Sunday, July 29, 2018

சங்ககாலச் சமயம் வைணவமே!

||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||

சங்ககாலத்தில் சிவனைப் பரம்பொருளாகக் கூறும் சைவமும், சக்தியைப் பரம்பொருளாகக் கூறும் சாக்ததமும், எந்த மதமும் இருந்ததில்லை. திருமாலை பரம்பொருளாக் கூறும் வைணவ மதம் ஒன்றேயிருந்தது என்பதையும் அசைக்க முடியாத படி நிலைநாட்டவே இந்த பதிவு!

சங்ககாலத்திலே சிவன், முருகன், இந்திரன், வருணன்
முதலான மற்ற தெய்வங்களுக்கு மிகுதியான பாடல்கள் இருந்தாலும் அப்பாடல்களில் பரம்பொருளுக்குரிய பெருமைகள் எதுவுமே பாடப்படவில்லை. திருமால்பற்றிய பாடல்களிலேயே பரம்பொருளுக்குரிய அத்தனை பெருமைகளும் காணக்கிடக்கின்றன. இதிலிருந்து சங்ககாலத்திலிருந்த அனைவருமே திருமாலை வேதம் புகழும் பரம்பொருளாகக் கொண்டிருந்தனர் என்றும், மோட்சத்தை விரும்பியவர்கள் அவனையே அடைந்து அதைப் பெற்றுப் போந்தனர் என்றும், மற்ற பயன்களை எளிதில் பெறவிரும்பியவர்கள் மற்ற தெய்வங்களையும் வழிபட்டனர் என்றும் விளங்குகிறது.

மேலும்; அக்காலத்தில் வைஷ்ணவமதம் ஒன்றே வைதிக மதமாகச் சான்றோர்களால் கொள்ளப்பட்டது என்னும் நிலையையே இது காட்டுகிறது.

(1) உலகைப் படைத்தளித்து
அழிக்கும் பெருமை.
(2) எல்லாம் அறியும் பெருமை.
(3) எல்லாம் வல்லவனாய் இருக்கை.
(4) எங்கும் வியாபித்திருக்கை.
(5) தன்னை அண்டியவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமற்செய்து வீட்டுலகத்தை அளிக்கவல்லவனாயிருக்கை.
(6) நற்குணங்கள் அனைத்திற்கும் கொள்கலமாகவும், தாழ்ந்த தன்மைகள் எதுவுமே இல்லாதவனாகவும் இருக்கை.
(7) எவராலும் அளவிட்டு அறியமுடியாதவனாயிருக்கை.
(8) மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவனாயிருக்கை.
(9) உயிர்களுக்கெல்லாம் இயற்கை உறவினனாயிருக்கை. (10) முற்கூறிய ஒன்பது பெருமைகளும் இவனுக்கே உள்ளதாக வேதத்தால் சொல்லப்படுகிறவனாயிருக்கை - என்னும் பரம்பொருளுக்கேயுள்ள பத்து தனித் தன்மைகள் திருமால் ஒருவனுக்கே பரிபாடல் முதலான சங்கநூல்களில் சங்ககாலச் சான்றோர்களால் முழங்கப்பட்டுள்ளன என்றும், சிவன், கொற்றவை, முருகன், இந்திரன், வருணன் முதலான எந்த தெய்வத்திற்கும் இத்தன்மைகள் உள்ளதாகக் கூறப்படவில்லை.

முதலில் சர்வ சக்தன் திருமால் ஒருவனே! என முழங்கும் சங்ககால பாடல்கள் சிலவற்றை  பார்ப்போம்!

பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட பின்வரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்:

“மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”

(வளைநரல் = சங்கொலி, பௌவம் = கடல், உடுக்கை = ஆடை, திகிரி = சக்கரம்).

[இப்பாடலில், உலகத்திற்குக் காரணப்பொருளாகிப் பிரபஞ்சமாய் நிற்கும் பரப்பிரம்மமாக, வேதமுதற் பொருளாக, சக்கரப் படையை ஏந்திய மாயோன் விளங்கி நிற்பதாக பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். ஆகையால், பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண்சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும், ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும், கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும் உருவகப்படுத்துகிறார் பெருந்தேவனார்.]

பரிபாடலைக் காண்போம்!

முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே" [பரிபாடல் 3 - 71,72]

[ திருமால் எடுக்கும் பலவகைப்பட்ட அவதாரங்கள் அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கே என்றும், அவன் தானே தன்விருப்பத்தால் பிறக்கிறானேயொழிய அவனைப் பிறப்பித்தவர்கள் எவரும் இலர் என்றும் முழங்கிற்று.]

"நின் ஏவலுள் பணிந்தமை கூறும் நா வல் அந்தணர் அருமறைப் பொருளே" [பரிபாடல் 1-12,13]

[நாவன்மையுடைய அந்தணர் ஓதும் அருமறைப்பொருள் உலகனைத்தும் உனக்கு வசப்பட்டிருப்பதைக் கூறும்]

"சாயல் நினது வான் நிறை என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே!" [பரிபாடல் 2-56,57]

[நினது நிறமும் அருளும் நீர் நிறைந்த மேகத்தையொக்கும் என்று நாவன்மையுடைய அந்தணர் ஓதும் அருமறைப்பொருள் கூறும்].

"மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய் மொழி உரைதர" [பரிபாடல்3-10,11]

[மாயப்பிரானே! உலகம் முழுவதும் உன்னிடமிருந்தே உண்டாயிற்று என்பதை அழியாத வேதம் ஓதுவதைக்கொண்டு நாம் சொன்னோம்]

"மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே" [பரிபாடல் 3 - 2,3]

[மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே] 

"மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின் வயின் பரந்தலைய உரைத்தேம். மாயா வாய்மொழி உரை தர" [பரிபாடல் 3 - 9,10,11] 

[மாயோனே! எல்லா உலகங்களும், உலகினில் உள்ள ஜீவர்கள் அனைவரும் உன்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அழியாத வேதம் சொல்ல நாங்கள் உரைத்தோம்.]

"தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியு மால் அந்தணர் அருமறை" [பரிபாடல்3-13,14]

[தாமரைப் பூவில் பிறந்த பிரமனும் அவனது தந்தையும் திருமாலாகிய நீயே என்று அந்தணர் ஓதும் அருமறை முழங்குகின்றது.]

"பாப்பு பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவலின் முதுமொழி கூறும்"
                    [பரிபாடல் 13-38,39,40]

[பாம்புக்கு பகையான கருடனைக் கொடியாக் கொண்ட அழியாத செல்வமுடைய திருமாலை எவராலும் இயற்றப்படாத முதுமொழியான வேதம் பரம்பொருளாகக் கூறும்.]

"விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் (பரி..40)
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; (பரி..45)
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், (பரி..50)
நிலனும், நீடிய இமயமும், நீ."

[பெருமை பொருந்திய  அந்தணர்களால் காக்கப்படும் அறம் நீ.

அன்பர்களுக்கு அன்பும் நீயாவாய்.

நல்ல நெறியில் நில்லாதவர்களைத் திருத்தி ஆட்கொள்ளும் மறக்கருணையும்  நீ யாவாய்,பகைவர்களுக்குச் செய்யும் துன்பமும் நீ.வானில் திகழும் சந்திர சூரியர்களும் நீயேயாவாய்.ஐந்து திருமுடிகளை யுடைய  ஈசனும், அவன் புரியும் ஸம்ஹாரமும் நீ.வேதமும், ப்ரம்மனும் அவன் செய்யும் படைத்தல் தொழிலும் நீ.ஆகாயமும், பூமியும், நெடிதுயர்ந்த இமய மலையும் நீயே.]

"அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய (பரி..55)
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!"

[இவ்வாறு பல பொருள்களாக நீயே இருக்கிறாய். ஆதலினாலே, நீ இப்படி இருக்கிறாய், இன்னாரை ஒத்திருக்கிறாய்  என்று உவமித்துச் சொல்லத் தகுதியுள்ளவர்கள் யாரும் இல்லை.பொன்னால் ஆன  சக்கரப்படையை  வலக்கையில் ஏந்திய நீ எல்லா உயிர்களுக்கும் முதல்வனாக இருக்கிறாய். பெரும் புகழ் படைத்த நீயே  உனக்கு நிகராகும்.]

"இரு கை மாஅல்! முக் கை முனிவ! நாற் கை அண்ணல்! ஐங் கைம் மைந்த! அறு கை நெடுவேள்! எழு கையான! எண் கை ஏந்தல்! ஒன்பதிற்றுத் தடக்கை மன் பேராள! பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை"(பரிபாடல் 3)

"ஒருசார் -அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித் திறத்தில் திரிவில்லா அந்தணர் ஈண்டி அறத்தில் திரியா பதி" (பரிபாடல்திரட்டு முதல் பாடல் 18,21)
[திருமால் திருப்பதியான அந்த இருந்தையூரில் ஒருபுறம்-அறம், வேதமோதுதல், தவம்புரிதல் ஆகியவற்றில் நிறைவுபெற்று, மிக்க புகழோடு, விளங்கிய கேள்வித்திறமுடைய குற்றமில்லாத அந்தணர் ஒன்றுசேர்ந்து வேதநெறியில் வழுவாது வாழுமிடம் உள்ளது.]

இதுபோல் எல்லாம் வல்ல சர்வசக்தியுடையதாக வேறொரு தெய்வத்தை பாடியிருக்கிறார்களா?
மேலும்.; 
"மா அயோயே! மாஅயோயே.! மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!" என்றும் உயிர்களின் மறுபிறப்பை அறுக்கும் குற்றமற்ற திருவடிகளையுடைய அப்ராக்குதத் திருமேனியை உடையவன் திருமாலே என்றும் சங்ககாலச் சான்றோர்களான கடுவன்இளவெயினனார், கீரந்தையார்,நல்லெழுநியார், இளம்பெருவழுதியார் முதலான பெரியவர்கள் பாடியிருக்கிறார்கள்.
, "நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்" [பரிபாடல் 15 - 15,16] [மணம்மிக்க துழாய் மாலையை அணிந்த திருமால் அளித்தாலல்லது எவராலும் வீட்டுலகத்திற்கு ஏறமுடியாது] என்றும் திருமாலே மோட்சமளிக்கவல்லவன் என முழங்கப்பெற்றது. இவற்றிலிருந்தும், சங்ககாலத் தமிழர் சமயம் வைணவமே சங்ககாலத்தில் அனைவரும் விஷ்ணுவையே பரம்பொருளாகக்கொண்ட வைஷ்ணவர்களாகவே விளங்கினர் என்றும், சிவன், சக்தி, முருகன் முதலான மற்ற எந்த தெய்வத்தையும் எவருமே பரம்பொருளாகக் கொள்ளவில்லையென்றும் கையிலங்கு நெல்லிக்கனியாகவும், வெள்ளிடை மலையாகவும் விளங்குகிறது. வேதத்தின் பரம்பொருளாகச் சொல்லப்பட்ட திருமாலை வேதத்தை ஓதும் அந்தணர்களே.! இராண்டாயிரம் வருடத்துக்கு மேலாக ஆலயங்களில் வேதத்தைக்கொண்டு வழிபாடு செய்து வந்தனர் என்று விளங்குகிறது. 

மேலும், சங்ககாலத்தில் வைணவம் நிலைத்து நின்று என்பதற்கு தொல்காப்பியத்தில் சான்று.;

"நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய
"
[தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71]

என்று சொல்லியிருப்பதிலிருந்து பூணூலையும், முக்கோலாகிற திரிதண்டத்தையும் தரித்த பெரியவர்களே அந்தக்காலத்தில் சந்நியாசிகளாகக் கருதப்பட்டனர் என விளங்குகிறது. பூணூலும், முக்கோலுமில்லாத சைவசந்நியாசிகளும், அத்வைத சந்நியாசிகளும் அக்காலத்தில் தோன்றவில்லையென்றோ, சான்றோர்களால் சந்நியாசிகளாகக் கருதப்படவில்லையென்றோ விளங்குகிறது. மற்ற சங்க இலக்கியங்களிலும்'முக்கோற்பகவர்' என்று இவர்களை பாகவத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக எடுக்கையால் இவர்கள் பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்கள் எனத்தேறுகிறது. இவ்வண்ணமாக, சங்ககாலத்தில் விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட வைஷ்ணவ மதம் ஒன்றே வைதிகமதமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. 
(தொடரும்..)

(ஆதார மேற்கோள் "ஸுதர்சனர் பதில்கள்")

No comments:

Post a Comment