Thursday, September 13, 2018

ஆலாகல விஷபானம் பண்ணினபடியால் சிவனுக்குப் பரத்துவம் உண்டு என்பதற்கு மறுப்பு.

||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||

ஆலாகல விஷபானம் பண்ணினபடியால் சிவனுக்குப் பரத்துவம் உண்டு என்பதற்கு மறுப்பு.

பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் கருணையினாலே சிவபிரான் ஆலாகல விஷம் உண்டார் என்பதை ஸ்வாமி திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய "பரப்பிரம்ம விவேகத்திலுள்ள கட்டுரை மூலம் காண்போம்.

ஐயங்காரிடம் சிவாகமவாதியார் கேட்டார். திருப்பாற்கடலை மந்தரமலையால் கடையும் காலத்தில் தேவர்களெல்லாம் வெகுண்டு திசைகள் தோறும் ஓட, பொங்கி எழுந்த ஆலகால விஷத்தை எங்கள் நீலகண்டப்பெருமானார் பானம் பண்ணியபோது திருமால் எங்கிருந்தார்? என்றனர்.

ஐயங்காரும்,

"அண்டமுண்ட போதுகட லாலமுமா லத்தையுண்ட கண்டனையுங் கூடவுண்ட காரணனை---மண்டுநஞ்சுக் கஞ்சினதா கப்பகர்வீ ராகமத்தை நம்பிநம்பி வஞ்சநர கில்விழுவீர் மாண்டு."

"மலைமடந்தை தன்கழுத்தின் மங்கலநாண் ஏதோ அலைகடைந்த நாளுதித்த ஆலம்---கலைகடைந்த நக்கனாம் பாத்திரத்தால் நாரணனா ருள்ளமுகந் தக்கணத் துண்ணா விடின்."

என்ற இரு பாடல்களைக்கூறி அவர்கள் கூற்றினை மறுத்தார்.
இனி இப்பாடல்களின் கருத்தாவன;

'அண்டமுண்ட.........மாண்டு' சைவாகமத்தை நம்பி வஞ்சிக்ப்பட்டு நரகத்தில் விழுந்து உழன்று மாயும் ஆகமவாதியர்களே! உலகங்களனைத்தையும் உண்டபோது; கடலில் பொங்கி எழுந்த விஷத்தையும், அந் நஞ்சை உண்ட கண்டனையும் ஒருசேர உண்ட மூலகாரணனாகிய திருமால் ஆலத்தைக்கண்டு அஞ்சியதாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? என்பது கருத்து.

'மலைமடந்தை......விடின்' அலைவீசும் கடலைக் கடைந்த அன்று அக்கடலில் உண்டாக்கிய விடத்தைத் திகங்பரனாகிய பாத்திரத்தால் நாராயணன் உள்ளமுவந்து அந்த நொடிப் பொழுதிலே உண்ணவில்லையாகில் மலையரையன் மடப்பாவையாகி பார்வதி தேவியின் கழுத்திலே விளங்கும் மங்கள சூத்திரம் என்னும் தாலிக்கயிறு எவ்வாறு நிலைத்திருக்க முடியும்? என்பது கருத்து.

இனி இதன் சான்றுகள்:

"மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி வானவரும் யாமுமெல்லாம் நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங்காலம்  கிடந்த தோரீர் எந்நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வததை யேத்து கின்றீர் செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்கா ளண்டனையே யேத்தீர்களே."[பெரியதிரு..11-6-1]

"நில்லாத பெருவவெள்ளம் நெடுவிசும்பின்மீதோடி நிமிர்ந்தகாலம் மல்லாண்ட தடக்கையாற் பகிரண்டமகப்படுத்த காலத்து அன்று எல்லாருமறியாரோ? எம்பெருமானுண்டுமிழ்ந்த வெச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே? அவனருளே யுலகாவ தறியீர்களே."[பெரியதிரு...11-6-2]

"நெற்றிமேற்கண்ணானும் நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய் ஒற்றைக்கைவெண்பகட்டி னொருவனையுமுள்ளிட்ட வமரரோடும் வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி யுய்யக்கொண்ட கொற்றப்போராழியான் குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியவாறே."[பெரியதிரு..11-6-3]

"ஊழிக்காலத்தின் இறுதியில் உலகமெல்லாம் பெருவெள்ளத்தினால் அழியும்போது உலகங்களையும் உகத்திலுள்ள உயிர்களையும் உண்டு, தம் திருவயிற்றிலடக்கிக் காத்தவன் திருமாலன்றோ? மிகப்பெரிய ஆபத்திலிருந்து காத்தருளின பேருதவியை மறந்து ஓர் உதவியும் செய்யாத பிற தெய்வத்தைத் துதிப்பவர்களே! எம்பெருமான் செய்த நன்றியை மறவாதீர்கள்.

தேவர்கள் எல்லோரும் திருமால் உண்டு உமிழ்ந்த எச்சில். இதை யாவரும் அறியார்களோ? நெற்றிக்கண்ணனும், நான்முகனும், இந்திரன் உள்ளிட்ட அனைவரும் பிரளயப் பெருங்கடலிற் சேராவண்ணம்காத்து அருள்செய்தவன் திருமாலேயாவான்" என்று தெளிவாக கூறும் திருமங்கையாழ் வார் பாசுரங்களை காண்க. இங்கு சான்றாக மூன்று பாசுரங்கள் மட்டுமே காட்டப்பட்டன. பெரியதிரு மொழி பதினோராம்பத்து ஆறாம் திருப்பதிகம் முழுவதுமே, திருமால் அண்டமுண்டபோது ஆலமுண்ட கண்டனையும் ஒரு சேர உண்டதற் குச் சான்றாகும். மேலும் உலகமுண்ட வரலாற்றினை,

"அறுபொருள் இவனென்றே அமரர்கணம் தொழுதேத்த உறுபசிஒன் றின்றியே உலகடைய உண்டனையே"
[சிலம்பு: ஆச்சியார்குரவை2887,8]
எனச் சிலப்பதிகாரம் முழங்கும்.

"அண்டமெலா முண்டையென்ப ரறாயாதா ராங்கவை நீ உண்டருளுங் காலத்தி லொருதுற்றுக் காற்றாவால்"
[திருவரங்கா கலம்பகம்]

"அடலவுணன் பாற்குறுகி யற்பநிலங் கையேற்றாய் கடலகிலம் யாவுமுந்தி காட்டுவது கண்டிலையோ?"
[அழகர் கலம்பகம்]

"அலகில்பகி ரண்டமெலா மகன்றவயிற் றடக்குமுனை இலகுவடச் சிறுதளிரொன் றெந்தவிதந் தாங்கியதே?"
[திருவேங்கடக் கலம்பகம்]

மற்றும் பிற தமிழிலக்கியச் சான்றுகளை "அங்கண் ஞாலமுண்ட போது" என்ற இடத்தில் [பக்கம் 22] கண்டுகொள்க. நக்கனாம் பாத்திரத்தால் நாரணனார் விடமுண்டதற்கு மேற்கோள்;

அண்டரும் அசுரரும் மந்தரமலையை மத்தாகவும் அரவாகிய வாசுகியை நாணாகவும் கொண்டு பாற்கடலை கடைந்த காலத்தில், வாசுகியின் வாயினின்றும் வெளிவந்த விஷததைத் திருமால் உண்டான் என்பதை;

"அக்கடு வினையுங் காரத் தாலடக் கியபின் னத்தை செக்கர்வே ணியனென் கையிற் சேர்த்திடா யென்னச் சேர்த்திட்டக்கணத் துண்ணென் றோத வரனயர்ந் திடக்கண் டன்னோ னற்கர பாத்தி ரத்தா னாரணன் நுகர்ந்திட் டானே."[கூரேச விஜயம்]

எனக் கூரேச விஜயம் கூறுவது கொள்க. மேலும் இதன் உரைத் தொகுப்பும் காண்க:-

"ஸ்ரீபிரஹலாதாழ்வானை இரணியகசிபுவானவன் வாசுகி முதலான அஷ்ட மஹா நாகங்களைப் பிரேரேபித்துக் கடிக்கவிடும்போது, அந்த விஷங்களை எல்லாம் அவர் அமிர்தம்போல் அமுது செய்து விட்டார்."

"பூதனையினுடைய ஸ்தன்யத்தில் கலந்திருக்கும் விஷத்தை சிசுத்வத்தையுடைய கண்ணன் அமுதுசெய்ததாய்ப் பாகவதத்தில் சொல்லியிருக்கிறது."

"திருப்பாற்கடல் கடையும்போது வாசுகியின் வாயில் பிறந்த விஷத்தை தேவர்கள் கண்டு சகிக்கமாட்டாமல் பயந்து அருகிருந்த உபேந்திராவதாரமாகிய பகவானிடம் முறையிடாமல், காகுத்தன், கட்டுவாங்கதன், முசுகுந்தன், தசரதன், அருச்சுனன் இவர்களிடத்தில் முறையிட்டுக் கொண்டதுபோல, கைலாசத்தி லிருந்த சிவனிடத்தில் விஷத்தை பானம்செய்து, தங்களை இரட்சிக்க வேண்டுமென்று முறையிட்டார்கள். அதைக் கேட்ட சிவன் அப்படியே இரட்சிக்கிறேனென்று அபயப்பிர தானம்பண்ணி, சமுத்திரம் போலே பெருகிவருகிற விஷத்தைக் கண்டு ஒரு ஹுங்காரம் பண்ணினார். அத்தால் அந்த விஷமானது தடைபடாமல் மேன்மேலும் பெருகி வருகிறபடியைக் கண்டு.  ஸ்வேதத்தீபத்தில் ஸ்வேதரூபியா யிருக்கும் ஸ்ரீமகாவிஷ்ணுவைத் தியானித்தார். அந்த பகவான் பிரத்தியட்சமாகி என்னவேண்டு மென்று கேட்க, விஷத்தை பானம் பண்ணி இரட்சிக்கிறேனென்று தேவர்களுக்கு வரங்கொடுத்தேன், அந்த விஷமானது என் ஹுங்காரத்தால் தடைப்படாமல் வருகையால், அந்த விஷத்தைத் தேவரீர் பானம்பண்ணி எங்களை இரட்சிக்க வேண்டுமென்று சிவன் பிரார்த்திக்க, அப்போது பகவானான விஷ்ணு இப்போது ஹுங்காரம் பண்ணுமென்று நியமிக்க, சிவன் மறுபடியும் ஹுங்காரம் பண்ணினதில், அந்த விஷமானது பர்வபதம்போல் திரண்டு வந்தது. அதைக் கையிலேந்திக் கொள்ளுமென, ஏந்திக்கொண்ட சிவனைப் பார்த்து பானம் செய்யுமென்று விஷ்ணு நியமிக்க, சிவன் இவ்வளவு நான் புஜிக்கமாட்டேனென்று சொல்ல, பின்பு ருக்வேதத்தில்["கேஸீ விஷஸ்ய பாத்ரேண யத்ருத்ரேணாபிபத்ஸஹ"(அஷ்டக 8-7-24) எனக்] கூறியதுபோல, உருத்திரனாகிற பாத்திரனால் அவன் கையிலிருந்த விஷத்தை மயிரழகாலே கேசியென்ற பெயரையுடைய விஷ்ணுவானவர் பானம் பண்ணினார்."

"சேஷித்த விஷத்தை (பகவான் தான் அமுதுசெய்து மிச்சமான விஷத்தை)ப் பானம் பண்ணுமென்று சிவனுக்கு நியமிக்க; அதுவும் தான் நேரே பானம் பண்ணமாட்டேனென்று, 'அச்சுத அநந்த கோவிந்த' என்கிற நாமத்திரய மஹாமந்திரத்தைப் பிரணவ நம: பதங்களுடனே உச்சரித்து புஜித்தாரென்ற கதை, பாத்மோத்தரத்தில், முப்பத்தேழாவது அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறது." என்பது கொள்க.

என்று ஐயங்கார் பதிலளித்தார்.

"சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்"

No comments:

Post a Comment