||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||
"சர்வம் விஷ்ணு மயம் ஜகத்"
சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இடையிலான அபிப்பிராய பேதங்களும் சண்டை சச்சரவுகளும் தமிழகத்தில் மட்டுமின்றி பாரத தேசம் முழுவதும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சைவர்கள் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றும், வைஷ்ணவர்கள் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும் கூறி, சிவனையும் விஷ்ணுவையும் வெவ்வேறு துருவங்களாக வழிபடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில், "ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில மண்ணு" என்று கூறி, இருவரையும் சமாதானப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அது மட்டுமல்லாது பெரியர் வாக்கும் அதுதானே என்று கூறுகிறார்கள்.
இதற்கு மறுப்பினை கூறி இந்த கூற்றை மறுப்போம்!
“இந்த காலத்தில் ஏன் இந்த வேண்டாதவேலை? இந்த சைவ,வைஷ்ணவ சண்டையெல்லாம் எதுக்கு ? என முகம் சுளித்து நமக்கு அறிவுரை கூறுபவர்கள் எரிச்சல்படலாம்.
அதற்காக உண்மைகளை தெளிவூட்டாமல் இருக்க இயலாது உண்மையை அறிவதே சிறந்தது.
புராணங்களை தத்துவபூர்வமாக அணுகாமல் மேலோட்டமாக அணுகுவோர், சிவபெருமான் விஷ்ணுவைக் காட்டிலும் உயர்ந்தவர், விஷ்ணு சிவபெருமானைக் காட்டிலும் உயர்ந்தவர், அல்லது சிவபெருமான், விஷ்ணு ஆகிய இருவரும் ஒருவரே போன்ற முடிவுகளில் எந்த முடிவிற்கு வேண்டுமானாலும் வர இயலும். எனவே, சிவபெருமானின் நிலையை தத்துவபூர்வமாக அறிய முயற்சி செய்யலாம்.
சிவபெருமானுக்கும் பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கும் அனேகமான வேறுபாடுகள் உள்ளன என்பதையும், சிவன் விஷ்ணுவால் படைக்கப்பட்டவர் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் சேவகரே என்பதை வேதப் பிரமாணங்களையும், சாத்வீக புராணங்களையும், மேலும் சில சாஸ்த்திரங்களை வைத்து அறியலாம். இப்படி இருக்கையில் எப்படி சிவன் பகவான் ஸ்ரீஹரிக்கு இனையாக இயலும் இது கண்டிக்கத்தக்கது.
சொல்லப்போனால்"ஹரியும் சிவனும் ஒன்று என்று சொல்ரவன் வாயில் மண்ணு" என்பதுதான் பொருந்தமான வாக்கியம்.
மேலும்;..
சிவபெருமான் உட்பட அனைத்து தேவர்களும் பிரபஞ்சத்தைப் பராமரிப்பதற்காக தன்னால் படைக்கப்பட்டவர்களே என்று மஹாபாரதத்தின் மோக்ஷ-தர்மத்தில் கிருஷ்ணர் கூறுகிறார்.
விஷ்ணு-தர்ம-புராணம் பின்வருமாறு கூறுகின்றது:
ப்ரஹ்மா ஷம்புஸ் ததைவார்கஷ் சந்த்ரமாஷ் ச ஷதக்ரது:
ஏவம் ஆத்யாஸ் ததைவான்யே யுக்தா வைஷ்ணவ-தேஜஸா
“பிரம்மா, சிவன், சூரியன், சந்திரன், இந்திரன் உட்பட எல்லா தேவர்களுக்கும் அப்பதவிகள் மற்றும் அதற்குரிய சக்திகளை வழங்கியவர் பகவான் விஷ்ணுவே. அவர்கள் அனைவரும் விஷ்ணுவின் சேவகர்களே.”
இதற்கு இனையாக;
படைப்பிற்கு முன்பு சிவபெருமானும் கிடையாது, பிரம்மாவும் கிடையாது–வாஸுதேவரும் அவரது வைகுண்ட லோகமும் மட்டுமே இருந்தது என்பதை மஹா-நாராயண உபநிஷத் பின்வருமாறு உறுதி செய்கிறது: வாஸுதேவோ வா இதம் அக்ர ஆஸீன் ந ப்ரஹ்ம ந ச ஷங்கர:.
மேலும், சிவபெருமான் விஷ்ணுவின் மாயா சக்தியால் மயங்கியவர் என்பதை பின்வருவனவற்றில் காண்க.
விஷ்ணுவின் மாயா சக்தியால் மயங்கக்கூடியவர்
பகவான் விஷ்ணு மாயையின் எஜமானர், மற்றவர்கள் அனைவரும் அந்த சக்தியினால் மயங்கக்கூடியவர்கள். சிவபெருமானும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த பின்னர், தேவர்களுக்கு அமிர்தம் வழங்கும் பொருட்டு தோன்றிய பகவானின் மோஹினி அவதாரத்தின் அழகிய ரூபத்தைக் காண்பதற்காக சிவபெருமான், தனது மனைவி, நந்தி மற்றும் சகாக்களுடன் விஷ்ணுவை அணுகி மன்றாடினர். மோஹினி அவதாரத்தை மீண்டும் காண்பிப்பதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என்றும், ஆனால் தாங்கள் நிச்சயம் மயங்கிவிடுவீர்கள் என்றும் சிவபெருமானிடம் பகவான் விஷ்ணு எச்சரித்தார். இருப்பினும், சிவபெருமானது ஆவலினால் பகவான் மீண்டும் தனது மோஹினி ரூபத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது அங்கே நறுமண காற்று வீச, மோஹினி தேவி தன் கையில் பந்தை வைத்து விளையாடியபோது, அவளது கூந்தல் அவிழ்ந்தது. அவளது அழகில் மயங்கிய சிவபெருமான் தன்னிலையை மறந்து, மோஹினியை தழுவிக்கொள்ள முனைந்தார். அவரது பிடியில் சிக்காமல் ஓடி விளையாடிய மோஹினியை சிவபெருமான் அயராது பின்தொடர்ந்தார். காமத்தினால் கிளர்ச்சியூட்டப்பட்டு, மோஹினியின் பின்னால் ஓடிய சிவபெருமானது செயலைப் பார்த்து, அவரது சகாக்களும் மனைவியும் நெளிந்து கொண்டிருந்தனர்.
பகவானது மாயா சக்தியினால் தான் மயக்கப்பட்டதை விந்து வெளியான பின்னர் சிவபெருமான் உணர்ந்தார். சாக்ஷாத் மாயா தேவியான பார்வதியின் கணவர் என்பதால், சிவபெருமானை எந்தவொரு சாதாரண பெண்ணாலும் மயக்க முடியாது. அவர் விஷ்ணுவின் அந்தரங்க மாயை, அதாவது ஆன்மீக மாயையினால் மயக்கப்பட்டார்; பகவான் விஷ்ணுவோ, பௌதிக மாயை, அந்தரங்க மாயை ஆகிய இரண்டு மாயைக்கும் எஜமானராகத் திகழ்கிறார்.
இதனை தெளிவாக அறிந்துள்ள சிவபெருமான் மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பின்னர் தனது மனைவியிடம் பின்வருமாறு கூறினார்:
“தேவி, எல்லோருக்கும் எஜமானரான முழுமுதற் கடவுளின் மாயையை நீ தற்போது கண்டாய். நான் அவரது முக்கிய விரிவங்கங்களில் ஒருவன் என்றபோதிலும், நானும் அவரது சக்தியினால் மயக்கப்படுகிறேன். அவ்வாறு இருக்கும்பட்சத்தில், மாயையை முழுமையாக சார்ந்திருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது?” (ஸ்ரீமத் பாகவதம் 8.12.43)
மேலும், தனது செயலினால் வெட்கப்பட என்ன இருக்கின்றது என்றும், தான் தனது எஜமானரைப் பார்த்துதானே மயங்கியதாகவும் அவர் உணர்ந்தார். இது சிவபெருமானின் சேவக மனப்பான்மையையும், விஷ்ணுவின் உயர்நிலையையும் தெளிவுபடுத்துகிறது.
மற்றும் முக்தியளிப்பவன் பகவான் முகுந்தன் ஒருவனே சிவனால் இயலாததாகும். காசியில் முக்திக்கான காரணம்;
ஒருவர் காசியில் மரணத்தைத் தழுவுவதற்கு சற்று முன்பு, அவரது காதுகளில், சிவபெருமான் "ராம" நாமத்தை ஓதுகிறார். அந்த இராம நாமமே ஒருவருக்கு முக்தியைக் கொடுக்கின்றது.
(பார்க்க, பத்ம புராணம், பாதாள காண்டம், மதுரா-மஹாத்மியம்), இதில் சிவனின் தனிச் சக்தி இல்லை என்பது புலனாகும்.
இதனை சிவபெருமானே ஒப்புக் கொள்கிறார்: முக்தி-ப்ரதாதா ஸர்வேஷாம் விஷ்ணுர் ஏவ ந ஸம்ஷய:, “விஷ்ணுவைத் தவிர வேறு யாராலும் முக்தியளிக்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”.
மற்றும், பகவான் ஸ்ரீஹரியின் பக்தர் சிவபிரான் என்பதையும் காணலாம்;
வழிபாட்டு முறைகளில் சிறந்தது எது என்ற தனது மனைவியின் கேள்விக்கு சிவபெருமான் பின்வரும் பதிலை பத்ம புராணத்தில் வழங்குகிறார்:ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம்,“எல்லாவித ஆராதனைகளிலும் சிறந்தது பகவான் விஷ்ணுவை வழிபடுவதே.” மேலும், சாஸ்திரங்களில் பல்வேறு இடங்களில் சிவபெருமான் விஷ்ணுவை வழிபடுவதை நாம் காண்கிறோம்.
சிவபெருமான் எப்போதும் தியானத்தில் இருக்கின்றார். அவரே முழுமுதற் கடவுள் என்றால், அவர் ஏன் தியானத்தில் இருக்க வேண்டும்? இதை பெரும்பாலான மக்கள் யோசிப்பதில்லை. முழுமுதற் கடவுளான விஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தரான சிவபெருமான் தனது எஜமானரை எண்ணி எப்போதும் தியானத்தில் இருக்கின்றார் என்பதே உண்மை. தனது இருப்பிற்கு மூல காரணமான ஸங்கர்ஷணரை (விஷ்ணுவை) தான் எப்போதும் தியானிப்பதாக சிவபெருமானே ஸ்ரீமத் பாகவதத்தில் (5.17.16) கூறியுள்ளார்.
மேலும்,
தான் எப்போதும் ராம நாமத்தை உச்சரித்து அதில் இன்பம் காண்பதாக சிவபெருமான் தனது மனைவியிடம் கூறுகிறார்:
ராம ராமேதி ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர-நாமபிஸ் துல்யம் ராம-நாம வரானனே
“தேவி! நான் ராம, ராம, ராம என்று திருநாமங்களை உச்சரித்து அந்த அழகிய ஒலியினால் இன்பமடைகிறேன். இராமரின் இந்த திருநாமம் பகவான் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு சமமானதாகும்.” (பத்ம புராணம், உத்தர-காண்டம், பிருஹத்-விஷ்ணு-ஸஹஸ்ர-நாம-ஸ்தோத்ரம் 72.335).
இப்படியிருக்கையில் சிவன் எப்படி பகவான் ஸ்ரீ விஷ்ணுவுக்கு இனையாக முடியும் தானே பல இடங்களில் தான் வழிபடும் தேவனே ஸ்ரீமந் நாராயணன் என்கிறார்.
மேலும்;...
கொஞ்சம் விஷயம் அறிந்தவர்கள் என்று நாம் நினைப்பவர்களோ,ஆழ்வார்கள் கூட ஹரி சிவன் இடையே பேதம் பார்க்கவில்லை,ராமானுஜர் வந்தபிறகுதான் இந்த பேதமெல்லாம் வந்தது என்பார்கள்.
இவர்கள் சொல்வது போன்று ஹரியும் சிவனும் ஒன்று என்றுதான் ஆழ்வார்கள் சொன்னார்களா? என்பதையும் பார்ப்பது அறிவுடைமை.
“உண்மையை அறிவதே அறிவு” என்பதால் தொடர்வோம்...
“ஆழ்வாரே இதையெல்லாம் ஆராய்சி செய்” என சொல்லுகிறாரே? அப்புறம் எப்படி நாம் சும்மாயிருப்பது...
“ஆழ்வார் சொன்னாரா? கனவிலா நேரிலா? கற்பனாயா? கப்சாவா?” என்று கேட்பது புரிகிறது..
இதோ அவரது வாக்கினையே ,நம்மாழ்வாரின் திருவாய்மொழியையே தருகிறேன்...
“உணர்ந்த்துணர்ந்து இழிந்தகன்று உயர்ந்துருவியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலை யுணர்வரிது உயிர்காள்!
உணர்ந்துணர்துரைத்துதுரைத்து அரியயனரநென்னுமிவரை
உணர்ந்த்துணர்ந்துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றோ”
[திருவாய்மொழி:1-3-6]
'ஜீவர்களே! அறிவையுடையவாகி அங்கங்கு அனுபவங்களைப் பெற்று,அதற்காக கீழும் ,குறுக்கும், மேலும்,பரவி உண்மையில் அணுவாய் தேகத்தினின்றும் வேறான, இந்த உங்கள் ஆத்மாவின் நிலையை சாஸ்தரங்களிலிருந்து கேட்டு,அவ்வாறே மனனமும் செய்து நேரடியாக அறியலாம் என்றாலும், ஈஸ்வர தத்துவத்தின் முடிவு என்பது எளிதில் பெறப்படமாட்டாது.
ஆகையால்,
வசனங்களின் பிரபல , துர்பல நிலைகளையறிந்து அவற்றின் கருத்தினை கேட்டு, விஷ்ணு,பிரம்மன் , ருத்ரன், எனப்பட்ட மும்மூர்த்திகளை மென்மேலும் வாதமும் பிரவசனமும் பகுத்தறிவுடன் நிரூபித்து, காய்தல் உவத்தலின்றி (பக்ஷாதாபமின்றி) அம்மூர்திகளில் முடிவு பண்ணப்பட்ட ஒன்றை குணம் , உருவம் ,முதலானவற்றினை பலமுறை கேட்டு சர்ச்சை செய்து பிரவசனம் மனனம் செய்து அடையுங்கள்.
நாம் அவர் பேச்சைகேட்டுக்கொண்டு சும்மாயிருந்து விடக்கூடாது என்று எண்ணி அடுத்த பாசுரத்தில் “பரம்பொருள் யார்? என்று பகுத்தாராய்ந்து அவனை சரணடையுங்கள்” என்று துரிதப்படுத்துகிறார். இதோ
நம்நம்மாழ்வாரின் [திருவாய்மொழி 1-3-7]
“ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்ரெழில் நாரணன் நான்முகனரநென்னுமிவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை யறுத்து
நன்றென நலஞ்செய்வது அவனிடை நம்முடை நாளே. “
இவ்வாறு பகுத்தறியச் சொல்லி ஆழ்வார்(கள்) நமக்கு வழிகாட்டுகிறார்.
இப்படி சொல்லியுள்ள பகுத்தறிவாளரான ஆழ்வார்(கள்) “ஹரியும் சிவனும்” ஒன்று என்று சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்?!!!!!
“எந்த பாசுரம் அது?” “எந்த ஆழ்வாருடையது?”
பிரபலமான இந்த பாசுரம். திருப்பதி பற்றி பேசினால் இதை சொல்லாத சமரசவாதிகள் இல்லை
“தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்- சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவு மொன்றாய் இசைந்து”
பேயாழ்வாரின் மூன்றாந் திருவந்தாதியில் 63 வது பாசுரம். திருப்பதி திவ்ய தேசம் குறித்தது. இந்த பாசுரத்தினை மேற்கோள் காட்டி திருப்பதியில் உள்ளது சிவன் என்றும், ஹரியும் சிவனும் ஒன்று என ஆழ்வார் பாடியுள்ளார் எனவும் வாதிடுவோர்கள் பலர் உண்டு .
இந்த பாசுரத்தின் பொருள் என்ன ?
தாழக் கட்டின ஜடையும், நீண்ட திருமுடியும்,அழகிய மழு என்னும் ஆயுதமும் , திருவாழிப் படையும் (சக்கரமும்), சுற்றியும் அணிந்துள்ள நாகாபரணமும் , பொன்னரை நாணுமாய் கொண்டு ஒன்றுக்கொன்று சேரா சேர்த்தியாய் இருக்கின்ற சங்கர,நாராயணர்களின் இரண்டு வடிவமும்,நாற்புறமும் திரள் திரளாக அருவிகள் பெருகப்பெற்ற திருமலைமேலுள்ள அப்பனுக்கு ஒருவடிவமாய்ப் பொருந்தி விளங்காநின்றது ஆச்சர்யம்.
முரணான விஷயம் எப்படி ஒன்றானது என்று ஆச்சர்யத்துடன் காண்கிறார் ஆழ்வார்
திருப்பதியில். திருவேங்கடமுடயான் திருமேனியில் நீள் முடியும், சக்கரமும் ,பொன்னாணும் மட்டுமே உள்ளது. மாறாக தாழ் சடையும், ஒண் மழுவும், சூழரவும் திருவேங்கடமுடையான் திரு உருவில் இல்லை.
அப்படியானால் ஆழ்வார் ஏன் அப்படி பாடுகிறார்?. அவருக்கு அப்படி காட்சி தந்திட்டதற்கு பொருள் என்ன ?
இவன் மற்றொருவனை (திருமாலைக்) குறித்து தவம் செய்பவன் என்பதைக் காட்டித்தரும் சிவனின் தாழக்கட்டின ஜடையை இடப்புறத்திலும், எல்லாவுலகுக்கும் சக்கரவர்த்தி எனக்காட்டித்தரும் ஹரியாகிய தனது கிரீடம் வலப்புறத்திலும் உடையவனாய் ஆழ்வாருக்கு காட்சி தருகிறான் திருமால் திருமலையில்.
மகரிஷியென்றும் பாறாது பிருகு மகரிஷி கழுத்தினை குறித்து ஓங்கவும் செய்த மழு என்னும் ஆயுதத்தினை இடப்புறத்திலும்...
ஸாதுக்களினை காக்க மட்டுமே ,அரக்கர்களை அழிக்கும் ஆயுதமான திருச்சக்கரத்தினை (ஸூதர்சனத்தினை) வலப்புறத்திலும் உடையவனாக காட்சிதருகிறான்....
ஒண் மழுவும், மற்றொரு புறம் சக்கரமும் எனத் திருமாலின் ஆயுதமாகிய சக்கரமும் கூறியுள்ளதால் சக்கரமேந்திய வலதுபாகமும் ஹரியினுடையதே.
“தவம் செய்வோனின் சடையும்”,ஸர்வேசவரன் எனக்காட்டும் கிரீடமும்,“கர்வத்தால் யோகிகளை துன்புறுத்தும் தாழ்ந்த மழு ஒருபுறம்” , அடியார்களை காக்கவே, அறத்தினை நிலைநாட்டவே செயல்படும் உயர்ந்த சக்கரமும் மற்றொரு புறம், என்று இரண்டுக்கும் தனது திருமேனியில் இடம் தந்துள்ளான் ஸர்வேஸ்வரன் என்று அவனது நீர்மையை பாடுகிறார் ஆழ்வார்.
நாராயணன் ஒருகாலத்தில் சிவனுக்குத் தன் திருமேனியின் வலதுபுறத்தில் ஒரு மூலையில் இடம்கொடுத்த நீர்மையை கூறுகிறது. “வலத்தனன் திரிபுரம் எரித்தவன்” நம்மாழ்வாரின் [திருவாய்மொழி 1-3-9] அதைப்போல் இங்கு இடப்புறம் கொடுத்துள்ளான்.
“ஸ்ரீ ஹரியை பாணமாகக் கொண்டு திரிபுரத்தினை எரித்த, ஈஸ்வரனுக்கு, மஹா விஷ்ணுவானவர் ஆத்மாவாதலால், ருத்ரர் விஷ்ணுமயமான பாணத்தினை தனுசிலுள்ள நாண்கயிற்றில் சேர்பதை சகித்துக்கொண்டார்” என்று திரிபுராஸூரசம்ஹார வரலாற்றினை விளக்குகிறது மஹாபாரத கர்ணபர்வம் அத்தியாயம் 26.
ஐந்தாம் வேதத்தின் கருத்தினைநம்மாழ்வாரும் திருவாய்மொழி 1-1-8பாசுரத்தில்...
“சுரர்அறி வருநிலை வின்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பராபரன்
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனஉல கழித்தமைத் துளனே”
“மேலானவரான பிரமன் முதலானவர்களுக்கும் மேலானவன்... உருத்திரன், பிரம்மன் என அவர்களுக்கு அந்தர்யாமியானவன்... அந்தர்யாமியாய் இருந்து முப்புரங்களை எரித்தவன் என்கிறார் ஆழ்வார்.
மீண்டும் பேயாழ்வாரிடமே வருவோம்
“ஹரியும் சிவனும் ஒன்று” என்று, “தாழ்சடையும்” பாசுரத்தினைக் கொண்டு ஆழ்வார் பாடியதாக வாதம் செய்வோர் மற்றொரு பாசுரத்தில் அதே பேயாழ்வார்,அதே மூன்றாந் திருவந்தாதியில்பாடியுள்ள பாசுரமான 97 ஆவது பாசுரத்தின் பொருளை உணர்ந்தால் தெளிவு பிறக்கும்
“அலரெடுத்த வுந்தியா னாங்கெழி லாய
மலரெடுத்த மாமேனி மாயன் – அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா நென்று இவர்கட்
கெண்ணத்தானாமோ விமை”
“தாமரைப்பூ ஓங்கியிருக்கப்பெற்ற திருநாபியை யுடையவனும் அழகிய காயாம்பூபோன்ற கரிய திருமேனியை உடையவனுமான ஆஸ்சர்ய பூதனான எம்பெருமானை காஞ்சிமலர் போன்ற நிறத்தினையுடயவனான இந்திரநென்ன,தாமரை பூவில் பிறந்த பிரம்மாவென்ன,தாழ்ந்த ஜடையை உடையவனான சிவநென்ன இத்தேவர்கட்கு சற்றேனும் நெஞ்சில் நினைக்கவும் முடியுமோ? என்று கேட்கிறார்.
பிரம்மனோ, சிவனோ சற்றேனும் திருமாலை நெஞ்சத்தில் நினைக்கவும் முடியுமோ? என்கிறார் ஆழ்வார்.
இப்படி திருமாலை எல்லோருக்கும் மேலான கடவுளாக பாடிய ஆழ்வாரின் பாசுரத்துக்கு எப்படி “ஹரியும் சிவனும் ஒன்று” என்று பொருள் கொள்ள முடியும்?
திருமங்கையாழ்வார் ஹரியும் சிவனும் ஒன்று என பாடியுள்ளார் என்று கூறி பலர் ஆதாரமாக காட்டும் பாசுரம் இது
“பிறைத்தங்கு சடையானை வலத்தே வைத்துப்
பிரமனைத்தன் உந்தியிலே தோற்று வித்து
கறைதங்கு வேல் தடங்கண் திருவை மார்பில்
கலந்தவன் தான் அணைகிற்பீர்! கழுநீர் கூடித்
துறை தங்கு ... சேர்மின் நீரே.”
இந்த பாசுரம் திருமங்கையாழ்வாரின் [பெரிய திருமொழி 3-4-9]
காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) திவ்ய தேசத்துடைய பாசுரம்.
சிவபெருமான் உபாசகனாகையாலே சடையுடையவன், கொடுந்தவம் புரிபவன் என்பதால் தாபத்தால் குளிர்ந்த சந்திரனை தலையில் சூடியுள்ளான்.
சிவனைத் தன் திருமேனியில் வலப்பக்கமாக வைத்து பிரம்மாவை தன் உந்தியில் தோற்றுவித்து , போரில் எதிரிகளின் ரத்தக்கறை கழுவாத வேல் போன்றதாய் சிவந்த கண்களை உடைய பெரிய பிராட்டியை தன் திருமார்பில் சேர்த்து…
(செருக்குடைய) பிரம்ம ருத்ராதியர்களுக்கும், பெருமாளைத் தவிர வேறு எவரையும் மனதில் வைக்காத பெரிய ப்ராட்டிக்கும் தன் திருமேனியில் இடம் கொடுக்கும் அதாவது உயர்ந்த பிராட்டிக்கும் தாழ்ந்த பிரம்மா ருத்திரன், என்னும் இரண்டு பேருக்கும் தன் திருமேனியில் இடம் கொடுக்கும் நீர்மை உள்ளவன் என்கிறார் ஆழ்வார்.
திருமங்கையாழ்வாரே .. இதே [பெரிய திருமொழியில் 3-4-2]
“நான்முகன்நாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை
நலமிகுசீர் உரூமசனால் நவித்ரி நக்கன்
ஊன் முக்கமார் தலியோட்டுண் ஒழித்த எந்தை
ஒளிமலர்ச்சே வடியணைவீர்!"
என்கிறார் திருமங்கையாழ்வார் . இதுவும் காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) திவ்ய தேசத்துடைய பாசுரம்.
பிரம்மாவுக்கு ஆயுள் மிகுதியினால் உண்டான கர்வத்தினை வேதாத்யாயன நிஷ்டனாய் நற்குணங்களினால் நிறைந்தவனான ரோமச மகரிஷியினால் போக்கடித்தும்,
கையில் ஒட்டிக்கொண்ட பிரம்மனின் கபாலத்தினில் பிக்ஷை எடுத்து உண்ணுகின்ற நிலையை நக்கன் எனப்படும் திகம்பரனான ருத்ரனுக்கும் போக்கினவன் நாராயணன் என்கிறார் திருமங்கையாழ்வார்.
ருத்ராதி தேவதைகளின் தாழ்வைச் சொல்லி அதனை நீக்கியது திருமால் என்று சொல்லிவிட்டு, அந்த தாழ்ந்த தேவதையும்,அந்த தாழ்வை நீக்கிய திருமாலும் ஒன்று என்று, அதாவது “ஹரியும் சிவனும் ஒன்று” என பாடுவாராகளா ஆழ்வார்கள் ?
எனவே, ஆழ்வார்கள் பாடல்களிலும் ஹரியும் சிவனும் ஒன்று என்னும் கூற்று உள்ளது என்பது வெறும் பொய்யே என்பதையும் விளங்காத் தன்மை என்பதையும் தெளிவாக கண்டு விட்டோம்.
ஹரி, சிவன் ஆகிய இருவரின் குணங்கள், ரூபங்கள், செயல்கள், பக்தர்கள், வாழுமிடம் என எல்லாம் வேறுபட்டு இருக்கும்போது, அவர்கள் வேறுபட்டவர்கள் என்பதை உணர்வது எளிதானதாகும்
"ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு"என்று சொல்வதில் உள்ள பிழைகள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதற்கு மேலும், யாரேனும், "ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு" என்று கூறினால், அவ்வாறு சொல்பவரின் வாயில்தான் மண்ணை வைக்க வேண்டும்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்...!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்