முதல்வன் நீ" என்று பாடுவதன் மூலமும் இதை வலியுறுத்தினார். "உலகாள் மன்னவ !" என்று விளிப்பதன் மூலமும் இதை விளக்கினார். நாலாம் பரிபாடலில் "நின்னில் சிறந்த நிறை கடவுளவை"
[திருமாலாகிற உன்னிடத்தில் சிறந்ததும், நிறைந்ததுமான கடவுள்தன்மை உளது] என்று தேவாதிதேவன் திருமாலே என்று காட்டப்பட்டது. இப்படி தேவாதிதேவனாக வேறு எந்த தேவனாவது சங்கநூலில் காட்டப்பட்டிருக்கிறானா?.