Tuesday, February 27, 2018

திரிபுரம் எரித்த சிவனே பரம்பொருள் என்பதற்க்கு மறுப்பு

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||

"சர்வம் விஷ்ணு மயம் ஜகத்"

சைவர்கள் அனேகமானவர்கள் கூறும் கதை இது; எங்கள் இறைவனாகிய பரமசிவன் திரிபுர தகனம் செய்து, திரிபுரத்தை அழித்து, திருமால் திசைமுகன் முதலிய தேவர்களைக் காத்தார் என்றும், சிவபெருமான் திரிபுரம் எரித்தபோது திருமால் விருஷப வாகனமாய்த் தாங்கினார் என்றும்!

அதுமட்டுமல்லாது பகவான் ஸ்ரீவிஷ்ணுவை துவேஷித்து சில நையாண்டி பாடல்களையும்  பாடியுள்ளான் (காளமேகம் புலவன்) இப்படிப்பட்ட நையாண்டி பாடல்களுக்கும், திரிபுரம் எரித்தால் சிவன் பரம்பொருள் என்ற பாஷாண்டா வாதங்களை நிர்மூலமாக்கவும் இந்த பதிவு பயனுள்ளதாய் அமையும்.

"ஆவாய் அதன்கன்றாய் அந்தரியா மிப்பொருளாய் ஏவாய்ப் பவுத்தனுமாய் எம்பெருமான்--- காவாக்கால் போரும் பொருமோ, புராந்தகனென் றேபேரும்
சீரும் பெறுமோ சிவன் ?" (என்றும்

"அந்த அரனே அநுமானா கப்பிறந்து
சந்ததமும் வாகனமாய்த் தாங்கியதை--- இந்தவுல(கு)
எல்லாம் அறியமால் ஏறானான் என்பதென்னோ
கல்லா மடமாந்தர் காள்!"

என்றும் கூறி,

"தூளாய்த் தலைசிதறிச் சுட்டவிடம் புன்முளைத்து
வாளாப் பெயரும் மறையாதோ--
தாள்வருந்த
வந்தசிவ னுக்கிரங்கி மாயவிரு காசுரனை
அந்தவரி கொல்லாவிட் டால்"

என்ற செய்யுளைக் கூறி அவர்கள் வாதத்தை மறுப்பது.

'ஆவாய்....சிவன்' என்ற செய்யுளுக்கு, பசுவாகியும், அதன் கன்றாகியும், சிவனுக்கு அந்தர்யாமிகியும் (கரந்துறைந்தும்) அம்பாகியும், பௌத்தனுமாகியும் எம்பெருமானாகிய திருமால் காக்காவிடில், நீங்கள் கூறும் சிவபெருமான் அவ்வசுரர்களுடன் போர் செய்ய முடியுமோ? திரிபுராந்தகன் என்ற பேரும் பெற்றுச் சிறப்புத்தான் அடைவானோ? என்பது கருத்து. இனி வரலாறு.

தாரகாசுரனது புத்திரர்கள் மூவர். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுந்மாலி என்று கூறப்படுபவர்கள்.
இவர்கள் கோரமான தவமியற்றி, பிரம்மனிடம் சிறந்த வரங்களைப் பெற்றனர்.
வேதங்களில் நம்பிக்கை உடையவர்கள். வெள்ளி, பொன்களால் அமைக்கப்பட்ட கோட்டைகளை உடைய ஆகாசத்தில் திரியும்படியான மூன்று நகரங்களை மயன் என்பவனால் அமைக்கச் செய்தனர் அதில் சஞ்சீவி சித்தரஸ கூபம் என்ற அமிர்தம் நிறைந்த கிணற்றையும் படைக்கச்செய்தனர் வீரம் நிறைந்த அசுரர்கள் பலரை அந்நகரத்தில் குடிபுகுத்தினர். தாம் நினைத்த இடங்களில் அந்நகரங்களுடனே பறந்து சென்று  இறங்கி, பல இடங்களையும் பாழாக்கி வந்தனர்.

இவர்களது துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமானும் அவர்களுக்கு அபயமளித்து, தேவர்களிடம் தமக்குப் பசுபதியாகும்படி வரம் கொடுத்தால் திரிபுர சம்ஹாரம் செய்வதாகக் கூறினார். தேவர்களும் அதற்க்கிசைந்தனர். உடனே சிவபெருமான் தேவர்களையும் அழைத்துக்கொண்டு திரிபுரவாசிகளான அசுரர்களுடனே யுத்தம்செய்து அநேக கோடி அசுரர்களைக் கொன்று குவித்தார். அவ்வசுரர்களும் இறந்தவர்களை சித்தரஸ கூபமென்கிற கிணற்றில் தள்ள, அவர்கள் மீண்டும் உயிர்பெற்று மறுநாள் யுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தனர் இதையுணர்ந்த சிவபிரான், ஸர்வாந்தர்யாமியாகிய ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து ஒரு யாகம் செய்தார்.

ஸர்வேஸ்வரனும் சிவபெருமான் முன்தோன்றி திரிபுர தானவர்களை அழிக்கும் உபாயத்தைக் கூறித் தானும் அவருக்கு உறுதுணையாக வருவதாக வாக்களித்தார்.

திருமால் தாம் ஒரு பசுவாகவும், பிரமனை அதன் கன்றாகவும் வரச்செய்து திரிபுரத்தில் நுழைந்து சித்தரஸகூபத்திற்குக் காவலிருந்த அசுரர்களை மயங்கச் செய்தார். பின்பு அமிர்தக் கிணற்றில் இறங்கி அதிலுள்ள அமிர்தத்தை எல்லாம் பருகினார்.

அவ்வசுரர் வேதத்தினிடத்திலே மிக்க பக்தியுடையவர்களாகையால், தான் ஒரு பௌத்தனாகி அவர்கள் முன்சென்று அத்திரிபுரத்தில் உள்ளோர்க்கு மோஹனாகமம் என்ற ஒரு பொய்நூலை உபதேசித்து, வேதங்களித்திலே அவர்கள் கொண்ட நம்பிக்கையைப் போக்கினார். மேலும், அங்குள்ள அசுரர்களின் மனைவியர் மிக்க கற்பொழுக்கமுடையவர்கள்; புத்திரர்களைப் பெறவேண்டி நிற்பவர்கள் அச்சுதனும் அவர்களிடம் சென்று , நீவிர் புத்திரர்களைப் பெற விரும்பினால் அஸ்வத்த மரத்தைப் பூஜித்து ஆலிங்கனம் செய்துகொள் வீராயின் புத்திரர்களை அடைவீர்கள்' என்று உரைத்தான். அந்தப் பெண்களும் அவ்வாறே செய்ய; தானே விருக்ஷ ரூபமாய் இருந்து அர்களுடைய கற்பை அழித்தான். அதன் பின் , திருமால் சிவபெருமானை நோக்கி, பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைத் தேர்ச் சக்கரங்களாகவும், வேதங்கள் நான்கினையும் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மஹா மேருபர்வத்தை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவுங்கொண்டு அசுரர்களை அழிக்கும்படி கூறினார்.

மேலும; தானே சிவபெருமானுக்கு அந்தர்யாமியாக இருந்து ஒருவராலும் அசைக்க முடியாத மகாமேருவை எடுத்து, அக்நி தேவனை அம்பாக்கி அதன் நுனியில் தானிருந்தும், திரிபுராசுரர்களுடன் போர்செய்கையில் தேரின் அச்சு முறியவே, தான் ஓர் விருஷபமாகித் தேரைத் தாங்கியும்  சிவபெருமானுக்குப் பிரமனைக் கொண்டு அரிபஞ்சரம் என்ற மந்திரத்தை உபதேசிக்கச் செய்தும் திரிபுரத்தைச் சிவபெருமான் அழிக்கும்படியாகச் செய்தார் திருமால் என்பது வரலாறு.

சிவன் திரிபுர ஸம்ஹாரத்தில் பொருட்டு, தன் சடையைச் சமித்தாகக்கொண்டு திருமாலை நோக்கி வேள்வி செய்ததும், திருமால் பசுவாகித் திருபுரத்தி லுள்ள அமிர்த கூபத்தின் அமிர்தத்தைப் பருகியதும் பாகவதத்திற் கூறப்பட்டன.

விஷ்ணு பரமசிவனுக்கு ஆத்மாவாய் இருந்தமையால்தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்யும்பொழுது, வில் நாணி யைத் தொடவும் வல்லவரானார் என்பதும், பிரமன் சாரதியானதும் பாரதத்தில் கர்ணபர்வத்தில் பரக்கக் காணலாம்.

திருமால் பௌத்தாவதாரம் எடுத்து திரிபுரத்திலுள்ளவர்களின் விரதத்தை அழித்ததுபற்றிப் பாத்மமும் அரிவம்சமும் உணர்த்தும். 'அரிபஞ்சரம்' என்ற மந்திரத்தை அயன் உபதேசித்தது பற்றி நாரதீயம், மந்திரசாலம் என்ற நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.

சிவன் தேவர்கள்பால் 'பசுபதி' என்ற வரத்தைப் பெற்றனன் என்பது யஜூர்வேதத்தில் ஆறாம் காண்டம் இரண்டாம் பருச்சத்தில்
(ப்ரஸ்னத்தில்) காணலாம். இவை வடமொழிச் சான்றுகள். இனி நந்தம் தமிழ்மொழிச் சான்றுகளை க்காண்போம்.

தமிழர் சமயத்தையும், கொள்கை களையும், வாழ்க்கை நெறிமுறை களையும் தெள்ளத் தெளியக் காட்டுவன சங்க கால இலக்கியங்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, மற்றும் இதன்பின் எழுந்த சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் தமிழர்களது சமயத்தை அறிய மிகவும் பயனுள்ளவை களாகத் திகழ்கின்றன. அவற்றுள் சிலவற்றில் சிவபிரான் திரிபுரம் எரித்த வரலாறு வருகிறது.
"மூலவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும்" எனத் திருமுருகாற்றுப் படையிலும்;

"ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்து."

என்று கலித் தொகையிலும்;

"ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீ இ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
றைமிடற் றண்ணல்."..........
[புறம் 55;-1-4]

என்றும் புறநானூற்றிலும் இவ்வரலாற்றினைக் காணலாம். இப்புறநாநூற்றுச் செய்யுளில்,
'ஒருகணை கொண்டு மூவெயிலுடற்றி' என்ற இடத்தில், முன்பு பல கணைகளினாலே அழிக்க முடியாமல், அசுரர்களைத் திருமாலாகிய ஒரே அம்பினால் அழித்தான் என்பது பெறப்படும்.

எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் ஒன்று. பரிபாடலை, 'ஓங்கு பரிபாடல்' என்று உயர்வாகக் கூறுவர். சிறப்பு மிக்க அப்பரிபாடலில், சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாறு கூறப்படுகிறது. அதனை அடியிற் காண்போம்.

"ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர்எயில் ஓர் அழல்-- அம்பின் முளிய மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்"
[பரிபாடல் 5]

சிவபெருமான் பூமியைத் தேராகவும், நான்கு வேதங்களையும் நான்கு குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவுங்கொண்டு, அக்னிவடிவமான(திருமாலாகிற) ஒரே அம்பினால் திரிபுரத்தை எரிததார் என்று மேலே கண்ட பரிபாடல் விளக்குகிறது. தக்ஷன் சாபத்தினால் யாகத்தில் சிவனுக்கு அவிர்பாகம் இல்லா மலிருந்தது, இத்திரிபுர சம்ஹாரம் செய்ததற்குப் பிரதியுபகாரமாகத் தேவர்களிடம் 'பசுபதி' என்ற பேரைப் பெற்று யாகத்தில் அவிர்ப்பாகமும் பெற்றார் என்பதை
"அம்பின் முளிய மாதிரம் அழல எய்து அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்" என்ற வரிகள் தெளிவுறுத்துகின்றன.
இதில் சிவபெருமானுக்குச் சாரதியான பிரமனைக் கூறுமிடத்து 'ஆதி அந்தணன்' என்றும் சிவபெருமானைக் கூறுமிடத்து 'பைங்கட் பார்ப்பான்' என்றும் கூறப்படுகிறது. பிரமன் முதலில் தோன்றியவனாகையி னாலே 'ஆதி அந்தணன்' என்றார். பிரம்மனுக்குப் பிறகு தோன்றியத னாலே சிவபெருமானை 'பைங்கட் பார்ப்பான்' என்றார் ஆகவே, சிவனிலும் பெரியோனாகிய பிரமன் சாரதியானதினாலும்,

"செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி
கல் உயிர் சென்னி இமய வில் நாண் ஆகி தொல் புகழ் தந்தாரும் தாம்"[பரிபாடல் திரட்டு 1]

என்ற பரிபாடல் திரட்டின்படி, ஆதிசேஷன் நாணாகியதனாலுமே சிவபெருமான் திரிபுரம் எரித்த புகழை அடைந்தார் என்று தெளிவு பெறுகிறது. மேலும்,

"ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல்
மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமும் நீ" [பரிபாடல் 1]

என்ற பரிபாடல் அடிகளில், திருமாலே சிவனுக்கு அந்தர்யாமியாயிருந்து உலகங்களை ஸம்ஹரித்தார் எனக் கூறுகையாலே, அவரே சிவனுக்கு அந்தர்யாமியாயிருந்து திரிபுரங்க ளையும் அழித்தார் என்பதும் விளங்கும். பிரமன் படைப்பும், சிவன் அழிப்பும் அவர்களுக்கு அந்தர்யாமிருந்து திருமால் ஒருவனே செய்கிறான் என்பதே மேலே கண்ட பரிபாடற் பகுதிக்குப் பொருள் என்பதை---"ஐந்து தலையைத் தோன்று வித்த அணங்குடை அருந்திறலையுடைய ஈசன்; மடங்கல்--- அவனினாய உலகுயிர்களின் ஒடுக்கம். பூவில் நான்முகனும் அவனினாய உலகுயிர்களின் தோற்றமும் நீ. அழிப்பும் படைப்பும் கூறியவாறு" என்னும் பரிமேலழகர் உரைகொண்டு தெளிக.

அன்றியும், நற்றிணைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் மாயோனே வேதமுதல்வன் எனவும், அவன் உயிர்கள் எல்லாவற்றினும் அந்தர்யாமியாக விளங்குகிறான் எனவும் பாரதம் பாடிய பெருந்தேவனார் கூறுவதையும் அடியிற் காண்க.

"மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
ளைநரல் பௌவம் உடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே"[நற்றினை:க.வா]

இப்பாடலில் "இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் --தீதற விளங்கிய திகிரியோன்(சக்ரதாரி)" என்ற அடிகளில் ஸர்வேஸ்வரனின் ஸர்வாந்தர்மித்வத்தை ஆசிரியர் ஆணித்தரமாக அடித்துக் கூறுவது காண்க.

"பாரதி யாடிய பாரதி யரங்கத்துத் திரிபுர மெரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம் பேவல் கேட்ப
மையவ ளொருதிற னாக வோங்கிய
மையவ னாடிய கொடுகொட்டி யாடலும்" [சிலம்பு:கடலாடுகாதை 36-43]

என்று சிலப்பதிகாரம் கடலாடுகா தையில் சிவபெருமான் திரிபுரம் எரித்தது பற்றிய செய்தி காண்கிறது. இவ்வடிகளுக்கு;

"தேவர் புரமெரிய வேண்டுதலால் வடவையெரியைத் தலையிலே யுடைய பெரிய அம்பு ஏவல்கேட்ட வளவிலே அப்புரத்தில் அவுணர் வெந்து விழுந்த வெண்பலிக்கு வையாகிய பாரதியரங்கத்திலே உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று பரணி, தூக்கு, சீர் என்னும் தாளங்களைச் செலுத்தத் தேவர் யாவரினும் உயர்ந்த இறைவன் சயானந்தத்தாற் கைகொட்டி நின்று ஆடிய கொடுகொட்டியென்னு மாடலும்"  "முகம்---தலை. பேரம்பு-- பரமபுருடன். ஏவல்கேட்ப--- சுட்ட வளவிலே" என்ற அடியார்க்கு நல்லார் உரைனையும் காண்க. இக்கூற்றிலிருந்தும் பரமபுருட னான திருமாலே அம்பாயிருந்து திரிபுரம் எரித்தார் என்பது விளங்கும்.

இனி அருளிச்செயலை நோக்குவோம்,

"சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும் வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன் புரமொரு மூன்றெரித்து அமரர்க்கு மறிவியந்து அரனய னென உலகழித் மைத்துளனே"
[திருவாய் 1-1-8]

என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் திருமாலே சிவனுக்கு அந்தர்யாமியாக இருந்து முப்புரத் தையும் எரித்தான் என்பது விளங்கும். இப்பாசுரத்தின் ஈடுமுப் பத்தாறாயிரப்படி வியாக்கியானத் தில்-- "தான் பூட்டின நாணி தன் கழுத்தையறுத்துக் கொண்டு போகாதொழியும்போதும் ஈச்வரன் அந்தராத்மாவாய் நிற்கவேணும்" என்பது நோக்கத்தக்தாகும். இதன் கருத்தாவது;--"வாயு,இந்திரன், வருணன், அக்நி முதலானவர்க ளோ, மனிதர்களோ யாராயினும் சரி, எனக்கு ஈடல்லர்" என்று உருத்திரன் செருக்குற்றிருந்தார் ஒருசமயம். அந்த உருத்திரன் தனது வில்லை ஊன்றிக்கொண்டு நின்றார். அந்த வில்லின் ஒருமுனை மண்ணிலும், மற்றொரு முனை விண்ணிலுமாகியது. இதையுணர்ந்த இந்திரன் செல்லு (கரையான்) வடிவம்கொண்டு அந்த வில்லின் நாணியை மென்று தின்றுவிட்டான். நாணியற்ற அந்த வில் உடனே எழும்பி மேகமண்ட லத்தில் பாய்ந்து விட்டது. அப்படி அது மேலே எழும்பும்போது உருத்திரனுடைய தலையை அரிந்துகொண்டு போயிற்று. இன்றும் அந்த வில் நாணி இல்லா ததாக மேகமண்டலத்தில் தோன்று வது காணலாம். இக்காரணத்தினா லேயே அது "இந்திர தனுசு" என்று சொல்லப்படுகிறது. இந்த வரலாறு தைத்திரீய ஆரண்யகத்தில் [1-5] கூறப்பட்டிருக்கிறது. இதைக் கருத் தில்கொண்டு தான் மேலே கண்ட ஈட்டு ஸ்ரீஸூக்தி அவதரித்திருக் கிறது என்று முன்னோர் மொழிவர் அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு துணை செய்யாமையால் உருத்திரன் தலை இழந்துபோகும்படியாக நேர்ந்தது. திரிபுர சம்ஹார காலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு துணைசெய்தமையால் அப்படிப் பட்ட ஆபத்து ஒன்றுமில்லாமல் சிவன் வெற்றி பெற்றார் என்பது விளங்கும்.
இதைத் திருவுள்ளம்பற்றி,

"குழல்நிற வண்ண நின்கூறு கொண்ட தழல்நிற வண்ணன் நண்ணார் நகரம் விழ நனிமலை சிலைவளைவு செய்து, அங் கழல்நிற அம்பது வானவனே"
[பெரியதிருவாய் 6-1-3]

என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்வதிலிருந்தும் திருமாலே தீயுமிழும் அம்பாக இருந்து திரிபுர தகனம் செய்தார் என்பது பெறப்படுகிறது.

"கள்ளவேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்கவாறும் கலந்த உள்ளம் பேதம்செய்திட் டுயிருண்ட வுபாயங்களும் [சுரரை
வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்தென்னுயிரை யுருக்கியுண்ணுமே" [திருவாய் 5-10-4]

என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில், பௌத்தாவதாரம் எடுத்து, திரிபுரம் சென்று அங்குள்ள அசுரர்களின் உள்ளத் தைப்பேதித்துத் திருமாலே திரிபுரம் எரிய உதவினன் என்று நம்மாழ்வார் கூறுவதை ஒப்புநோக்குக.

திரிபுர சம்ஹார காலத்தில் சிவபெருமானுக்குப் பிரமன் சாரதியானது பற்றி,

"செங்கோல மலரிலிருந் தனைத்து
மீன்ற திசைமுகன்தான் அறம் வளர்க்குஞ் செல்வப்பாவை பங்கோனுக் காதிமறைப் புரவி பூண்ட படிக்கொடித் தேர் கடவு தனிப்பாகனானான் பொங்கோதப் பாற்கடலா னிவனென்றியாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து வெங்கோப விசயனுக்குச் சூதனானான் விசயனுமன்(று) உத்தரன்தேர் விசையி னூர்ந்தான்"
[வில்லிபாரதம்:கர்ண 28]
என வில்லிபாரதம் கர்ணபர்வம் 28ஆம் பாடல் விவரிக்கிறது.

இனி; "அந்த அரனே....மாந்தர்காள்"
[பக்கம்35] என்ற செய்யுளுக்கு விளக்கம்; திருமால், சக்கரவர்த்தித் திருமகனாக அவதரித்த காலத்தில் சிவபெருமான் அநுமனாகப் பிறந்து இராமபிரானுக்கு வாகன மாகத் தாங்கித் தொண்டு செய்ததை இந்த உலகமே அறியும். இதனைக் கற்றுணராத நீவிர், திருமால் சிவனை விருஷபமாகத் தாங்கினார் என்று சொல்லுவது எக்காரணம் பற்றி? என்பது கருத்தாகும். இதற்குச் சான்று;

"வாயுமற் றெனது கூறு மாருதி யெனலு மற்றோர் காயுமர்க் கடங்க ளாகிக் காசினி யதனின் மீது  போயிடத் துணிந்தோ மென்றார் புராரிமற் றியானே வாத சேயெனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க் கவதி யுண்டோ".
[கம்ப: பாலகாண்டம்; திருவவதார 27]
எனும் பாடலில், கம்பநாட்டாழ்வார்
'புராரி மற்றியானே வாத சேய் எனப் புகன்றான்' [திரிபுரமெரித்த சிவன் 'வாயுபுத்திரனான அனுமன் யானே' எனக் கூறினார்] என்று கூறுவது காண்க.

"தூளாய்த் தலைசிதறி....கொல்லாவிட்டால்".
[பக்கம் 35] என்ற செய்யுளை இனி விளக்குவோம்.

விருகாசுரன் என்பவன் சிவபெருமானைத் துரத்திக் கொண்டு வந்தான். சிவனும் அவன் செயலுக்கு அஞ்சித் திருமா லிடம் கால்கள் நோவ ஓடி வந்தார். வந்த சிவனிடம் இரக்கம் கொண்டு மாய விருகாசுரனைத் திருமால் மாயும்படி செய்தார். திருமால் அவ் வாறு செய்யவில்லையானால் சிவபெருமானது தலைதூளாய்ச் சிதறி அவர் இருந்த இடம் தெரியா மல் புல் முளைத்துப் போய் அவரது பேரும் மறைந்திருக்காதோ? என்பது இதன் கருத்து.

இனி இதன் வரலாறு:---

முன்னொரு காலத்தில் விருகாசுரன் என்ற அசுரனொரு வன் முக்கண்ணீசனைக் குறித்துச் சிறந்த தவமியற்றினான். கறை மிடற்றண்ணலும் அவனது கடுந்தவத்தைக் கண்டு மகிழ்ந்து அவன்முன் தோன்றினார். விருகா சுரனும் சிவபெருமானை நேரில் கண்டு துதித்தான். சிவபெருமான் அவ்வசுரனை நோக்கி, 'அப்பா! நீ செய்தற்கரிய தவத்தைச் செய்தாய், உன் தவத்தை மெச்சினேன்; நீ விரும்பிய வரத்தைக் கேள் தருகிறேன்" என்றார். அசுரன், "அண்ணலே! யான் எவர் தலையில் கையை வைத்தாலும் அவர் தலை தூள் தூளாய்ச் சிதறும்படி வரந்தந்தருள்க" என்று பிரார்த்தித்தான். சிவனும் பின் விளைவதை ஓராமல் 'அங்ஙனமே தந்தோம்' என்றார். விருகாசுரன் மிகவும் களிப்புற்றான். முக்கண்ணன் தந்த வரத்தைச் சோதிக்க முனைந்தான். முதன் முதலில் யார் தலையில் கை வைப்பது? என்று எண்ணினான் . 'ஏன்.? வரமீந்த சிவபெருமான் தலையிலேயே கையை வைத்துப் பார்ப்போமே' என்று துணிந்தான். எழுந்தான். சிவன் தலையில் கையை வைக்கச் சென்றான். சிவபிரானும் 'இந்தக் கொடியவனு க்கு வரம் கொடுத்ததாலல்லவோ இந்த விளைவு? என்று அச்சமுற்றார். அவ்வசுரன் தன்பால் வருமுன்பே உலகமெங்கும் ஓடினார். அசுரனும் அரனைத் துரத்திக்கொண்டே வந்தான். புராரி வேறு புகலிட மில்லாமல் புயல்நிற வண்ணனாகிய திருமாலிடம் ஓடி வந்தார் திருமறு மார்பனும் நிகழ்ந்ததை அறிந்தார்.

உடனே பைந்துளப மார்பனாகிய பரமன் ஓர் பிரம்மசாரிவடிவினனாய் விருகாசுரன் முன் தோன்றினான். அசுரனும் அவனது வடிவழகில் மயங்கினான். அங்கு வந்தவன் யார் என்பதை உணராமல் அசுரன் அப்பிரம்மசாரியை நோக்கி இன்னுரை சொல்லலுற்றான்.

ஐயா! நீர் யார்? எந்த ஊரிலிருந்து வருகிறீர்? எவ்வழியாக வருகிறீர்? உமது அழகிய முகமும் திருமேனியும் யாவரையும் கவரும் படியாக இருக்கிறது. நீர் வந்த வழியில் எங்காவது சிவபெருமானைக் கண்டீரா?' என்று வினவினான்.

அவனுரையைக் கேட்ட பிரம்மசாரி அவ்வசுரனை நோக்கி, ஐயா! நீர் ஏன் மெய்யில் வியர்வை சிந்த இவ்வாறு ஓடிவருகிறீர்? சிவபெரு மானைத் தேடும் காரணம் யாது? சொல்லத் தக்காதால் என்னிடம் கூறும்' என்று தன் புன்முறுவல் பூத்த முகத்தினால் அவ்வசுரனை மயக்கினான். அவனது மதுரமான சொல்லைக் கேட்ட விருகாசுரன்
'இப்பிரம்மசாரி சிறந்த அறிவுடைய வனாக இருக்கிறான்' என்று தான் சிவனை நோக்கித் தவம் செய்ததும், அவர் வரமீந்ததும், அவர் தந்த வரத்தைச் சோதிக்க அவர் தலையிலேயே கைவைக்க வந்ததும் விளக்கிக் கூறினான்.

அசுரனது உரையினைக் கேட்ட திருமால் முறுவல்செய்து. 'அவுணர் தலைவ! சிவனுடைய வரத்தை உண்மை என்றா நீ்ர் நம்புகிறீர்? அவர் கபடமுடையவர ன்றோ.? அவ்வாறில்லை யாகில் தக்ஷனிடம் சாபம் பெறுவரோ? அவரது சாபத்தினால் பிசாசுகளோடு கூடி மயனத்தில் திரிவதை நீர் உணரவில்லையா? அந்தச் சிவனுடைய கதியே இங்ஙனமாயின் அவர் தந்த வரம் எங்ஙனம் பலிக்கும் ? இதற்கு நீர் சிவபெருமானையா தேட வேண்டம்? அவர் தந்த வரம் உண்மைதானா? என்று பார்க்க உம் கையினால் உம் தலையையே தொட்டுப்பார்த்தலே அது பொய் யென்று உணர்ந்துகொள்வீர்; அவர் வரம் ஒருநாளும் பலிக்காது' என்று கூறினார். விருகாசுரனும் பிரம்மசாரியின் சொற்களிலே மனம் மருண்டு, தன் கரத்தைத் தன் தலையிலே வைத்தான். உடனே அவன் தலை தூள் தூளாய்ச் சிதறி விழுந்தது. பிறைசூடியாகிய சிவனும்,  'நம் துன்பம் இன்றோடு நீங்கியது' என்று மாயனை வாயார வாழ்த்தினார் என்பது வரலாறு.

இனி இதன் சான்று;..

"வாய்விரி யெருக்கமலர் மாலைதலை சூடாக் காயழல் பரந்தசுடு காடெழி லரங்காப் பேயொடு நடிக்குமொரு பித்தனுரை மெய்யோ? ஆயிர முடித்தலை யனந்தனை நிகர்ப்பாய்!"

"மின்னொழுகு கொற்றவடி வேலுழவ! மற்றுன் சென்னி கரம் வைத்தது தெளிந்திடுத லன்றே நன்னிலைமை யித்திற(ம்)முன் நாடுதி யெனத்தன் மன்னிய தடக்கைதலை வைத்தவுணன் மாண்டான்."

"நன்றென மகிழ்ந்தமரர் நாண்மலர் பொழிந்தார் வென்றிமழு வாளனும் வியந்தன னடைந்தான் மன்றகமழ் தண்டுளவ மாயனு மகன்றான் என்றுமுனி புங்கவ னெடுத்தன னிசைத்தான்."

என பாகவதம் தசமஸ்கந்தம் விருகாசுரனைக் கொலைபுரி அத்தியாயத்தில் கூறப்படுவது காண்க.

எனவே, திரிபுரம் ஸ்ரீமந் நாராயணன் துனையோடுதான் அவன் பங்கேற்றதால்தான் சிவன் தகனம் செய்தார் என்பது விளங்கும் இதனால் ஸ்ரீமந் நாராயணனே அனைத்து தேவர்களுக்கும் அந்தர்யாமி என்பதும் புலப்படும்.

"சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

ஆதாரம்:-[ திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய "பரப்பிரம்ம விவேகம்" என்னும் உன்னத படைப்பில் இருந்து]

Monday, February 26, 2018

அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பு.!

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||

"சர்வம் விஷ்ணு மயம் ஜகத்"

சைவர்களால் திருமாலான சர்வேஷ்வரனை சிறுமை படுத்த திட்டமிட்டு புனையப்பட்ட கதைகளில் ஒன்றுதான் "அடிமுடி தேடிய கதை" இந்த மூட பங்கத்தை நிர்மூலமாக்கவே இந்த பதிவு..!

சைவர்கள் இயற்றிதையை பார்ப்போம்;

முன்னொரு காலத்தில் திருமாலும் திசைமுகனும் தானே கடவுளென்று பிணங்கி நிற்க; அவர்கள் வேறுபாட்டை நீக்கும் பொருட்டு அண்ணாமலையார்(சிவன்) அக்கினிப் பிழம்பான மலைவடிவமாய் அவர்கள் முன் தோன்றவே, திருமால் வராகமாய் அவனடியைத் தேடியும், பிரமன் அன்னமாய் அவன் முடியைத் தேடியும் அலைந்தார்களாம்..😀 நல்ல நகச்சுவை கதையொன்று இது.!

இதற்க்கான மறுப்பு இனி:-

"அண்ட மளக்க வடிக்கீ ழொடுங்கியுல குண்ட பொழுதுதரத் துள்ளொடுங்கி--- துண்டமதி சூடினான் மாலருளாற் றோன்றினான் ஆங்கவனைத் தேடினான் மாலென்ப தென்".

இதன் கருத்து:--- அண்டங்களனைத்தையும் திருமால் அளந்தான், அப்பொழுது அனைத்துலகங்களும் அவனடிக்கீழ் ஒடுங்கியது. பிரளய காலத்தில் காப்பதற்காக உலகையெல்லாம் உண்டான். அக்காலத்தில் உலகனைத்தும் அவனது திருவயிற்றில் ஒடுங்கியது ஸ்ருஷ்டிகாலத்தில் அருள்கொண்டு உலகனைத்தையும் உமிழ்ந்தான். அச்சமயம் பிறைசூடியாகிய சிவபெருமான் முதல் சகல ஜீவர்களும் மறுபடியும் தோன்றினர். இவ்வாறிருக்க சிவனடியைத் திருமால் தேடினான் என்பது ஏனோ? என்பதாகும்.

அண்டமளந்த வரலாறு.

விரோசனன் மகன் மாவலி. இவன் பெருவலி படைத்தவன்; வரபலம் மிக்கவன். இவன் தன் ஆற்றலால் மூன்று உலகங்களையும் வென்று தன் ஆட்சிக்குட்படுத்தினான். ஒரு சமயம் மாவலி வேள்வியொன்று இயற்றினான். அதுகாலை, இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கித் திருமால் வாமனனாகி மாவலிபால் சென்று மூவடி மண் வேண்டினான். அப்பொழுது அசுரகுருவாகிய சுக்கிரன், 'வந்திருப்பவன் மாயத் திருமால்; இவனுக்குத் தானம் கொடுக்காதே' என்று தடுத்தான். மாவலியோ குருவின் சொல்லையும் மீறி வாமனனுக்குத் தாரை வார்த்து பாரைக் கொடுத்தான். தானம் கொடுத்த மண்ணைத் திருமால் அளக்கத் தொடங்கினான். நெடு வடிவங்கொண்டு ஓரடியால் மண்ணுலகையும், மற்றோரடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாமடிக்கு இடமில்லாமலிருக்கவே மாவலியின் முடியில் வைத்து அவனைப் பாதாளத்துக் கிறைவனாக்கினான் என்பது இவ்வரலாற்றினை----

"ஒருகுறளா யிருநில மூவடிமண் வேண்டி உலகனைத்து மீரடியா லொடுக்கி ஒன்றும் தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன்......" என்பர் திருமங்கையாழ்வார்,

இனி திருமால் அண்டமளந்த வரலாற்றினை அடியில் வரும் சான்றுகள் கொண்டு தெளிக.

"கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை"(பரிபாடல் 3-20)

"ஞாலம் மூன்றடித் தாய முதல்வதற்கு" (கலித்தொகை- நெய்தற்கலி 7)

"மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்"(அகம் 220)
[நெடியோன்--திரிவிக்கிரமனாகிய திருமால்]

"ஏமம் ஆகிய நீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல் இசை"
(பதிற்றுப்பத்து 2-5)

"இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்..."
(பெரும்பாணாற்றுப்படை)

"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல்"
(முல்லைப்பாட்டு)

"நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்பொரு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக" (மதுரைக்காஞ்சி)

"கோள்வாய் மதியம் நெடியோன் விடுத்தாங்கு" (சிந்தாமணி)

"மூவுலகும் ஈரடியால் முறைதிறம்பா வகைமுடியத் தாவிய சேவடி"(சிலம்பு)

"திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்! நின் செங்கமல ரண்டடியால் மூலவுலகும் இருள்தீர நடந்தனையே"(சிலம்பு)

"வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோன் ஆடிய குடமும்"
                              (சிலம்பு)
எனப் பல இடங்களிலும் தமிழ்நூல்களிலும் திரிவிக்கிரமாவதாரம் பேசப்படுவது காண்க.

"வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய" (மணிமேகலை மலர்வளம் புக்க காதை)

"நெடியோன் குறளுரு வாகி, நிமிர்ந்து, தன் அடியிற் படியை அடக்கிய அந்நாள் நீரிற் பெய்த, மூரி வார்சிலை, மாவலி...."
(மணிமேகலை சிறைக்கோட்டம் - அறக்கோட்டம் ஆக்கிய காதை)

"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி" (மணிமேகலை உலகவறவி புக்ககாதை)

என்று மணிமேகலையிலும் பல இடங்களில் வாமனதிரிவிக்கிரமா வதாரங்கள் பற்றிக் கூறுவன நோக்குக.

உலகப் பொது மறை என்று கூறப்படும் திருக்குறளிலே வள்ளுவனாரும்.

"மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு"(திருக்குறள்-610)

என்று கூறுவது காண்க.

"கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன் கூனின் றளந்த குறளென்ப..." (பொன்முடியார்-திருவள்ளுவமாலை)

"மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான் ஞாலம் முழுதும் நயந்தளந்தான்..." (பரணர் -திருவள்ளுவமாலை)

"கண்ணகன் ஞாலம் அளந்தூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்---- நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி."
      (திரிகடுகம் கடவுள் வாழ்த்து)

"வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தா ருய்ய வுருவம் வெளிப்படுத்தாய் ---வெய்ய
வடுந்திற லாழி யரவணையா யென்று நெடுந்தகை நின்னையே யாம்".(புறப்பொருள் வெண்பா மாலை) 
எனப் பிற நூல்களிலும் உலகளந்த செய்தி வருவது காண்க.

தமிழ் அணங்குக்குச் சிறந்த அணிகலனாய் மிளிர்வது இறையனார் அகப்பொருளாகும். சிவபெருமானால் அருளிச்செய்யப்பெற்ற காரணத்தினால் இந்நூலுக்கு இறையனார் அகப்பொருள் என்று பெயர். இதற்க்கு உரை கண்டவர் தெய்வப்புலமை நக்கீரனார். இவர் கடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர் பெருந்தகையாவர், நக்கீரனார் எழுதிய உரையிலே எடுத்துக்காட்டாக அமைந்த பாடல்களில் சில திருமாலின் திரிவிக்கிரமாவதாரம் பற்றிப் பேசுகின்றன. இதனை அடியிற் காண்க;

வேழம் வினாதல்

"வருமால் புயல்வண்கை மான்தேர் வரோதயன் மண்ணளந்த திருமா லவன்வஞ்சி அன்னஅஞ் சீரடிச் சேயிழையீர்! கருமால் வரையன்ன தோற்றக் கருங்கைவெண் கோட்டுச் செங்கட் பொருமால் களிறொன்று போந்ததுண் டோநும் புனத்தயலே"(இறையனார் அகப்பொருளுரை 57)

"கொடியார் நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட கோன் பொதியிற் கடியார் புனத்தயல் வைகலுங் காண்பல் கருத்துரையான் அடியார் கழலன் அலங்கலங் கண்ணியன் மண்ணளந்த நெடியான் சிறுவன்கொல் லோவறி யேனோர் நெடுந்தகையே" (இறையனார் அகப்பொருளுரை -88)

"சென்றார் வருவது நன்கறிந் தேன்செருச் செந்நிலத்தை வென்றான் பகைபோல் மெல்லியல் மடந்தைமுன் வெற் நின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது நீள்புயலால்[பெடுத்து
பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே".
(இறையனார் அகப்பொருளுரை 317)

சங்கினை வாழ்த்துதல்

"தேனிற வார்கண்ணிச் செம்பியன் மாறன் செழுங்குமரி வானிற வெண்திரை மால்கடல் தோன்றினை மண்ணளந்த நீனிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம்புரைதீர் பானிற வெண்சங்கம் யார்நின்னின் மிக்க படிமையரே". (இறையனார்  அகப்பொருளுரை 314)

"திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்" என்ற நம்மாழ்வார் வாக்கினுக்கிணங்க, திருமாலின் பெருமையினை அரசர்கள் மேல் ஏற்றிக் கூறுவது பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்கள் மரபு. இம்மரபுக்கேற்ப நக்கீரர் உரையிலும் மாலின் புகழை மன்னன்மேல் ஏற்றிக் கூறினார். மேலும் சில பாடல்களும் காண்க:--

"வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்." (யாப்பருங்கலக் காரிகை மேற்கோள்)

"முன்புலக மேழினையுந் தாயதுவு மூதுணர்வோர் இன்புறக்கங் காநதியை யீன்றதுவும் --நன்பரதன் கண்டிருப்ப வைகியதுங் கான்போ யதுமிரதம் உண்டிருப்பா ருட்கொண் டதும்

வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும் அந்தச் சிலையினைப்பெண் ணாக்கியதும் -- செந்தமிழ்தேர் நாவலன்பின் போந்ததுவு நன்னீர்த் திருவரங்கக் காவலவன் மாவலவன் கால்." (தண்டியலங்காரம் குளகச் செய்யுள் மேற்கோள்)
[வெந்த கரி -- கரிக்கட்டையான பரீட்சித்து. செந்தமிழ் தேர் நாவலன் --திருமழிசைப்பிரான்]

உலகளந்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் தண்டியலங்காரத்தில் மேலும் பல உண்டு. விரிவுக்கஞ்சி விடுத்தனம். இனி கம்பர் கூறுவதைக் காண்போம்.

"நின்றதாண் மண்ணெலா நிரப்பி யப்புறம் சென்றுபா விற்றிலே சிறிது பாரெனா ஒன்றவா னகமெலா மொடுக்கி யும்பரை வென்றதாள் மீண்டது வெளிபெ றாமையே."(கம்பராமாயணம்- வேள்வி 36)

பரம சைவராக விளங்கிய கவி ஒட்டக்கூத்தரும் இவ்வரலாற்றினை விட்டு வைக்கவில்லை. நக்கீரரைப் போல மாலின் பெருமையை மன்னன் மேலேற்றிக் கூறுகிறார்:----

"நவ்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால் வவ்வி யிருதோளில் வைத்தமால்."(குலோத்துங்க சோழன் உலா)

"மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப் புக்கோ ரருவினைபோற் போயிற்றே-- அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும் மானகத்தேர்ப் பாகன் வடிவு." (புகழேந்திப் புலவர்: நளவெண்பா, கலிநீங்கு காண்டம் -7)
என்றார் புகழேந்தியும். கம்பர் ஒட்டக்கூத்தர், புகழேந்தி மூவரும் சமகாலப் புலவர்கள் என்பது பலர் கொள்கை. இவர்கள் மூவருமே உலகளந்த உத்தமன் வரலாற்றினைக் கூறுவது குறிக்கொள்ளத் தக்கது.

"போதங்கொண் மாணுருவாய்ப் புவியிரந்த அஞ்ஞான்று புகன்று கொண்ட வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டும் கற்றே"
(கலிங்கத்துப்பரணி)

என்றார் சயங்கொண்டாரும்.

"தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள் நீடிய உலகெலா மளந்து நீண்டதாள் ஓடிய சகடிற வுதைத்துப் பாம்பின்மேல் ஆடியுஞ் சிவந்ததா ளென்னை யாண்டதாள்"
(வில்லிபாரதம்)
என உலகளந்த திருவடியின் பெருமையினை வில்லிபுத்தூரார் பாரதத்தில் நயம்பட உரைப்பதை உணர்க.

"பூவரு மயன்முதல் யாவரு மறியா
மூவுல களந்தநின் சேவடி வாழ்த்தி"
(திருவரங்கக் கலம்பகம்)

"அடலவுணன் பாற்குறுகி அற்பநிலங் கையேற்றாய் கடலகிலம் யாவுமுந்தி காட்டுவது கண்டிலையோ."
(அழகர் கலம்பகம்) 
என்பனவும் காண்க.

இதுவரை சங்க கால இலக்கியங்களிலிருந்தும், தொன்மையான சிறந்த தமிழிலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் காட்டப்பட்டன. இனி, காலத்தால் முற்பட்ட முதலாழ்வார்களுடைவும், திருமழிசைப் பிரானுடையவுமான அருளிச்செயலமுதத் திருவாககினை மட்டும் காண்போம். மற்றைய ஆழ்வார்கள் கூறுவதை திவ்யப்பிரபந்தத்தில் கண்டு தெளிக.

"நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசையளந்த செங்கண்மால்"
(பொய்கையாழ்வார்)

"அடிமூன்றில் இவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய்"
(பூதத்தாழ்வார்)

"வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண் நீயளந்து கொண்ட நெடுமாலே"
(பேயாழ்வார்)

"தாளால் உலகம் அளந்த அசைவேகொல் வாளா கிடந்தருளும் வாய்திறவான்"
(திருமழிசையாழ்வார்)

இனி, அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பான வெண்பாவின் மேல் பகுதியைக் காண்போம்.

உலகுண்டபொழுது......மாலென்பதென்?

இதன் கருத்து;

திருமால் பிரளய காலத்தில் அழியாமல் காக்க அனைத்துலகங்களையும் உண்டான். உலகங்கள் அனைத்தும் அவன் உதரத்துள் ஒடுங்கின. அக்காலம் பிரம்மன், சிவன், தேவர், மனிதர் முதலிய அனைவரும் திருமால் திருவைற்றுள் உறைந்தனர். சிருஷ்டி காலத்தில் தன் கருணையினால் உண்ட உலகனைத்தையும் உமிழ்ந்தான். அப்போது பிரம்மன் முதல் அனைத்துலகங்களும், பிறை சூடியாகிய சிவனும் தோன்றினர். உண்மை இவ்வாறிருக்க: சிவபெருமான் அடியைத் திருமால் தேடினான் என்பது எவ்வாறு பொருந்தும்? என்பது கருத்து. இக்கருத்தினை..

"அன்றுலக முண்டுமிழ்ந்தா யகிலசெகத் காரணனீ என்றுனக்கே யாளானோம் இமிழருவி வடமலைவாழ் மன்றல்கமழ் துழவோயுன் வயிற்றுளெங்களொடு கடை சென்றுறைந்து மீளவருந் தேவரை யாமதியோமே."[நாட்
என்று திருவேங்கடக் கலம்பகம் தெளிவாகக் கூறும்.

இனி இதன் சான்றுகள்:----

ஐம்பெரும் பூதங்கள், சூரிய சந்திரர்கள், மற்ற கிரகங்கள், பன்னிரு ஆதித்தியர், அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், அசுவிநீ தேவர்கள், இயமன், உருத்திரன் முதலியவர்களும், மூவேழ்உலகமும், அவற்றில் உள்ள சராசரஜீவர்களோடு, உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் திருமாலிடத்திலிருந்தே தோன்றினர் என்பதைப் பரிபாடல் தெளிவாக விளக்குவது காண்க;

"மா அயோயே! மாஅயோயே!
மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மா அயோயே!
தீவளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்
ஞாயிறுந் திங்களும் அறனும் ஐவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்
தாமா இருவரும் தருமனும் மடங்கலும்
மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை."(பரிபாடல்-3)

மேலும், பரிபாடலிலே திருமாலின் வராகாவதாரம் பேசபபடுகிறது. ஆனால் வராக வடிவெடுத்து சிவனடியைத் தேடியதாக எங்குமே கூறவில்லை. ஊழி காலத்தில் நீரினுள் அமிழ்ந்த பூமியை வராகாவதாரம் எடுத்து மீண்டும் நிலைநிறுத்திய திருமாலின் முதுமையை எவரும் அறியார் என்றே உள்ளது.

"கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ! நிற்பேணுதும் தொழுது". (பரிபாடல் - 2)
என்றும்,

"புருவத்துக் கருவல் கந்தரத்தால்
தாங்கி, இவ்வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்".(பரிபாடல்-4)

என்றும் பரிபாடல் முதலான சங்கநூல்கள் திருமால் பெருமையைப் பாடுகின்றனவேயொழிய, சிவனடியை வராக வடிவெடித்துத் திருமால் தேடியதாக எங்குமே இல்லை. இது ஸுதர்சனம் ஆசிரியரால் சங்ககாலத் தமிழர் சமயத்திலும், சாதிமத ஆராச்சியிலும் விரிவாக நிலைநாட்டப்பெற்றுள்ளது. ஸுதர்சனம் வெளியீடான சோலைமலைக்குறவஞ்சியும்.

"சாலவே அனந்தன் தலையில் இடுப்புவியெலாம்
கோலமோர் துகளெனக் கொடுவந்து வைத்ததால்
சுவேத வராக கல்பப்பேர் சொல்லி
வேதியர் முதலாய் இனம்சங்கல் பிக்கிறார்
அப்படிக் கிருக்க அருணைக் கல்லடியை
எப்படி அறியா திருந்ததென் றிசைத்தாய்?."

என்று கூறிச் செல்வது காண்க.

இனி.  கூரேச விஜயத்தில், 'அடிமுடி தேடிய கட்சி என்ற அத்தியாயத்தின் உரைத் தொகுப்பினை அடியிற் காண்க:

"பிரளய காலத்தில் சிவனையும், சிவனைப் பெற்ற பிரமனையும், அவனால் படைக்கப்பட்ட தேவ, மனுஷ்ய, திரியக்ஸ்தாவரங்களையும், சிவனால் வசிக்கப்பட்ட கைலை முதலிய அஷ்டகுல பர்வதங்களையும், தன்னுடைய குக்ஷியில் தரித்திருக்க, இந்தச் சிவன் விஷ்ணுவினுடைய குக்ஷியை விட்டு நழுவி இருந்தானோ? இப்படியிருக்க விஷ்ணு வராகாவதாரம் பண்ணி, சேதனனான சிவனுடைய பாதத்தைத் தேடினாரென்பது வேத விருத்தமன்றோ?.........

"திருவண்ணாமலையின் பிரபாவத்தைக் கேளுங்கள். அதற்கு சுதர்சனகிரியென்று திருநாமம்.  அதனுடைய சரித்திரமாவது--- ஜைமினி பாரதத்தில் ஆரண்ய பர்வத்தில் தர்மநந்தனனுக்கு ரோமசரிஷி திவ்யதேசங்களின் பிரபாவங்களில், திருக்கோவலூர் திவ்யதேசத்தின் சரித்திரம் சொன்னவுடனே சுதர்சநகிரி மகாத்மியத்தைச் சொல்லுகிறார்....

"அதாவது; ஜகத் சிருஷ்டியின் ஆதியில் திருவாழி ஆழ்வானை லோக சிருஷ்டி பண்ணச் சொல்லி அனுப்ப, அவர் அப்படிச் செய்யாமலிருந்ததின்பேரில் பிரம்மாவை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணச் சொல்லி நியமிக்க, அவரும் அப்படியே வெகுகாலம் கழித்ததின்பேரில், சிவனை சிருஷ்டித்து ஜகத்  சிருஷ்டி பண்ணும்படி அனுப்ப, அவரும் அப்படியே அலட்சியமாயிருந்ததின்பேரில் ஒரு வராஹத்தை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும் படி அனுப்பினார். அந்த வராஹத்தைக் கண்ட பிரம்மா, நீர் யார்? எதற்கு வந்தீர்?' என்று கேட்க, 'நான் சிருஷ்டி பண்ணும்படி ஸ்ரீமகா விஷ்ணு (வினாலே) அனுப்ப வந்தேன் என்ன. அதற்க்கு பிரம்மா கோபித்து, 'என்னை சிருஷ்டிங்கும் படி அனுப்பியிருக்கிறாரே' என்று வராஹத்துடன் வாதம் செய்கையில் சுதர்சந ஆழ்வான்,
'ஒருவருக்கொருவர் சம்வாதம் நேரிட்டால் மத்யஸ்தராவார்கள் இருவரையும் சமாதானம் பண்ணாமல் பார்த்துக்கொண்டிருப்பார்களாகில் அவர்களுக்கு நரகமுண்டு' என்று வேதத்திற்சொல்லுகையால் தான் மத்யஸ்தராய் வந்து, 'ஓய்! வராஹ மூர்த்தியே! நீர் லோக சிருஷ்டி பண்ண வந்தேன் என்று சொல்லுகிறீர், உம்முடைய வியாபாரம் மிகப் பெரிதாயிருக்கையால் இதோ நான் பர்வத ரூபமாயிருக்கிறேன், என்னை நீர் கெல்லுவீராகில், நீர் சிருஷ்டிக்க சாமர்த்தியமுடையவரென்று நம்புகிறேன்' என்று சொன்னார்."

வராஹ மூர்த்தியும் அப்படியே அந்த சுதர்சநகிரியை தம்முடைய கோர தந்தங்களினாலே பேர்த்தெறிந்தது மல்லாமல் விஸ்வரூபம் தரித்து மஹத்தான உக்கிரத்துடனே சேவை சாதிக்கையில், திருவாழியாழ்வானும் பிரம்ம ருத்திரர்களும் வேத வாக்கியங்களினாலே தோத்திரம் செய்து, கோபத்தை சாந்தம் பண்ண வேண்டும் என்று பிரார்த்திக்கையில், அப்படியே ஸ்ரீஸ்வாமியானவர் திருவுள்ளத்தில் சந்தோசமுண்டாய் பிரம்மாவை அழைத்து 'நீர் லோக சிருஷ்டியைப் பண்ணக்கடவீர்' என்றும், ருத்திரனை அழைத்து 'நீர் சங்காரத் தொழிலைப் பண்ணக் கடவீர்' என்றும் நியமிக்க; அப்போது சிவன் ஸ்வாமியை மிகவும் தோத்திரம்செய்து, 'இந்த கொடிய வியாபாரம் அடியேனுக்கு நியமிக்க வேண்டாம், என்று கண்ணுங் கண்ணீருமாய் அழுததின்பேரில், ஸ்வாமி கிருபை கூர்ந்து, 'ஆகில் நீர் சூரியனைப் பார்க்கக்கடவீர், அவனிடத்தில் நின்றும் வைவஸ்வத மனு என்கிற இயமன் உண்டாவான், அவனைக்கொண்டு நித்ய சம்ஹாரங்களைப் பண்ணுவிக்கடவீர், முடிவில் நீர் சுதாவாய் பிரளயகால ருத்திர ரூபத்தைத் தரித்து சர்வ சம்ஹாரம் பண்ணக்கடவீர்' என்று நியமித்தார்

"சிவனுக்கு அந்த சுதர்சநகிரியின் அடிவாரத்தில் ஒரு ஆலயம் பிரஷ்டை பண்ணும்படியும், தம்மையும் அவ்விடத்தில் விஷ்ணுஸ்தலமாய் பிரதிஷ்டை பண்ணும்படியாகவும் நியமித்து, உத்ஸவங்கள் நடந்தேறி வருகிறதாய் ஜைமினி பாரதத்தில் ஏழு அத்தியாயங்களில் இந்தச் சரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது"

"அதன் பின் வல்லாளகண்டன் என்ற அரசனால் அந்த விஷ்ணுஸ்தலம் சிவஸ்தலமாக்கப் பட்டது. அதற்க்கு ஒரு மாகாத்மியமும் உண்டாக்கப்பட்டது".

"இந்த சுதர்சநகிரிக்கும் அண்ணாமலை என்ற பெயருண்டாக்கி, சிவனுக்குப் பாட்டனான விஷ்ணுவானவர் வராஹரூப மெடுத்துப் பேரனுடைய பாதத்தைத் தேடினார் என்றும், சிவனுக்கு பிதாவான பிரம்மாவானவர் குமாரனுடைய சிரசைத் தேடினார் என்றும், இந்தப் பொய்களுக்குத் தகுதியாய், தாழம்பூ பொய்சாட்சி சொன்னதாயும், அதற்க்காகத் தாழம்பூ தேவார்ஹமல்லாதே போகக்கடவதென்று சபித்ததாயும் இந்தக் கதை ஸ்காந்தபுராணத்தின் பூர்வபாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் சொல்வது வேதங்களுக்கும் இதிஹாசமாகிய பாரதத்திற்கும், புராணங்களுக்கும் விரோதிக்கிரதுமல்லாமல் பௌத்திரன் காலைப் பாட்டன் தேடுகிறதும், புத்திரன் சிரசைப் பிதா தேடுகிறதுமாகச் சொல்லுகிறது யுக்தி விரோதமுள்ளதாய், பரிஹாஸாஸ்பதமாகவிருக்கிறது."

"விஷ்ணுவானவர் பாதளத்தில் கீழே ஆதிகூர்மமாயும், அதற்க்குமேல் ஆதிசேஷனாயும், அவதரித்திருக்கச் சிவனுடைய காலைத் தேடிக் காணாதே போய்விட்டாரென்று சொல்வது புராண விரோதமென்று கண்டித்தார்."
[கூரேச விஜயத்தின் உரைத் தொகுப்பு]

எனவே அடிமுடி தேடிய கதை ஒரு பொய், புரட்டு, புனைப்பு கதை என்பது தெரிகிறது.

"சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்..!
கூரேசர் திருவடிகளே சரணம்...!

ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய 'பரப்பிரம்ம விவேகம்' என்னும் மகத்தான படைப்பில் இருந்து]

Sunday, February 25, 2018

கண்ணைப்பிடுங்கி அருச்சனைசெய்து திருமால் சிவனிடம் சக்கரம் பெற்றார் என்ற கதைக்கு மறுப்பு.!

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||

"முன்பு ஜலந்தராசுரனை வதைப்பதற்காக திருமால், தாமரை மலர் ஓர் ஆயிரத்தைக்கொண்டு கைலாசாதிபதியை அர்சித்தார். அதில் ஒருமலர் குறைந்திருக்கவே, தம் கண் ஒன்றை இடந்து சிவனடியில் சாத்தினார். பரந்தாமனின் இச்செயலைப் பார்த்து மகிழ்ந்து பரமசிவன் அவருக்கு சக்கராயுதத்தை அளித்தார்"
என்னும் பெரும் மூட பங்கத்திறக்கு மறுப்பு..!

"சக்கரத்தை மிக்கமலர் சாத்தியுபா சித்ததனால் முக்கவட்டுச் சூலமுனம் பெற்றான் ---நக்கனெனலென்?  தாமதநூற் பொய்யறியா தார்"

'சக்கரத்தை.....அறியாதார்' ---நக்க(திகம்பர) பிரானாகிய சிவன் திருவாழியாழ்வானாகிய சுதர்சன சக்கரத்தை ஏராளமான மலர்களைக்கொண்டு ஆராதித்து மூன்று பிளவாக உள்ள சூலாயுதத்தைப் பெற்றான் என்று வேதங்கள் கூறிநிற்க; தாமத நூல்களிலே கூறப்படும் பொய்யை உணராத நீங்கள் திருமாலுக்கு சிவன் சக்கராயுதத்தைக் கொடுத்தார் என்பது எக் காரணம் பற்றியோ? என்பது இதன் கருத்து.

இனி இதற்கு மேற்கோள்;

"மொழியிருக்கு வேதமதி லெட்டா மட்டகத்தின் மூன்றாமத் தியாயமதின் மூன்றெனும் வர்க்கத்து மெழில் கொளந்த வேதத்தி லெட்டா மட்டகத்தி
லேழாமத் தியாயமதி லெட்டெனும் வர்க்கத்து மிழிவிலெசு ரெனும் வேதாரணந் தனிலேயாதி யெனும் பிரசிநத்திற் பன்னொன்றெனு மநுவாகத்து மொழிவிலதர் வணவேத சிரத்து முயர்சாமத் துத்தர ருக்கினி லொன்பா னத்தியாயத்தும்"

"கருதரிய பாகவதந் தனிலிரண்டா மூன்றாங் கந்தத்துஞ் சுந்தரமால் விட்ணு புராணத்துந் தருமிராமா யணத்திரா வணற்கு மண்டோ தரியுரைக்கும் புத்தியினும் வராக புராணத்துண் மருவிய உத்தரகாண் டந்தனிலு மெங்கள் பெருமான் மாதவனைச் சங்காழி நாதனென வோதும் பொருளது நால்வேத புராணத்தின் வகைசொன்னேன் புரையறக் கண்டுணர்மின் எனப்புகலுவன் மேன்மேலும்"[கூரேச விஜயம்]

ரிக், யஜுர், ஸாம அதர்வணமென்னும் நான்கு வேதங்களிலும், விஷ்ணுபுராணம், வராஹபுராணம், இராமாயணம், பாவதம் முதலிய இதிகாசபுராணங்களிலும் திருமாலுக்குச் சக்கரம் அனாதியானது என்று முழங்கியிருப்பதாகக் கூரேச விஜயத்தில் இப்பாடல்களில் கூறப்படுவது காண்க.

மேலும், "சிவனைத் திருமால் சம்ஹாரகர்த்தாவாக்கும் காலத்தில் அதற்குரிய ஆயுதத்தை எனக்கு அருளவேண்டுமென்று சிவன் திருமாலைக் கேட்க; திருமாலும் எனது சுதர்சன சக்கரத்தைப் போற்றி அதற்க்குரிய படையினைப் பெறுவாயாக என்று கூறினார். அரனும் அவ்வாறே செய்து சூலாயுதத்தைப் பெற்றுக்கொண்டார் என்று அகஸ்திய சம்ஹிதையிலும், விஷ்ணுபுராணத்திலும் கண்டுகொள்ளுங்கள்" என்ற கருத்தமைந்த-----

"அரன்றனைச் சங்கார கர்த்தனாக்கிடும் போதவனங் கத்தொழிலுக் கியைந்த படையருளு மெனக்கேட்ப வரன்தருமென் சுதரிசனச் சக்கரத்தைப் போற்றி வன்படை கொளெனச் சூலமப்படியே கொண்டான் திரஞ்சொலிது வகத்திய சங்கிதையி லெழில் விட்ணு செய்யபுரா ணத்தினுங் கண்டுணர்மின் எனத்தெரிந்து பரம்பொருள் மாலாகு மரனன்றென் றேசைவப் பாவலரைப் பார்த்திபனைப் பார்த்துரை செய்திப்பால்".
[கூரேச விஜயம்]
எனும் கூரேச விஜயப் பாடலையும் நோக்குக.

இனி; தமிழ் நூல்களில் உள்ள சான்றுகள்;

சிவன், திருமாலைக் கூறுமிடங்களில், சிவனால் திருமாலுக்குச் சக்கரம் அளிக்கப்பட்டது என்ற கதை சங்கத் தமிழ் நூல்கள் எதிலுமே காணப்படவில்லை. சக்கரப்படை திருமாலுக்கே உரியது என்றும், அனாதிகாலமாகத் திருமால் அதனைத் தம் திருக்கரத்திலே தரித்திருக்கிறார் என்றுமே தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

"இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே"
[நற்றிணை: க.வா]

என்ற நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடலில் 'திகிரியோனே வேதமுதல்வன்' என்று கூறுவதிலிருந்து திருமாலுக்குச் சக்கரம் அனாதி என்பது பெறப்படும். மேலும், திருமாலைக் கூறுமிடங்களிலெல்லாம் திருமாலையும் சக்கரத்தையும் இணைத்தே பழந்தமிழ் நூல்கள் கூறுவதை அடியிற் காண்க;

"பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய மன்னிய முதல்வன்" [பரிபாடல் 1]
[சக்கராயுதத்தை வலது திருக்கரத்திலே தரித்து(அழிவில்லாமல்) என்றும் நிலைத்திருக்கும் முதல்வன்] எனப் பரிபாடல் கூறுவது நோக்குக. மற்றும் உள்ள சங்கநூல்களிலும் சக்கராயுதம் திருமாலுக்கே உரியதாகக் கூறப்பட்டுள்ளதென்பதை அடியிற் காண்க;

"தொல்கதிர்த் திகிரியான் பரவுதும்" [முல்லைக்கலி 4]
இதில் "கதிர்களோடு கூடிய பழமையான சக்கரத்தை உடைய திருமால்" என்பது காண்க.

"பானிற வுருவிற் பனைக்கொடி யோனும் நீனிற வுருவி னேமி யோனுமென் றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்கு."[புறம்: 58]

"நேர் கதிர் நிறைந்த நேமி அம்செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்."
[அகம்: 175]

"வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக் கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய் அலங்கற் செல்வன் சேவடி பரவி."
[பதிற்றுப்பத்து: 31]

"நனந் தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறிந்த மா தாங்கு தடக்கை."
[முல்லைப்பாட்டு]

"வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லி னெறிகொள் படிவத்தோய் நீயும்--- பொறிகட் கிருளீயும் ஞாலத் திடரெல்லா நீங்க அருளீயும் ஆழி அவன்."[புறப்பொருள் வெண்பா மாலை]

"பகையணங் காழியும் பால்வெண் சங்கமுந் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிள ரார மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற பொலிந்து தோன்றிய செங்க ணெடியோ னின்ற வண்ணமும்."
[சிலம்பு: காடுகாண்காதை 47-51]

"கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ண னிடத்துளாள்"
[சிலம்பு: ஆச்சியர் குரவை 2856]

"பொன்னணி நேமி வலங்கொள் சக்கரக்கை மன்னுயிர் முதல்வன்.."
[மணிமேகலை]

"அக்கணத் தனுமனு மவணின் றேகியத் திக்குறு மானத்தைச் செல்வ னெய்தியச் சக்கரத் தண்ணலைத் தாழ்ந்து நின்றனன் உக்குறு கண்ண நீ ரொழுகு மார்பினான்."[கம்பராமாயணம்: யுத்த 328]

"நின்றவ னிருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த நேமிப் பொன்றிகழ் படையோன் அந்தப் பொய்த்துயிற் பாயல் நீங்கி."
[வில்லிபாரதம்: வாசுதேவனைப் படைத்துனை அழைத்த சருக்கம் 11

மேலே கண்ட பாடலுக்கு; "எம்பெருமானுக்குச் சக்கரம் முதலியன---பகைவர்களுக்கு அச்சம்செய்து ஆயுதகோடியிலும், அடியார்களுக்கு அழகுசெய்து ஆபரணகோடியிலும் அமைதலால், நேமிப் பொன்திகழ் படை' என்றார" என்ற வை.மு.கோ. உரை நயம் காண்க.

"புனையாழி அங்கைப் புயல்வளர் பாற்கடற் பூங்கொடிவாழ்"
[தஞ்சைவாணன் கோவை]

"பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின் படர்களையு மாயனிவ னென்றுதெளி வெய்தத் தண்டுதனு வாள்பணில நேமியெனு நாமத் தன்படைக ளானதிரு வைம்படைத ரித்தே."
[கலிங்கத்துப்பரணி: 240]

"சக்கரமு தற்படையொ ரைந்துமுத னாளே தன்னுடைய வானவத னாலவைந மக்குத் திக்குவிச யத்தின் வரு மென்றவைப யிற்றிச் செங்கைமலர் நொந்திலசு மந்திலத னக்கே."
[கலிங்கத்துப்பரணி: 247]

பரணிகளில் முதன்முதல் தோன்றியது கலிங்கத்துப் பரணி.
"பரணிக்கோர் செயங்கொண்டான்" என்ற புகழ் கொண்ட பேராசிரியரால் பாடப்பட்டது. ஒட்டக்கூத்தர் தாம் பாடிய தக்கயாகப் பரணியில், தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு' என இதனை தெய்வப் பரணி என்று கூறுவர். கவி ஒட்டக்கூத்தராலே புகழ்பெற்ற பெரும்புலவர் செயங்கொண்டார்.
இவரது கலிங்கத்துப் பரணியில்
'தண்டுதனு வாள்பணில நேமியெனுநாமத் தன்படைகளான திரு வைம்படை தரித்தே' எனவும்
'சக்கரமு தற்படையொ ரைந்துமுத னாளே, தன் னுடைய வானவதனால்' எனவும் கூறுவதிலிருந்து திருமால் ஒருவனே அனாதிகாலமாகச் சக்கரம் முதலிய ஐம்படைகளையும் தரித்திருக்கிறான் என்பது பெறப்படுகிறது.

"சேய ரும்பொருள் செல்வ மிவையென நேயம் வைக்கி னிகரில் வெருத்தரும் ஆயுங் காலிவ் விருப்பறுத்து ஆழிசேர் மாயன் தாளில் மனவைத்தி மன்னனே."[பாகவதம் 1531]

ஆழ்வார்களும்; 'வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு'
'சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையன்' 'சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை' 'தழலெடுத்த போராழி ஏந்தினான்'
'என்னாழி வண்ணன் பால் பொன்னாழி கண்டேன்' 'கார்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்' கைகழலாநேமியான்' என்று கூறுவது நோக்குக.

குறிப்பாகச் சங்ககால இலக்கியங்களிலும் பிற பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிவபெருமானிடமிருந்து திருமால் சக்கரம் பெற்றார் என்ற கதை எதிலுமே காணப்படவில்லை. அனாதி காலமாகத் திருமால் சக்கராயுதத்தைத் தரித்திருக்கிறார் என்றே தமிழிலக்கியங்கள் உரைக்கின்றன என்பது கருதத்தக்கது.

எனவே சக்கரத்தானான சர்வேஸ்வனுக்கு சுதர்சன சக்கரம் அனாதியானது என்பது தெரிகிறது.
துஷ்டர்களை அழிப்பது போல் பாஷாண்ட புனைப்பு கதைகளையும், பாஷாண்டார்களையும். எம்பெருமான் சுதர்சன ஆழ்வாரை ஏவி சங்காரம் பண்ணிடுவான் என்பதும் சத்யம்.

"சுதர்சனாழ்வார் திருவடிகளே சரணம்..!
"எம்பெருமானார் திருவடிகளே சரணம்...!
"சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்"

ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய "பரப்பிரம்ம விவேகம்" என்னும் உன்னத படைப்பில் இருந்து]

Saturday, February 24, 2018

வேதமுதல்வன் பகவான் ஸ்ரீஹரியே!

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||

சைவர்கள் தங்கள் சைவாகமத்தை வைத்துக் கொண்டு "எங்கள் ஈசன் தானே வேத முதல்வன்" என்று வாதிடுகிறார்கள்! ஆனால் அனைத்து வேதங்களின் முடிவே ஸ்ரீமந் நாராயணனே(ஹரி) என்று வேதாந்திகளான ஸ்ரீராமானுஜர, மத்துவர், ஆதிசங்கரர் மூவரும் வேதங்கள் சொல்லும் நாயகன் நாராயணனே என்று முற்றுப்புள்ளி  வைத்ததை இவர் அறியார்கள் போலும்..!

பிரம்ம ஞானத்தை தரும் இருக்கு, யஜூர், ஸாமம், அதர்வணம் என்ற வேதம் நான்கினையும் அந்தணர்கள் ஓதத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் "ஹரி: ஓம்" என்ற சொல்லைச் சேர்த்துச் சொல்லுவதை இவர்கள் அறிவில்லையோ? உலகிற்க்கு ஆதியாவானும், அந்தமாவானும் அரியே என்பதை உணர்ந்தவன்றோ அவர்கள் அவ்வாறு கூறுகிறனர்.

வேதத்தில் ஆதியிலும், அந்தத்திலும் சொல்லப்படுகிற 'ஹரி:' என்ற சப்தத்திற்கு வியாஸர்
'பிரம்மாவையும், இந்திரனையும், உருத்திரனையும், இயமனையும், வருணனையும் நிக்ரஹித்து ஹரிக்கின்ற காரணத்தாலே ஹரி என்று சொல்லப்படுகிறான்' என்று அருளிச்செய்கிறார். இதற்க்கு சங்கராசாரியர் செய்த அத்வைத பாஷ்யத்திலும் இப்படியே வியாக்யானம் செய்திருக்கிறார்". என்று கூரேச விஜயத்தில் கூறுவதை நோக்குக.

"எல்லா உலகங்களுக்குத் தாயும், தந்தையும், கர்மபலத்தை விதிப்பவனும், அறியவேண்டிய பொருளும், பாவனமானவனும், வேதத்திற்கு முதற்காரணமான ஓங்காரம் என்னும் பிரணவ ஸ்வரூபியும், இருக்கு, யஜூர், சாமவேதங்களும் நானே" என்று ஸ்ரீ பகவத்கீதையில்,
"பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: |
வேத்யம் பவித்ர மோங்கார: ருக் ஸாம யஜூரேவ ச||"
(பகவத்கீதை 9-17) என்று கீதாச்சாரியனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச்செய்திருப்பது காணத்தக்கது.

"வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே|
வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாணாத்மநா||"
[வேதத்தினால் அறியத்தக்க சக்ரவர்த்தித் திருமகன் ஸ்ரீராமனாக அவதரித்தபோது, வேதம் ராமாயணமாக வால்மீகியிடம் இருந்து அவதரித்தது.] என்று ஸ்ரீராமாயணத்தின் பெருமை கூறும் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருப்பது மேலே காட்டிய கீதைப் பொருளை உணர்த்துவதை காணலாம்.

மேலும், தமிழ் இலக்கியங்களில் மிகப்பழைமையான பரிபாடலில் திருமாலைக் கூறுமிடங்கள் தோறும், 'நாவல் அந்தணர் அருமறைப் பொருளே' என்றும், 'முதுமொழி முதல்வ' என்றும்,

'தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்து நீ; வேதத்து மறைநீ; பூதத்துள் முதலும் நீ;"    
என்று கூறிச் செல்லுமிடத்து, 'வேதத்தில் மறைந்துநிற்க்கும் பொருள் நீயேயாவாய்' என்று விளக்குவது உணரத்தக்கது.

"வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே"
என்ற நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலின் இறுதி இரண்டடிகளுக்கு, "வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள் குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனேயென்று ஆன்றோர் கூறிநிற்பர்; ஆதலின், யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு." என்று பொருள் கூறி அவனை விளக்குமிடத்து, 'இறைவனது பரத்துவங் கூறுவார் வேதமுதல்வன்றார். எனப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் எழுதும் உரையை நோக்குக.

விடமுண்ட கண்டனே வேதமுதல்வனாபின், அந்தணர்கள் அவ்வேதங்களை ஓதும்போதெல்லாம் 'ஹரி: ஓம்' என்று தொடங்குவதும், முடிக்கும்போதும் 'ஹரி: ஓம்' என்று முடிப்பதும் பொருந்துமோ? "ஹரி: ஓம்" என ஓதுவது உலகிற்கு ஹரியே வேதத்தினுட்பொருள் என்பதை விளக்கவன்றோ? இந்த உண்மையை ராமாயணத்தைத் தொடங்கும்போதே,

"ஆதி யந்த மரியென யாவையும் ஓதி னாரல கில்லன வுள்ளன
வேத மென்பன மெய்ந்நெறி நன்மையன் பாத மல்லது பற்றிலார்"(3)
என்று கவிச்சக்ரவர்த்தி கம்பர் பெருமான் தெளிவுபடுத்தினார்; இராமாயாணத்தின் பிற இடங்களிலும் திருமாலே வேத முதல்வன் என்பதை விளக்கினார்

"வேதங்க ளறைகின்ற வுலகெங்கும் விரிந்தனவுன் பாதங்க ளிவையென்னிற் படிவங்க ளெப்படியோ?  ஓதங்கொள் கடலன்றி யொன்றினோ டொன்றொவ்வாப் பூதங்கள்தொறு முறைந்தால் அவையுன்னைப் பொறுக்குமோ"[ஆரணிய-விராதன்வதை - 48]

என வேதங்கள் அறைகின்ற பாதங்கள் திருமாலின் திருவடியே என்று விராதன் துதியிலும், வாலி தன் பிழையினைப் பொறுக்குமாறு இராமனை வேண்டி, சுக்ரீவனுக்குச் சொல்லுமிடத்து,
[வாலிவதைப்படலம் 132]

"மறைகளு முனிவர்யாரு மலர்மிசையயனு மற்றைத் துறைகளின் முடிவுஞ்சொல்லுந் துணிபொருள் நுனிவில் அறைகழலி ராமனாகி யறநெறி நிறுத்தவந்த    [லேந்தி இறையொரு சங்கையின்றி யெண்ணுதி யெண்ணமிக்கோய்" என்றும், சுந்தரகாண்டம் காப்புச்செய்யுளில்,
"அலங்கலிற் றோன்றும் பொய்ம்மை அரவெனப்பூத மைந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபா டுற்ற வீக்கம் கலங்குவ தெவரைக் கண்டா லவரென்பர் கைவி லேந்தி இலங்கையிற் பொருதா ரன்றே மறைகளுக் கிறுதி யாவார்"  என்று
'மறைகளுக்கிறுதியாவார் எனக்கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது.  இரணியன் வதைப்படலத்தில் பிரகலாதன் வாயிலாக, "தொல்லை நான்மறை வரன்முறைத் துணிபொருட் கெல்லாம் எல்லை கண்டவ னகம்புகுந் திடங்கொண்ட தென்னுள்"(28) என்றும்,

"ஆரைச் சொல்லுவ தந்தண ரருமறை யறிந்தோர் ஓரச் சொல்லுவ தெப்பொரு ளுபநிட தங்கள் தீரச் செய்வினை தேவரும் முனிவருஞ் செப்பும் பேரைச் சொல்லுவ தல்லது பிறிதுமொன் றுளதோ"(29)      என்றும்,

"வேதத் தானும் நல் வேள்வியி னானுமெய் யுணர்ந்த போதத் தானுமப் புறத்துள எப்பொரு ளானும் சாதிப் பார்பெறும் பெரும்பதந் தலைக்கொண்டு சமைந்தேன் ஓதிக் கேட்பது பரம்பொரு ளின்னமொன் றுளதோ"  (30) 

என்றும் வேதப்பொருளை உணர்த்துவதையும், மேலும், பிரகலாதன் இரணியனது வினாவிற்கு விடையிறுக்கும் பொழுது "வேதத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் கூறும்
"ஹரி: ஓம்" என்ற திருமாலின் திருநாமததையே நான் கூறினேன் எனக் கூறும்.

"சுருதி யாதியில் தொடங்குறு மெல்லையிற் சொல்லும் ஒருவன் யாவர்க்கும் நாயகன் திருப்பெய ருணரக் கருதக் கேட்டிடக் கட்டுரைத் திடர்க்கடல் கடக்க உரிய மற்றிதின் நல்லதொன் றில்லென வுரைத்தான்" (40)
என்னும் செய்யுளில் ஆணித்தரமாக அடித்துச் சொல்லுவதையும் ஐயங்கார் பாடலோடு ஒப்பு நோக்குக. இவை எல்லாவற்றுக்கும் மேலாக விபீஷணன் அடைக்கலப் படலத்தில்(113) இராமன் வாயிலாக,

"போதக மொன்று கன்றி  யிடங்கர்மாப் பொருத போரின் ஆதியம் பரமே யானுன் னபயமென் றழைத்த வந்நாள் வேதமு முடிவு காணா மெய்ப்பொருள் வெளிவந் தெய்தி மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார்."
என வேத நாயகனை மெய்ப்பிப்பதையும், தான் இராமபிரான் தூதன் என்று அங்கதன் இராவணனுக்குத் தெரிவிக்குமிடத்தில்,

"பூதநாயகன் நீர்சூழ்ந்த புவிக்கு நாயகன் இப்பூமேற் சீதைநாயகன் வேறுள்ள தெய்வ நாயகன் நீசெப்பும் வேதநாயகன் மேல்நின்ற விதிக்கு நாயகன் தான்விட்ட தூதன்யான் துணித்தமாற்றஞ் சொல்லியவந்தேன் என்றான்."
(உயுத்த - அங்கதன் தூது -21)

என்று 'சீதைநாயகனான திருமாலே வேதநாயகன் என்றுரைப் பதையும் காண்க. "இலட்சுமணன் தன்னாலான மட்டும் முயற்சிசெய்தும் இந்திரஜித்தை வதைக்க முடியாமல் திகைத்துக் கடைசியாக ஒரு பாணத்தை எடுத்து, 'வேதத்தின் முடிவாகக் கூறப்படும் பரம்பொருள் இராமன் என்பது உண்மையானால், இந்த அம்பு இந்திரஜித்தின் தலையை அறுக்கக்கடவது ' என்று சொல்லி ஏவி விட்டான்; அக்கணமே இந்திரஜித்தின் தலையை அவ்வம்பு கொய்தது" என்று பொருள்படும் பின்வரும் பாடலும் நோக்குக:-[உயுத்த -இந்திரசித்து-51

"மறைகளே தேறத் தக்க வேதியர் வணங்கற் பால இறையவ னிராம னென்னு நல்லற மூர்த்தி யென்னில் பிறை யெயிற் றிவனைக்கோறி யென் றொரு பிறைவாய்வாளி நிறையுற வாங்கி விட்டா னுலகெலா நிறுத்தி நின்றான்." வேதநாயகன் திருமாலே எனக் கம்பநாட்டாழ்வார் இராமாயணத்தில் மேலும் பல இடங்களிலும் விளக்குவது கற்றறிந்ததோர் கண்ட உண்மையாகும்.

"மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன் பிறவிப் பெருந்துயர மெல்லாம் -- அறவே
பிழைத்தேன்யான் என்றானப் பேராழி யானை அழைத்தேவல் கொண்ட அரசு"[நளபெண்பா: சுயம்..4] என்று கம்பர் காலத்தவரான புகழேந்திப்புலவர் நளவெண்பா சுயம்வரகாண்டம் 4-வது கவியில் ஆழியானையே 'மறை முதல்வன்' என்று அறுதியிடுவது காண்க.

"அருமறை முதல்வனை ஆழி மாயனைக் கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணணைத் திருமகள் தலைவனைத் தேவ தேவனை இருபத முளரிக ளிறைஞ்சி ஏத்துவாம்"[வில்லிபாரதம்: வாரணா.கடவுள் வாழ்த்து] என வில்லிபுத்தூரார் பாரதத்தில் வாரணாவதச்சருக்கத்தில் கடவுள் வாழ்த்தாகக் கூறும் பாடலில் 'ஆழிமாயனே அரு மறை முதல்வன்' என்பது நோக்குக.

"மொழிமறைமுடிமே, லெழுமுதலவே செழுவடமலைவாழ், விழுமியபொருளே"
[திருவேங்கடக்கலம்பம்]

[சப்தஸ்வரூபமான வேதங்களின் அந்தமாகிய உபநிஷத் துக்களில், விளங்கிக் காணப்படுகின்ற முதற்பொருளாகிய அதுவே வேங்கடமலையில் வாழும் சிறந்த பொருளாகும்] என்று வேதப் பரம்பொருளே வேங்கடத்திலுறையும் திருமால் என்னும் திருவேங்கடக் கலம்பகம் 76 ஆம் பாடலை ஒப்புநோக்குக.

இவற்றை சுமார் 50 வருடங்களுக்கு முன் பாலர்களை முதன்முதல் பள்ளிக்கு வைக்கும்பொழுது ஆசிரியர், ஓலைச்சுவடி ஒன்றில் 'ஹரி: ஓம் நமோ நாராயணா சித்தம்' என்று எழுதி அச்சுவடியில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் மாணவனுடைய விரலைப் பிடித்துக் காட்டிக்கொடுத்துப் படிக்கும்படி செய்து அதன்பிறகே
'அ, ஆ' என்ற உயிரெழுத்து முதலாகக் கற்பிப்பார். அந்த ஏட்டுக்கு 'அரிச்சுவடி' என்று பெயர் அச்சுப் புத்தகத்திலும் முதற்புத்தகம் அரிச்சுவடி என்றே காணப்படும்.

"அரியென்று சொன்னால் அளியென்று சொல்லும் வரிவண்டு பேசி வருமோ"
என்பது அழகர் கிள்ளைவிடுதூது. இதற்கு, "அரி என்பது திருமாலின் பெயர்; அதைக் கூடச் சொல்லத் தெரியாது என்பது, அரிச்சுவடியிலே முதல் வார்த்தையாகிய 'அரி' என்பதே தெரியாதென்பதும்" என்பது டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுடைய குறிப்புரை. ஆகவே சைவர்களும் அரிச்சுவடியை 'அரிச்சுவடி' என்றோ, 'சிவச்சுவடி' என்றோ கூறுவதில்லை. பண்டைச் சான்றோர்கள் முழுமுதற்கடவுளான அரியின் பெயரைக்கொண்டே 'அரிச்சுவடி' என்றார்கள் என்பது இங்கு கருதத்தக்கது. இன்றும் பெரியோர்கள் 'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்று கூறுகின்றனர். அந்தணர்கள் செய்து வரும் சிராத்தங்களில் தத்தம் விடும்போது, 'ஸ்ரீவிஷ்ணு பாதே தத்தம்' என்று கூறி தாங்கள் செய்த கர்மாக்களின் பலனை எல்லாம் ஸ்ரீவிஷ்ணுவின் அடிக்கமலத்தில் அர்ப்பணம் செய்கின்றனர். ஸந்த்யாவந்தனம் செய்பவர்கள் முடிவில் 'சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்' என்று கூறி முடிக்கின்றனர் இதிலிருந்து அரியே வேதமுதல்வன் என்பது தெளிவாகிறது.

"சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்"

ஆதாரம்:-[பரப்பிரம்ம விவேகம்]

ஸ்ரீ சுதர்சணர் திருவடிகளே சரணம்..!
ஆச்சாரியர் திருவடிகளே சரணம்..!

Thursday, February 22, 2018

பரம புருஷ பகவானின் அவதார மகிமை!

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||

பரம புருஷ பகவானான ஸ்ரீமந் நாராயணர் பற் பல அவதாரங்கள் செய்ததனால் அவரும் மனிதர்களைப்போலே பிறப்புடையவர் தானே அவரை எப்படி பரம்பொருள் என்று கூறுகிறீர்கள் என்று வேதம் அறியாதவரும் அவன் அவதார ரஹஸ்யம் அறியாதவர்களும் புத்தியில்லா பித்தர்களைப்போல் பிதட்டுகின்றர் அவர்களுக்கு தெளிவூட்டவே இந்த பதிவு;

பிறப்பற்றவனாகிய ஸ்ரீமந் நாராயணன் தன் அடியார்கள் துயர்தீர்ப்பதற்க்காகத் தன்னிச்சையாய் இந்நிலவுலகின்  எம்பெருமான் பிறக்கிறான் என்று வேதம் கூறுவதை இவர்கள் அறியார்கள் போலும்..

தர்மத்தை நிலைநிறுத்தி, தர்மம் செய்பவர்களைக் காக்கவும், வெப்பத்தையுடைய தீயைப்போன்ற கொடியவர்களை அழிக்கவுமே நான் பிறக்கிறேன் என்று கீதாச்சாரியனான கண்ணன் எம்பெருமான் கூறினான்!

"பரித்ராணாய ஸாதூனாம்
வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸதாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே"
[பகவத் கீதை 4.8]

"பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்."

பகவான் தன் பக்தர்களை ரட்சிக்கவே பலவிதவாக தன்னிச்சையால் பிறக்கிறார். இதைய வேதம் உரைக்கிரது..;

"பிதா புத்ரணே பித்ருமாந்
யோநியோநௌ நாவே
தவிந்மநுதேதம் ப்ருஹந்தம்"
[யஜூர் வேதம் - காடகசம்ஹிதை -3-9-55]
(அனைத்துலகுக்கும் தந்தையான பரமாத்மா தம் பிள்ளைகளுள் ஒருவனைத் தந்தையாகக் கொண்டு ஒவ்வொரு யோனியிலும் பிறக்கிறான்)

"ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந"
[யஜூர் வேதம் அஷ்டகம்- 3-6-3]
(அந்தபரமாத்மா பிறந்த பின்னே பெருமை பெறுகிறான்)

"தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்"
[புருஷ ஸூக்தம்]
(அறிவாளிகளின் தலைவர்களே அவனுடைய பிறப்பின் ரகஸ்யத்தை அறிவார்கள்) வேதம் அறியா அறிவிலி அவனை பரமாத்மாவாக உணர மாட்டான்.

"அஜாயமாநோ பஹுதா விஜாயதே"
[புருஷஸூக்தம் 2-3]
(பிறப்பில்லாதவனாக இருந்தும் பலவிதமாகப் பிறக்கிறான்)

பரமாத்மாவான பகவான் ஸ்ரீஹரி சர்வ பல்லமை உள்ளவர் இவர் அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருப்பவர் அவர் தன் இச்சையில் தன் பக்தர்களை காக்க பிறப் பெடுக்கிறார் என்பதில் என்ன சந்தேகம் உள்ளது சர்வ பல்லமை பொருந்திய எம் பெருமானுக்கு அனைத்துமே அல்ப்ப செயல் தன் பக்தனைத் தவிர அதனாலே தன் பக்தன் துயர் களையவே யுகங்கள் தோறும் எம்பெருமான் அவதரிக்கிறான்.

"ஸர்வதா ஸர்வக்ருத் ஸர்வ: பரமாத்மேத்யுதாஹ்ருத:"
(எப்பொழுதும் எல்லாவற்றையும் செய்பவரும் எல்லாம் ஆனவருமே பரமாத்மா என்று சொல்லப்படுகிறார்) வேதம் முழங்குகிறது எல்லாம் செய்பவரே பரமாத்மா அவனா பிறப்பெடுப்பதா பெரிதொரு காரியம்.!

(விஜாயதே) பல விதமாகப் பிறக்கிறான் என்றும், விசேஷமாகப் பிறக்கிறான் என்று பொருள் கொள்ளலாம். தேவர் முதலிய ஒவ்வொரு ஜாதியிலும் பல விதமாகப் பிறக்கிறான் என்றார் நாராயணமுனி.
(விஸேஷேண ஜாயதே) விசேஷமாகப் பிறக்கிறான். அப்ராக்ருத சரீரத்தை இதர ஸஜாதீயமாக்கிப் பிறக்கிறான். சங்கொடு, சக்கரம், வில், ஒண்மையுடைய உலக்கை, ஒள்வாள் தண்டு கொண்டு பிறக்கிறான். பிறந்த பின்பே மேன்மையடைகிறான். வேதத்திலும், "யுவா ஸுவாஸா: பரிவீத ஆகாத் ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந: தம் தீராஸ: கவய உந்நயதி"
(யௌவனத்தையுடையவனாகவும், அழகிய பீதாம்பரத்தைத் தரித்தவனாகவும், நித்யசூரிகளால் சூழப்பட்டவனாகவும் புருஷோத்தமன் பிறக்கிறான். அவன் பிறந்த பின்பே மேன்மையுடைவனாகிறான். அவனைத் தீரர்களான கவிகள் தியானிக்கிறார்கள்) என்று சொல்லப்படுகிறது.

தன் அடியார்களுக்கு ஆபத்து ஏற்படும் காலத்தையே தனக்கு பிறக்கைகுக் காலமாகக் கொண்டு எம்பெருமான் பிறக்கிறான். அர்களுடைய சம்ரக்ஷணத்தையே பிரயோஜனமாகக் கொண்டு பிறக்கிறான். "ஆவிர்பூதம் மஹாமத்மநா" (மஹாத்மாவான நாராயணன் ஆவிர்ப்பவித்தான்) என்று பராசர மஹரிஷி 'அவதரித்ததினால் தோஷமில்லை' என்பதைக் காட்டுவதற்க்காக
'ஆவிர்பவித்தான்' என்று உரைத்தார்.

நம்மாழ்வார் வாக்கு:-"உயிரளிப்பான், எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா" [திருவிருத்தம்-1]

"சாதுசனத்தை நலியுங் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதியஞ்சோதியுருவை அங்குவைத்திங்குப் பிறந்த வேதமுதல்வ னைப்பாடி வீதிகடோறுந் துள்ளாதார் ஓதியுணர்ந்தவர்முன்னா என்சவிப்பார் மனிசரே" (திருவாய்மொழி 3-5-5)

என்ற திருவாய்மொழியில்; பகவான், தன்னடியார்களின் விரோதிகளை ஒழித்துக்கட்டுவதற்க்காகவே தன்னுடைய அசாதாரண ரூபத்தோடு கூடவே வந்து அவதாரம் செய்த திருக்கல்யாண குணத்தை நினைத்து ஈடுபடாதவர்கள் செய்கிற தவம் ஜபம் முதலான எல்லாம் பயனற்றவை என்று கூறுகிறது.

பகவான் தன் இஷ்டத்தின் படி பிறக்கிறார் ஆண் பெண் சேர்க்கை இல்லாமல்.

எனவே பகவான் ஸ்ரீமந் அவதாரங்கள் அற்புதமானவை அவர் பரமாத்மா என்பதை வேதம் முதற்க் கொண்டு முழங்குகிறது. சர்வ வல்லமை உள்ள பரமாத்மா கலங்கமில்லாமல், கர்மா வினை இல்லாமல் தன்னிச்சையில் பிறக்கிறான் என்பதை வேதம் உரைக்கிறதை அறியலாம்.
பகவான் கர்மவினையால் பிறந்தான் என்பதை எந்த சாஸ்த்திரமும் கூறவில்லை எனவே எம்பெருமானை சாதாரண மனிதர்போல் எண்ணம் கொள்வது  
போலிக் கதைகளை புனைபவர்களை துர்பாஷாண்டார்கள் எனலாம்.

"சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்"

ஆதார மேற்கோள்:- பரப்பிம்ம விவேகம், விஷ்ணு சித்த விஜயம்

Wednesday, February 21, 2018

சங்க இலக்கியம் காட்டும் சர்வேஷ்வரன்

||ஸ்ரீமதே ராமநுஜாய நம||

சங்க இலக்கிங்களில் சர்வேஷ்வரனான பகவான் திருமால் பற்றிய சிலவற்றை காண்போம்;

"சாயல் நினது வான் நிறை என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே!"
[பரிபாடல் 2-56,57]
"நினது நிறமும் அருளும் நீர் நிறைந்த மேகத்தை மேகத்தையொக்கும் என்று நாவன்மையுடைய அந்தணர்  ஓதும் அருமறைப்பொருள் கூறும்"

"மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய் மொழி உரைதர"
[பரிபாடல் 3-10,11]
"மாயப்பிரானே! உலகம் முழுவதும் உன்னிடமிருந்தே  உண்டாயிற்று என்பதை அழியாத வேதம் ஓதவதைக்கொண்டு நாம் சொன்னோம்"

"தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை"
[பரிபாடல் 3-13,14]
"தாமரைப் பூவில் பிறந்த பிரம்மனும் அவனது தந்தையும் திருமாலாகிய நீயே என்று அந்தணர் ஓதும் அருமறை முழங்குகிறது"

"பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவலின் முதுமொழி கூறும்"
[பரிபாடல் 13-38,39,40]
"பாம்புக்குப் பகையான கருடனைக் கொடியாகக் கொண்ட அழியாத செல்வமுடைய திருமாலை எவராலும் இயற்றப்படாத முதுமொழியான வேதம்
பரம்பொருளாக் கூறும்"

"புவ்வத்தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்"
[பரிபாடல் 15-49,52]

'கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த பூமியில் அவதாரமாக வந்தருளும் முழுமுதல் கடவுளாம்'

சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும் குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்கள்....

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் 1
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் 2
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் 3
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;
[- சிலப்பதிகாரம் 17. ஆய்ச்சியர் குரவை]

ஆதிசேடன் என்னும் பாம்பினை உடையவன்; திருமகளை மார்பில் உடையவன்; ஒரு குழையை உடைய பலதேவனாகவும் இருப்பவன்; அந்தணரின் அருமறைப் பொருளானவன் எனப் போற்றுகிறது பரிபாடல் (பரி. 1:1-14). மற்றும் ஐம்பெரும் பூதங்களாகவும் இருப்பவன் (பரி.13:15-25) என அவன் புகழைச் சொல்லி வழிபடுகின்றனர் மக்கள்.

எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ; 
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; 
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ

(பரி. 3:63-68)

எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம்,வாய்மை = உண்மை, மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி)

மேலும் இறைவனின் பெருமையை இயற்கைப் பொருளைக் கொண்டு உணர்த்துகின்றார்.

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள; 
நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள; 
நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின், தோற்றமும் அகலமும் நீரின் உள; 
நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:

(பரி. 4:25-32)

(வெம்மை = பகைவரை அழிக்கும் ஆற்றல், தண்மை = அளித்தல், அருளல்,சுரத்தல் = விருப்பம் நிகழ்தல், வண்மை = கொடை, புரத்தல் = தாங்குதல்,நாற்றம் = மணம், வண்மை = ஒளி, பூவை = காயாமலர், ஒலி = சொல்,வருதல் = அவதரித்தல், ஒடுக்கம் = மறைதல், மருத்து = காற்று)

இப்படி உருவப் பொருளிலும் அருவப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனாகத் திருமாலைக் காட்டுகின்றது பரிபாடல்.ஐம்பெரும்பூதங்களாகவும், கோள்களாகவும் இறைவனைக் கண்ட புலவர்கள் சொல்லினுள் வாய்மை நீ எனச் சுட்டி எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றிலும் நெருடல் இல்லாத தன்மையைக் காட்டுகின்றனர்.

1.2.2 அவதாரங்கள்

திருமால் அவதாரங்கள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி எனப் பத்தாகும்.

• கூர்ம அவதாரம்

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர், இந்திரன் இழந்த செல்வத்தை எடுப்பதற்காக. அப்பொழுது மத்தாக இருந்த மேருமலை கடலில் அழுந்தத் தொடங்கியது.

தேவர்களுக்கு உதவ எண்ணிய திருமால் ஆமையாகஉருக்கொண்டு மேருமலையைத் தாங்கி நின்றார் என்பது புராணம். இச்செய்தியைப் பரிபாடல் திரட்டின் முதல் பாடல் பின்வருமாறு கூறுகின்றது.


திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இருவயின் நாண்ஆகி
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒருதோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்

(64-71)

(முந்நீர் = திருப்பாற்கடல், வெற்பு = மந்தரமலை, சிரத்து ஏற்றி = உச்சியில்ஏற்றி (ஆமை முதுகில் ஏற்றி), இருதிறத்தோர் = தேவர், அசுரர், அமுது = அமிழ்தம், நாணாகி = கயிறாகி, ஆழியான் = திருமால், அணிந்தார் = மத்தின் கயிறானார்)

• வராக அவதாரம்

இரணியனுடன் பிறந்த அசுரன் நிலத்தைச் சுருட்டிஎடுத்துக்கொண்டு கடலுக்குள் மறைந்து கொண்டான்.இச்செய்தியைக் காப்புக் கடவுள் திருமாலிடம் கூறித் தமக்குஉதவுமாறு வேண்டினர் தேவர்கள். திருமால் வராக வடிவில் கடலுக்குள் சென்று தன் கொம்பின் உதவியால் நிலமகளை அசுரனிடம் இருந்து மீட்டான் என்பது கதை.


கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;

(பரி. 2:16-18)

(கேழல் = பன்றி, ஒருவினை = திருவிளையாடல்)

(கடலில் மூழ்கிய நிலத்தைப் பன்றி உருவில் தன் கொம்பால் மேலே கொண்டு வந்தவன்)

• நரசிம்ம அவதாரம்

இரணியன், பிரகலாதன் ஆகியோர் பற்றிய கதைநரசிம்ம அவதாரத்தில் இடம்பெறும். இரணியன் தன்னைவிலங்கு, மனிதர், தேவர் யாரும் கொல்லக் கூடாது; பகல், இரவு, வீட்டுக்குள், வெளியில் யாரும் எந்த நேரத்திலும்தன்னைக் கொல்லக்கூடாது. ஆயுதங்களாலும், தனக்கு அழிவுவரக்கூடாது எனப் படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். எனவே எல்லோரும் தன்னை வணங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினான்.

தந்தை இரணியனை, திருமால் அடியவன் ஆன மகன் பிரகலாதன்வணங்க மறுத்தான். இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்ற இறைவனைக் காட்டு எனத் தந்தை கேட்க, மகன் ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என விடை சொன்னான். இறைவன் நரசிம்ம வடிவங்கொண்டு தூணைப்பிளந்து கொண்டு வந்து இரணியனை இழுத்துத் தன் மடியில் கிடத்தித் தன் நகத்தால் கிழித்துக் கொன்றான் என்பது நரசிம்ம அவதாரமாகும்.

இரணியன்-பிரகலாதன் கதையைப் பாடியுள்ளார் கடுவன் இளவெயினனார் (பரி. 4:10-21).

• வாமன அவதாரம்

குள்ள வடிவு கொண்ட அந்தணன் தோற்றத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கியது வாமனஅவதாரம் ஆகும். அரசனிடம் மூன்று அடி மண் கேட்டு, பின் ஓரடியால் மண்ணையும், ஓரடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் போக, மூன்றாவது அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து அவனைப் பாதாளத்திற்குள் தள்ளியது வாமன அவதாரக் கதை.

பெரும்பாணாற்றுப்படை (29-31) என்னும் ஆற்றுப்படை நூல் தொண்டைமான் இளந்திரையன் முன்னோருடன் திருமாலை ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அந்த இடத்தில் வாமன அவதாரத்தை எடுத்துரைக்கின்றது.கலித்தொகையில் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியிலும் இக்குறிப்பு உள்ளது.

• பரசுராமன் அவதாரம்

திருமாலின் கூறாகிய பரசுராமன், முன்பு விடாமல் முயன்று முடித்த வேள்விக்களத்தில், கயிற்றில் சுற்றிக் கட்டப்பட்ட அழகிய தூண்போல என உவமை கூறுவதின் வழி,

மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி 
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங் கடி நெடுந்தூண் போல

(அகநானூறு : 220-5-9)

(மன் மருங்கு = அரசர் குலம், வனப்பு = அழகு, மழுவாள் நெடியோன் = மழுவாகிய வாள்படை உடைய பரசுராமன்)

மதுரை இளநாகனார் பரசுராம அவதாரத்தை சுட்டுகின்றார் (காவலைஉடைய தூண் போலத் தலைவியின் ஆகம் காணற்கரியது). ஆக, அகப்பாடலிலும் உவமை கூறும்போது திருமால் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளதை நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல் வழி அறிகின்றோம்.

• இராமன் அவதாரம்

இராமன் அரக்கரை வெல்ல, போர் பற்றிய அரிய மறை(இரகசியச்) செய்தியை வானர வீரர்களோடு ஆராய்ந்தபொழுது பறவைகள் ஒலி எழுப்புகின்றன. அவ்வொலி பேச்சுக்கு இடையூறாக இருக்கின்றது. எனவே இராமன் பறவைகளின் ஒலியை, கேட்காமல் செய்தான். பல விழுதுகளை உடைய ஆலமரத்தில் இருந்த பறவைகள் ஒலி எழுப்பவில்லை. எனவே, ஆலமரம் ஒலியின்றி அமைதியாக இருந்தது என்பதை,

 

வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை 
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 
பல் வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே

(அகம்,70:13-17)

(வென்வேல் = வெற்றிவேல், கவுரியர் = பாண்டியர், முதுகோடி = கோடிக்கரை, இரும் = பெரிய, பௌவம் = கடல், இரங்கும் = ஒலிக்கும், துறை= கடற்கரை)

எனச் சுட்டுகிறார் மதுரை தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார். தலைவன் வரைவு (திருமணம்) உடன்பட்டதும் வதுவை (திருமணம்) கூடும். எனவே அலர் (பழிச்சொல்) பேசுகின்ற இந்த ஊரும் அது போல அலர் அவிந்து கிடக்கும். இப்படிப் பொருத்தமான உவமையாகப் புராணக் குறிப்புகளை அகப்பாடல் பாடிய புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலும் முற்காட்டிய பரசுராம அவதாரத்தைச் சுட்டிய பாடலைப் போன்று நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல்.

• கிருஷ்ண அவதாரம்

நீராடும் போது கண்ணனால் ஆடை கவரப்பட்ட ஆயமகளிர் அணிந்துகொள்ள, குருந்த மரக்கிளை நீருக்குள்ளே வளைந்து செல்லும்படி தம் திருவடியால் மிதித்த திருமால் போல என்னும் உவமை,

வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர் 
மரம் செல மிதித்த மாஅல் போல

(அகநானூறு : 59 : 3-6)

(தொழுநை = யமுனை, மரம் செல = குருந்த மரம் வளைந்திட, அண்டர் மகளிர் = ஆயமகளிர், ஆயர் = ஆயர் குலத்தை சேர்ந்தவர்; ஆடு, மாடு மேய்க்கும் தொழிலைச் செய்பவர்)

நீர்வளம் பொருந்திய யமுனை ஆற்றில் மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய ஆயர் மகளிர் குளிர்ந்த தழையை உடுத்திக் கொள்ளக்குருந்த மரம் வளையும்படி மிதித்துத் தந்தான் கண்ணன் என்று கிருஷ்ண அவதாரச் செயலைக் குறிப்பிடுகின்றது.

கம்சன் அனுப்பிய குதிரை வடிவமாக வந்த அசுரனைக் கண்ணன்கொன்றான் என்பது முல்லைக் கலியில் உள்ளது. ஏறு தழுவிய ஆயர்களைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டுகின்றாள். ‘காயாம்பூங் கண்ணியைச் சூடிய பொதுவன் ஏறு தழுவிய பிறகு நிற்கும் காட்சி,

மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை 
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு

(103: 53-55)

(மேவார் = பகைவர், விடுத்தந்த = அனுப்பிய, வாய்பகுத்து = வாய் கிழித்து,புடைத்த = அடித்த, ஞான்று = வேளை, உட்கிற்று = நினைத்து)

என்று கூறுவது அரக்கனை அழித்த கண்ணன் போன்று இருந்தது என உவமையாக இடம் பெற்றுள்ளது.

மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் 
குறங்கு அறுத்திடுவான் போல்

(52:2-3)

(நூற்றுவர் தலைவன் = துரியோதனன், குறங்கு = தொடை) 

மல்லரை மறம் சாய்த்த மால்போல்

(52:5)

எனத் தலைவனுக்கு உவமைகள் வந்து உள்ளன. இதன் வழி நூற்றுவர்களுக்குத் தலைவன் ஆன துரியோதனனை வீமன் அழித்தான் என்றும், மல்லர்களைக் கண்ணன் அழித்தான் என்றும் அறிகின்றோம்.

• பலராமன்

பலராமன் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் உள்ளது. நற்றிணையில்,

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி

(நற்றிணை - 32)

(மாயோன் = கண்ணன், அன்ன = போல / ஒத்த, மால்வரைக்கவான = மலைப்பக்கம், வாலியோன் = வெண்மை நிறமுடைய பலதேவன்)

எனத் திருமாலும் பலராமனும் அடுத்தடுத்து இடம் பெறுகின்றனர். பலராமன் நீலநிற ஆடையை அணிந்திருந்ததை நெய்தற்கலி (7) காட்டுகின்றது.

முல்லைக்கலி (5) காளைகளுக்கு உவமையாக கிருஷ்ண - பலதேவர் ஆகிய இருவரைக் கூறும்.

புறநானூறு சிவன்-முருகன் ஆகியோருக்கு இணையாக கிருஷ்ண - பலராமன் ஆகிய இருவரை,

கடல்வளர் புரிவளை புரையும் மேனி 
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும் 
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும

(புறம். 56: 3-6)

(வளை = சங்கு, புட்கொடி = கருடக் கொடி, நாஞ்சில் = கலப்பை, மேனி = உடம்பு, விறல் = வெற்றி)

என மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடியுள்ளார். மேலும் அவர்களை வலிமை உடையவர்களாகவும் காட்டுகிறார்.

சோழன் திருமாவளவனும் பாண்டியன் பெருவழுதியும் சேர்ந்திருக்கக் கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்,

பால்நிற உருவின் பனைக் கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு

(புறம், 58:14-16)

என்று கிருஷ்ணன் பலதேவர்களுக்கு உவமிக்கின்றார்.

ஆக, சங்க இலக்கியங்கள்

கிருஷ்ணனும் பலராமனும் வழிபடுதெய்வமாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

பலராமனை வலிமைக்கு உதாரணமாகக் காட்டுகின்றனர் புலவர்கள்.

1.2.3 வழிபடு கடவுள்

பாரதம் பாடிய என்ற சிறப்பையும் பெயரோடு பெற்றிருக்கின்ற புலவர் பெருந்தேவனார்.

மா நிலம் சேவடி ஆக, தூ நீர் 
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன், என்ப 
தீது அற விளங்கிய திகிரியோன

என நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப்பாடி, திருமாலை முழுமுதற் கடவுளாகக் காட்டுகின்றார். திருமால், ஐம்பெரும் பூதம், மதியம், சூரியன், திசை, இப்படி எல்லாம் அவன், அவனே உலகத்து உயிர், உயிர்கள் அனுபவிக்கும் பொருள், வேதத்தின் பொருள் எனவே அவனை வணங்குவோம் என்பர்.

எனவே நிலத்தை அவன் திருவடியாகவும் கடலை அவன் ஆடையாகவும், திசையை அவன் கை ஆகவும், சந்திரன் சூரியன் ஆகியவற்றை அவன் இரு கண்களாகவும் கண்டு உருவகப்படுத்தி உள்ளார். இறைவனையும் இயற்கையையும் பிரித்தறிய முடியாது என்பது பொருள்.

வழிபடு கடவுள் என்றால் கோவிலும் இருக்கத்தானே செய்யும். எனவே வழிபாட்டையும் அதற்கான வழிமுறைகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

1.2.4 வழிபாடு

பதிற்றுப்பத்து நான்காம் பத்தில் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் பற்றிப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் அந்நாட்டு மக்கள் படித்துறையில் நீராடி, துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள ஆழிப்படையை உடைய செல்வனாகிய திருமாலை வழிபட்டுச் சென்றனர்.

‘செல்வன் சேவடி பரவி’

(பதிற்றுப்பத்து 4:1:9)

(பரவி = வணங்கி)

எனப் பாடியுள்ளார். திருமாலை வழிபட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் என்பதால் திருமாலுக்குரிய உருவ வழிபாடும் இடமும் (கோவில்) சங்க காலத்தில் இருந்தன என்பதையும் அறிகின்றோம்.

திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்), இருந்தையூர் ஆகிய இடங்களைத் திருமால் இடமாகக் காட்டுகின்றன பரிபாடலும் பரிபாடல் திரட்டும். திருமுருகாற்றுப்படையும் அறுபடை வீடு பற்றிப் பேசும்போது திருமாலைக் குறிப்பிடுவதால் திருமாலுக்குரிய வழிபாட்டு இடம் உண்டென்பது பெறப்படுகின்றது.

• வழிபடுதல்

மக்கள் திருமாலை வழிபட்டதை,

நலம் புரீஇ அம்சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின் எம்உள் அமர்ந்து இசைத்து இறை
இருக்குன்றத்து அடிஉறை இயைக! எனப்
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே

 (பரி. 15:63-66)

(நலம் புரீஇ = நன்மை செய்யும், நாம வாய்மொழி = வேதம், இருங்குன்றம் = திருமாலிருஞ்சோலை, பெரும் பெயர் இருவர் = நம்பி மூத்தபிரானும் வசுதேவனும்)

என்று பரிபாடல் காட்டுகின்றது. சுற்றத்தாரோடு சென்று

, . . . . . . . . மரபினோய் நின்அடி
தலை உற வணங்கினேம், பல்மாண் யாமும்
கலிஇல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு:

(பரி. 2: 72-76)

(கடும்பு = சுற்றம், கலி இல் = துளக்கமற்ற (அசைவற்ற), ஏத்தி = உயர்த்தி,வாழ்த்தி = போற்றி, பரவுதும் = வணங்குகிறோம், கொடும்பாடு = கொடிய துன்பம்)

. . . . . . . .நின் அடி தொழுதனெம் 
பல்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம்செய்தவப் பயத்தால்
இன்னும் இன்னும்எம் காமம் இதுவே.

(பரி. 13:61-64)

(பல்மாண் = பலமுறை, அடுக்க = அடுத்தடுத்து, காமம் = விருப்பம்)

எனத் தொடர்ந்து திருமால் திருவடியை வணங்கும் அருள் வேண்டும் எனப் பாடுகின்றார் நல்வழுதியார்.

 திருவடி

திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் துணை செய்வது: பிறப்பறுக்கும் திருவடி.

மா அயோயே மா அயோயே!
மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே!

(பரி. 3:1-3)

(மறு பிறப்பு அறுக்கும் = பிறவித்துன்பம் ஒழிக்கும், மாசுஇல் = தூய்மையான, மணி திகழ் உருபின் = நீல மணி போன்ற நிறம் உடையவன்)

எனப் புகழ்ந்து,

முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இல்லை, பிறப்பித்தோர் இலையே

(பரி:3:71-72)

திருமால் உலகில் முதல், இடை, இறுதியில் படைப்பு, அளிப்பு (காத்தல்), அழிப்பு போன்றவை செய்தலால் அவன் பிறவாத பிறப்பு இல்லை எனச் சிறப்பிக்கின்றது.

"எனவே சங்க இலக்கியங்கள் சர்வேஷ்வரனான சக்கரத்தானை பலவதாக போற்றுகின்றன"

♥சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்♥

Tuesday, February 20, 2018

காசி முக்தி ராம நாமத்தால்

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||

காசியல் இறப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பது ஸ்ரீ ராம நாமத்தாலே!

இதன் வரலாறு:- முன்னொரு காலத்தில் சிவன் பிரமனின் சிரசை அறுக்க, அச்சிரம் அரனின் கையைவிட்டு அகலாதிருக்க; பிரமஹத்தியால் வந்த வினையைத் தீர்க்கப் பிக்ஷாடராய், பூமி எங்கும் சுற்றித் திரிந்து திருமகள் நாதன் உகந்தறைகின்ற காசி நகரை அணுகியதும், அவ்வரன் கையிலிருந்த கபாலம் கழன்று விழுந்தது. இதைக்கண்டு சிவன், திருமாலை வணங்கி "றைவா! நீ உகந்துறைகின்ற இத்திருப்பதியை அடைந்ததும் என்னைப்பற்றிய பாதகம் விலகியது. நீ வாழும் பதிக்கே இவ்வளவு மகிமை என்றால் உன் புகழை யாரால் ஓதமுடியும்?" என்று துதித்தான்.

அப்பொழுது காசிநகர் மாதவனும் பரமசிவனைப்பார்த்து; "சிவனே! இன்றுடன் உமது இன்னல் அகன்றது,இனி நீர் உமது உறைவிடமான கைலைக்குச் செல்வீர்" என்று  அருளிச் செய்தார். சிவனும் பிடைபெற்று தன் விடையின் மீதேறிக் காசிமாநகரை விட்டகன்றார். அந்நகரை நீங்கியதும், முன்பு போல் மண்டையோடு சிவன் கையைப் பற்றிக்கொண்டது. மறுபடியும் காசிப்பதிக்கி வந்து கமலக்கண்ணனை அடி பணிந்து, நடந்த வரலாற்றைக் கூறி; "மாதவா! நீ வசிக்கும் இப்புண்ணிய நகரத்தின் மகிமையால் என் மாபாதகம் நீங்கப் பெற்றேன். இனியும் இப்பதியை விட்டகல்வேனல்லேன்.
எப்பொழுதும் இனி இப்பதியிலேயே இருக்க வரந்தரவேண்டும்" என்று வேண்டினார்.

அரனுக்கிரங்கிய அச்சுதன் காசியம்பதியை சிவனுக்கு அளித்து, தான் பிரயாகையை அடைந்தான். அன்று முதல் சிவன் காசியில் இருந்துகொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்கொடுத்து வரலாயினான். இதை உணர்ந்த அந்தனரும், யோகியரும், ஞானியரும் அப்பதிக்கு வந்து முக்தியை விரும்பத் தவம் கிடந்தனர்.

இவர்களது நிலையைக் கண்ட சிவன், 'யாம் இவர்கள் விரும்பும் முக்தியை எவ்வாறு கொடுக்கவல்லோம்? என்று பிரமனைத் தியானித்தார். அவ்வமயம் நான்முகனும் அங்கு வந்து 'உம் சிந்தையில் உள்ள விஷயம் யாது?' என்றார். சிவ பிரானும் பிரமனை நோக்கி, "இங்குள்ள ஞானியர்கள் என்னை முக்திதரும் தெய்வமாக மதித்துத் தவம் செய்கின்றனர் இவர்கள் கருதுவதை நான் உதவுவதற்க்கு உபாயம் உரைத்தருள்வீர்" என்று வேண்டினார்.

பிரமனும், தாரகமஹாமந்திரமாகிய ஸ்ரீராம மந்திரத்தைச் சிவனுக்கு உபதேசித்து, "இனி கங்கைக் கரையில் சரீரத்தை விடுவோர் காதில் இம்மந்திரத்தை உபதேசித்திடுவீர். இதன் பயனாக அவர்களும் முக்தியைப் பெறுவார்கள்; உமது எண்ணமும் ஈடேறும்" என்று கூறி மறைந்தார். அன்றமுதல் இன்று வரை அரன் காசியில் மரணடைபவர் காதில் ராமநாமத்தை ஓதி அவர்களுக்கு முக்திபேற்றைக் கொடுத்து மகிழ்கின்றனன். இவ்வரலாறு நாரதீயம், அகத்திய இராமசங்கிதை முதலியவற்றில் சொல்லப் பட்டிருப்பதாக இருசமய விளக்கம் விவரிக்கும்.

சான்றுகள்:- அத்வைதமத ஸ்தாபகர் ஆதிசங்கரர். அவர் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்திற்க்கு பாஷ்யமிட்டார். கோவிந்தனையே பூஜிக்கவேண்டுமென்று 'பஜ கோவிந்தம்' என்ற நூலைப் பாடினார். அவராலேயே தாரக மந்திரமாகிய இராமநாமத்தின் ஒப்பற்ற தன்மையும் விளக்கப்பட்டிருக்கிறது. அவர் அவ்வாறு இராமநாமத்தின் பெருமையைக் கூறுமிடத்து, காசியில் பரமசிவன் இராம நாமத்தை எப்போதும் ஜபித்துக் கொண்டு வசிப்பதையும், காசியில் மரணமடைந்த ஜீவனுடைய காதில் சிவன் தாரகமந்திரமாகிய இராம நாமத்தைத் தானே 'ராம ராம ராம' என்று உபதேசிப்பதையும் விளக்கி "ஜனன மரணச் சிறையிலிருந்து விடுவித்துக் காப்பதும், உயிர்பிரியும்போது பரமசிவனால் உபதேசிக்கப்பெறுவதுமான இராம நாமத்தை நான் பஜிக்கிறேன். அதுவும் ஒருமுறையல்ல. நான்கு தடவை பஜிக்கிறேன்" என்று அறுதியிட்டுக் கூறும்
"யத் வர்ணயத் கர்ணமூலேSந்தகாலே
ஸிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம்|
தேகம் பரம் தாரகம் ப்ரஹ்மரூபம்
ஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்||"
என்ற சுலோகத்தின் பொருளுணர்க.

மேலும், சிவன் பார்வதியின் கேள்விக்குப் பதில் சொல்லு மிடத்து. "இராமநாமத்தைச் சொன்னால் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ர நாமத்தைச் சொன்ன பலன் உண்டு" என்றும், தானும் அந்த இராமநாம கீத ஒலியிலே ரமித்துக்கொண்டிருப்பதாகவும் கூறும்

"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே|
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே||"
என்னும் விஷ்ணுஸஹஸ்ரநாம சுலோகம் காண்க. மற்றும்,

"இராமதத் துவத்தை இதயத்தில் வைத்தும் இராமரா மேதி என்றுதான் துதித்தும்".
[சோலைமலைக் குறவஞ்சி பக் 79. வரி 99,100] என்று (ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் வெளியீடான) சோலைமலைக் குறவஞ்சி பாடுவது நோக்குக.

"கையில் துளசிமாலை, நெஞ்சில் இராமதத்துவம், சிரசில் கேசவனுடைய ஸ்ரீபாததீர்த்தம், நாவின் நுனியில் தாரக நாம மாகிய இராம மந்திரம், இவைகளைத் தரித்து நிற்க்கும் சிவனை மஹா பாகவதனாக நினைக்கிறேன்" என்ற கருத்துக்கொண்ட,
"ஹஸ்தேSக்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம்
ஸ்வமஸ்தகே கேஸவபாத தீர்த்தம்
ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்த்ரம்
ஸிவம் மஹாபாகவதம் ஸ்மராமி||" என்ற ச்லோகம் இங்கு கருதத் தக்கது.

[பரப்பிரம்ம விவேகம் என்னும் நூலின் படைப்பில் இருந்து இப்பதிவு]

ஸ்ரீ ராமர் வாலியை வதம் செய்தது தர்மம்

இராமர் வாலியை வதம் செய்தது ஏன்?

நவீன கால மக்களிடையே இராமாயணத்தைப் பற்றிப் பேசும்போது எழும் பொதுவான கேள்வி: வாலிக்கும் இராமருக்கும் எந்தப் பகையும் இல்லாத பட்சத்தில், இராமர் வாலியை வதம் செய்தது ஏன்? அதுவும் மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து வதம் செய்ய காரணம் என்ன? இவற்றை இங்கு சற்று அலசிப் பார்ப்போம்.

இக்கேள்விகளை எழுப்புவோரை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (1) வேத வரலாற்றை நம்புவோர், (2) வேத வரலாற்றை நம்பாதோர். ஸ்ரீ இராமர் பாவமற்றவர், கறையற்றவர், குற்றமற்றவர் என்பதை வேத வரலாற்றை நம்புவோர் அறிவர்; இருப்பினும், போதிய சாஸ்திர ஞானம் இல்லாத காரணத்தினால், அவர்களால் இதுபோன்ற கேள்விகளுக்கு திருப்தியான பதிலை வழங்க முடிவதில்லை. இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையற்ற மக்கள், “இராமர் நல்லவர் அல்ல” என்னும் மூடத்தனமான முடிவிற்கு வருகின்றனர்.

“கடவுள்” என்பதன் அடிப்படைப் பொருளை ஆராய்ந்தோ மெனில், அவர் பூரணமானவர், அனைத்து சக்திகளும் கொண்டவர், அனைவரது நலனையும் விரும்புபவர், என்றும் நல்லவர் போன்ற தகவல்களைப் பெறலாம். அவர் என்றும் நல்லவர் என்னும் பட்சத்தில், “இராமர் நல்லவர் அல்ல” என்னும் முடிவு நிச்சயம் முட்டாள்தனமானதே. இராமரின் மீதான இக்குற்றச்சாட்டிற்கு எவ்வாறு தீர்வு காண்பது?

இராமாயணம் படிப்போம்
நமக்கு நாமே கேட்க வேண்டிய முதல் கேள்வி: இராமர் வாலியை வதம் செய்த தகவலை நாம் எங்கிருந்து பெறுகிறோம்? நிச்சயமாக, இராமாயணத்தில் இருந்தே. சரி, நாம் உண்மையில் இராமாயணத்தை படித்ததுண்டா? “இல்லை” என்பதே பெரும்பாலான மக்களின் பதில். கேள்வியெழுப்புவோரில் பெரும்பாலானோர் இராமாயணத்தைப் படித்ததே இல்லை; ஆனால் கருத்து கூறி தீர்ப்பு வழங்குகின்றனர்–இது நியாயமா? கர்வமுள்ள மூடர்கள் மட்டுமே இவ்வாறு செய்வர்.

“தொலைக்காட்சியில் பார்த்தோம்,” என்று சிலர் வாதம் செய்வர். இராமாயணத்தை வியாபார நோக்கில் தயாரிப்பவர்கள், கதையை மட்டும் காட்டிவிட்டு அதிலுள்ள கருத்துகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களது அக்கறை பணத்தில் மட்டுமே, பணத்திற்காக அவர்கள் எதையும் செய்வார்கள். வேத கால வரலாற்றையும் உண்மைகளையும் திரித்து தங்களின் நோக்கத்திற்குப் பொருந்தும் வகையில், அவர்கள் தொலைக்காட்சியில் வெளியிடுவர். எனவே, தொலைக்காட்சிகளில் வரும் இராமாயணத்தை நம்பி விவாதம் செய்வது கூடாது.

மூல இராமாயணமான வால்மீகி இராமாயணத்தை படிப்பதன் மூலமாக திருப்திகரமான பதிலைப் பெற முடியும். வால்மீகி இராமாயணத்தைப் படித்தவர்கள் “வாலியை இராமர் ஏன் வதம் செய்தார்” என்ற கேள்வியை ஒருபோதும் கேட்கமாட்டார்கள்; ஏனெனில், இராமரின் செயலுக்கான காரணம் அங்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீ இராமரே பரம்பொருள், பரம புருஷ பகவான் என்பதும் அங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது.

முழுமையாக ஏற்க வேண்டும்
சிலரோ, “இராமர் வாலியை வதம் செய்தது அநீதி! இஃது எல்லாருக்கும் தெரியும், இதற்காக இராமாயணம் படிக்க வேண்டிய அவசியமில்லை,” என்று வாதம் செய்கிறார்கள். ஒரு விதத்தில் பார்த்தால், இராமரை எதிர்க்கும் இவர்கள், இராமர் என்ற ஒருவர் வாழ்ந்தார் என்பதையும் அவர் வாலியைக் கொன்றார் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். ஒருவேளை இராமர் வாழ்ந்ததை அவர்கள் நம்பாவிடில், அவர்களது வாதங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இல்லாத ஒன்றைப் பற்றி வாதிடுவது முறையா? பிரச்சனை என்னவெனில், வாதிடுவோர் முழு இராமாயணத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை; மாறாக, அவர்களின் குற்றச்சாட்டுகளை மேலோட்டமாக ஆதரிக்கும் பகுதிகளை மட்டும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நியாய சாஸ்திரங்களிலிருந்து ஸ்ரீல பிரபுபாதர் பின்வரும் கதையைக் கூறுவதுண்டு: முட்டாள் ஒருவனால் வளர்க்கப்பட்ட கோழி ஒன்று தினமும் தங்க முட்டையிட்டு வந்தது. “இக்கோழியினால் எனக்கு நல்ல இலாபமே, ஆனால் இதற்கு இரை போடுவதற்கு செலவாகிறதே. இதன் முன்பகுதியை (தலையை) வெட்டிவிட்டால், எனக்கு செலவு இருக்காது, பின்பகுதியிலிருந்து செலவின்றி தங்க முட்டையைப் பெறலாம்,” என்று எண்ணிய அவன் கோழியின் தலையை வெட்டினான். விளைவு: அனைத்தையும் இழந்தான். இது, அர்த குகுட்டி நியாய, அதாவது “அரைக் கோழிக் கொள்கை” எனப்படுகிறது.

சாஸ்திரங்களின் ஒரு பகுதியை மட்டும் ஏற்று மற்றொரு பகுதியை நிராகரிக்கக் கூடாது என்ற போதனையை இக்கதையிலிருந்து நாம் பெறுகிறோம். முழு இராமாயணத்தையும் ஏற்று, அதனை முறையாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தத்தமது சொந்த கருத்துகளுக்கு சாதகமானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை நிராகரிப்பது சரியல்ல. இராமர் வாலியை வதம் செய்தார் என்னும் ஒரு பகுதியை மேற்கோள் காட்டுவோர், வாலி ஸ்ரீ இராமரை பரம புருஷ பகவானாக ஏற்று புகழும் பகுதியை விட்டு விடுகின்றனர்.

கோழியின் தலையை வெட்டிவிட்டு தங்க முட்டையை எதிர்பார்த்து அழும் முட்டாள்

வாலியை ஸ்ரீ இராமர் வதம் செய்தல்
வாலிக்கும் இராமருக்கும் இடையில் நடந்தது என்ன என்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்த அல்லது தெரிவிக்க, இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள சம்பவத்தின் சுருக்கத்தைச் சற்று காண்போம்.

கிஷ்கிந்தையின் அரசனான வாலிக்கு அவனது இளைய சகோதரனான சுக்ரீவன் சேவை செய்து வந்தான். அவனுக்கு மயவி என்ற அசுரனுடன் ஒரு பெண்ணின் காரணத்தினால் பெரும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மயவி வாலியைப் போருக்கு அழைத்தான், வாலி பெருங்கோபத்துடன் மாளிகையை விட்டு வெளியேற, சுக்ரீவனும் அவனைப் பின்தொடர்ந்தான். வாலியைக் கண்டு அச்சமுற்ற மயவி புதர்கள் நிறைந்த ஆழமான இருண்ட குகைக்குள் நுழைந்தான். அதன் வாயிலைக் காவல் காக்குமாறு சுக்ரீவனுக்கு கட்டளையிட்ட வாலி அசுரனுடன் போரிட குகைக்குள் சென்றான். ஒரு வருடம் கழிந்த பின்னரும் வாலியைப் பற்றிய எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. குகையிலிருந்து இரத்தம் வெளிவருவதையும் பல்வேறு அசுரர்களின் குரலையும் கேட்ட சுக்ரீவன், வாலியின் குரலைக் கேட்க முடியாததால், வாலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தீர்மானித்து, குகையின் வாயிலை ஒரு பெரும் பாறையினால் மூடினான். சகோதரனுக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்துவிட்டு, சுக்ரீவன் கிஷ்கிந்தைக்குத் திரும்பியபோது, அமைச்சர்கள் அவனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்தனர். சுக்ரீவனும் நீதி நெறிப்படி அரசாளத் தொடங்கினான்.

சில மாதங்கள் கழித்து, எல்லாரும் வியக்கும் வகையில், வாலி அசுரனைக் கொன்றுவிட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பினான். சுக்ரீவனை அரியணையில் கண்ட வாலி கடுங்கோபம் கொண்டு அமைச்சர்களைக் கைது செய்தான். சுக்ரீவனோ தனது சகோதரனுடன் சண்டையிடாமல் அவன் மீதுள்ள மரியாதையால் பணிவுடன் ராஜ கிரீடத்தை வாலியின் காலடியில் வைத்து வணங்கினான். தான் ஒருபோதும் பலவந்தமாக இராஜ்ஜியத்தைப் பறிக்க எண்ணியதில்லை என்றும், தனது உள்நோக்கமற்ற குற்றத்தினை மன்னித்துவிடுங்கள் என்றும் வேண்டினான். ஆனால் வாலியின் கோபம் சற்றும் தணியவில்லை, குகை வாயிலை மூடிவிட்டு இராஜ்ஜியத்தை கைப்பற்றியதாக சுக்ரீவன்மீது குற்றம் சாட்டினான். சுக்ரீவனுடைய மனைவி, சொத்துக்கள் உட்பட அனைத்தையும் பறித்துவிட்டு, உடுத்தியிருந்த ஒரே உடையுடன் அவனை இராஜ்ஜியத்தை விட்டே வெளியேற்றினான்.

குற்றமற்ற சுக்ரீவனுக்கு வாலி இழைத்த அநீதியானது சுக்ரீவனை இராமரிடம் சரணடையச் செய்தது. வாலியைக் கொன்று சுக்ரீவனின் மனைவியை மீட்டுத் தருவதாக ஸ்ரீ இராமர் சுக்ரீவனிடம் உறுதியளித்தார், அதற்கு பிரதிபலனாக சீதையைத் தேடுவதில் தானும் வானர சேனைகளும் தங்களுக்கு உதவுவோம் என்று சுக்ரீவன் ஸ்ரீ இராமரிடம் உறுதியளித்தான். அதன் விளைவாக வாலியுடன் சுக்ரீவன் சண்டையிட்டபோது, பகவான் இராமர் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து நின்று வாலியை வதம் செய்து நீதியை நிலைநாட்டினார்.

வாலியின் வாதங்கள்
வாலியை இராமர் கொன்றது தவறு என்று கருத்துரைப்போர், வாலியே இதுகுறித்து இராமரிடம் கேட்டுள்ளான் என்பதை இராமாயணத்தைப் படித்தால் அறிந்துகொள்ள முடியும். இராமரின் அம்பினால் பாதிக்கப்பட்ட வாலி கடுங்கோபம் கொண்டு பல்வேறு கேள்விகளை ஸ்ரீ இராமரிடம் முன்வைத்தான். அவையனைத்திற்கும் ஒன்றன்பின் ஒன்றாக இராமர் பதிலளித்தார். வாலியின் வாதங்கள் மற்றும் ஸ்ரீ இராமரின் பதில்களில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு காணலாம்.

நான் என்ன தவறு செய்தேன்?
“மன்னர் என்பவர் வாய்மை, மன்னிக்கும் தன்மை, மனவுறுதி ஆகிய தன்மைகளுடன் தீயோர்களை தண்டிப்பவராக இருக்க வேண்டும். மன்னரின் நற்குணங்களை நீங்கள் (இராமர்) சீராகப் பெற்றுள்ளீர் என்று நினைத்தேன், குற்றமற்ற என்னை எதிர்கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்தேன்,” என வாலி முறையிட்டான்.

“நான் குற்றம் செய்தவன் அல்ல,” என்ற வாலியின் வாதத்தினை ஸ்ரீ இராமர் பின்வருமாறு முறியடித்தார்: “காமத்தாலும் பேராசையாலும் நீ பாவகரமான செயல்களைச் செய்தாய். குறிப்பாக, உனது இளைய சகோதரனின் (சுக்ரீவனின்) மனைவியான ருமாவைக் கைப்பற்றி அவளை உனது மனைவியாக்கிக் கொண்டாய். இந்த ஒரு பாவச் செயல் போதும், உன்னை நான் தண்டிப்பதற்கு. மகள், மருமகள், சகோதரி, சகோதரனின் மனைவி ஆகியோருடன் உறவு வைப்பவர்களுக்கு மரணமே தகுந்த தண்டனை. ஓர் அரசன் பாவம் செய்தவனைக் கொல்லவில்லையெனில் அந்த பாவம் அரசனுக்கே வந்து சேரும்.”

உமக்கு என்ன அதிகாரம் உண்டு?
“நான் தனிப்பட்ட முறையில் உமக்கு எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. உம்முடைய நாட்டிலோ நகரத்திலோ எந்த தீங்கும் செய்யவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் என்னைக் கொல்ல உமக்கு என்ன அதிகாரம் உண்டு?” என்ற வாலியின் கேள்விக்கு ஸ்ரீ இராமர் பின்வரும் பதிலை வழங்கினார்: “மலைகள், காடுகள், நதிகள் உட்பட இந்த முழு பூமியும் அதிலுள்ள அனைத்தும் இக்ஷ்வாகு வம்சத்தினரின் ஆட்சிக்கு உட்பட்டது. இக்ஷ்வாகு வம்ச அரசர்களுக்கு எல்லா மனிதர்களையும் விலங்குகளையும் தண்டிப்பதற்கான முழு அதிகாரம் உள்ளது. மன்னரான பரதரின் கட்டளைப்படி நீதியிலிருந்து விலகியோரை தண்டிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு.”

நான் ஒரு சாதாரண வானரம்
“காடுகளில் வாழும் மிருகங்களான நாங்கள் பழங்களையும் கிழங்குகளையும் உண்டு வாழ்பவர்கள்,” என்று கூறிய வாலி, குரங்கான தன்னை சகோதரனின் மனைவியுடன் கொண்ட உறவிற்காக தண்டிக்கக் கூடாது என்று வாதிட்டான். “குரங்குகளைக் கொல்வது எதற்கும் பயனற்றது, குரங்கின் தோலை உடுத்த முடியாது, குரங்கின் மயிரும் எலும்புகளும் புறக்கணிக்கப்படுகின்றன, குரங்கின் மாமிசத்தைக்கூட உண்ண முடியாது–அப்படியிருக்கும் பட்சத்தில் என்னை ஏன் கொல்ல வேண்டும்?” என்று வாலி மேலும் வினவினான்.

வாலி தன்னை வெறும் குரங்காக அடையாளம் கண்டுகொள்ள நினைத்தான். ஆனால் வாலி சாதாரண குரங்கா என்ற கேள்வியைக் கேட்போம். வேதக் கடமைகளான சந்தியாவந்தனம், சூர்யோபஸ்தானம் போன்றவற்றிற்காக வாலி விரதங்களை அனுஷ்டிப்பதுண்டு. இதை வைத்துப் பார்க்கும்போது வானரங்கள் சாதாரண மிருகங்களைக் காட்டிலும் உயர்ந்தவை என்பதை உணரலாம்.

இருப்பினும், வாலியின் வாதத்திற்கு ஸ்ரீ இராமர் பின்வருமாறு பதிலளித்தார்: “மக்கள் மிருகங்களைப் பிடிக்கும்போது சில நேரங்களில் நேரடியாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும், சில நேரங்களில் தந்திரமாகவும் செயல்படுவதுண்டு. மேலும், சத்திரியர்கள் வேட்டையாடும்போது கவனமின்றி இருக்கும் மிருகங்களை மறைவான இடத்திலிருந்து அம்புகளால் தாக்குவதுண்டு. நீ ஒரு வானரம் என்பதால், மறைந்திருந்து, முன்னறிவிப்பின்றி உன்னைத் தாக்கியதில் எந்தக் குற்றமும் இல்லை.”

மறைந்திருந்து தாக்கியது ஏன்?
வாலியை இராமர் ஏன் மறைந்திருந்து தாக்க வேண்டும் என்ற கேள்வியும் மேற்கூறிய விடையில் அடங்கிவிடுகிறது. மிருகங்களை வேட்டையாடும்போது பெரும்பாலும் மறைந்திருந்து தாக்குவதே பழக்கம் என்ற ஸ்ரீ இராமரின் பதிலே போதுமானது.

வேத விதிகளின்படி அக்கிரமக்காரர்கள் ஆறு வகையினர் (பார்க்க, பகவத் கீதை உண்மையுருவில், 1.36). இவர்களை உடனே கொல்லலாம், அதனால் பாவம் ஏதுமில்லை. வாலி சுக்ரீவனிடத்தில் செய்த அக்கிரமத்திற்காக அவனை தண்டிக்க வந்த காவல் அதிகாரியைப் போன்றவர் ஸ்ரீ இராமர். “நான் வருகிறேன், உன்னை தயார்படுத்திக்கொள்” என்று அவர் அறிவிக்க வேண்டுமா என்ன? நிச்சயமாக அவசியம் இல்லை. எனவே, எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வாலியை வதம் செய்ததில் என்ன தவறு?

“வாலியை இன்று நான் நிச்சயம் வதம் செய்வேன்,” என்று இராமர் உறுதி பூண்டிருந்தார். ஒருவேளை இராமர் எதிர்தரப்பில் நேருக்கு நேராக நின்றிருந்தால், வாலி என்ன செய்திருப்பான்? (1) பயத்தினால் ஓடி ஒளிந்திருக்கலாம், (2) இராவணனிடம் கூட்டு சேர்ந்திருக்கலாம், (3) சுக்ரீவனைப் போன்று இராமரிடமே தஞ்சமடைந்திருக்கலாம், அல்லது (4) மொத்த வானரப் படைகளையும் கொண்டு இராமருடன் போர் புரிந்திருக்கலாம். இதில் எது நடந்திருந்தாலும் இராமரின் வாக்குறுதி தாமதமாகியிருக்க வாய்ப்பு உண்டு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.

ஒருவேளை சுக்ரீவனைப் போன்று இராமரிடம் வாலி தஞ்சமடைந்திருந்தால், சரணடைந்தவனைக் கொல்வது மரபல்ல என்பதால் வாலி கொல்லப்பட்டிருக்க மாட்டான். அப்போதுகூட முழுமுதற் கடவுளான இராமரால் சுக்ரீவனுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை ஏதாவதொரு விதத்தில் நிறைவேற்றியிருக்க முடியும் என்றபோதிலும், அதில் சில சிக்கல் வந்திருக்கும். ஒருவேளை மொத்த வானர சேனைகளையும் கொண்டு இராமருடன் வாலி போரிட்டிருந்தால், வானரங்கள் அனைவரும் மடிந்திருப்பர். வானரங்கள் இராமருக்கு உதவுவதற்காகத் தோன்றிய தேவர்கள், அவர்கள் கொல்லப்படுவதை இராமர் விரும்பவில்லை; அகந்தையால் மதிமயங்கிய வாலியை மட்டும் கொல்வதற்கு அவர் முனைந்தார்.

மேலும், யாரேனும் தனக்கு நேராக நின்று போரிட்டால், அவர்களின் சக்தியில் பாதி தனக்கு வந்துவிட வேண்டும் என்று வாலி ஒரு வரம் பெற்றிருந்தான். (இத்தகவல் வால்மீகி இராமாயணத்தில் இல்லை என்றபோதிலும் மற்ற இடங்களில் கூறப்படுவதுண்டு) இருப்பினும், பகவான் ஸ்ரீ இராமர் அனைத்து சக்திகளையும் கொண்டவர், வரம் தரும் தேவர்களுக்கும் அவரே சக்தியளிக்கிறார் என்பதால், வரத்தை மீறி அவரால் சுலபமாக வாலியை வதம் செய்திருக்க முடியும். ஆயினும், தேவர்கள் வாலிக்கு கொடுத்த வரத்தைக் காக்கவும் அவர்களின் மதிப்பை குறைத்துவிட வேண்டாம் என்பதற்காகவும், பகவான் இராமர் வாலியை மறைந்திருந்து வதம் செய்தார்.

இச்சமயத்தில், பிரம்மதேவரிடமிருந்து பல வரங்களை பெற்ற ஹிரண்யகசிபுவை நாம் நினைவு கொள்ளலாம். அவன் பெற்றிருந்த வரங்கள் அவனைப் பல்வேறு சூழ்நிலைகளில் காப்பாற்றியபோதிலும், பகவானோ பிரம்மதேவரின் வரம் பொய்க்காமல் இருக்கும்படி பாதி மனிதனும் பாதி சிங்கமுமான நரசிம்மராகத் தோன்றி ஹிரண்யகசிபுவைக் கொன்றார். அதுபோல, வாலி பெற்ற வரத்தையும் பொய்க்கச் செய்ய இராமர் விரும்பவில்லை.

வாலியும் சுக்ரீவனும் சண்டையிடுதல்; வாலியைத் தாக்குவதற்கான நிலையில் ஸ்ரீ இராமர்

என்னுடன் கூட்டு சேர்ந்திருக்கலாமே!
வாலியின் வாதங்களில் மற்றொன்று: “சுக்ரீவனிடமிருந்து உதவி பெற என்னைக் கொல்ல முனைந்துள்ளீர்கள். என்னை முதலில் அணுகியிருந்தால், உமது மனைவியைக் கடத்திச் சென்ற அந்த இராவணனை நான் ஒரே நாளில் இங்கு கொண்டு வந்திருப்பேன். அதுவும் அவனைக் கொல்லாமல், கயிற்றால் கட்டி தங்களிடம் கொண்டு வந்திருப்பேன். சீதையை தங்களுக்கு அர்ப்பணித்திருப்பேன்.”

இதற்கு ஸ்ரீ இராமர் அளித்த பதில்: “தர்ம சாஸ்திரங்களின்படி, ஒரு மன்னன் தனது எதிரியை வெற்றிகொள்ள நட்புடைய மற்றொரு மன்னனின் உதவியை நாடலாம். அதன்படி, உன்னைக் கொல்வதாக நான் சுக்ரீவனுக்கு உறுதியளித்தேன். சத்திரியன் கொடுத்த வாக்கை மீறுவதில்லை என்பதால், அந்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளேன். நீ தர்மத்தின் விதிகளை மீறியவன். மேலும், நீ எனது நண்பனான சுக்ரீவனின் எதிரி என்பதால், எனக்கும் நீ எதிரியே.”

ஸ்ரீ இராமர் முதலில் சந்தித்தது சுக்ரீவனைத்தான், அப்போதே வாலியைக் கொல்வதாக உறுதிகொடுத்தார். எனவே, வாலியுடன் சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை. வாலி மன்னிக்கப்பட்டால், சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் சிக்கல் வந்திருக்கும். மேலும், வாலியே இராவணனை அடக்கி சீதையை அழைத்து வந்திருந்தால், இராவணனைக் கொல்வதற்காக தோன்றிய இராமரின் லீலைகள் பூரணமானதாக அமைந்திருக்காது. இராவணனைச் சார்ந்த மற்ற அசுரர்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி, ருமாவின் நிலை என்ன? எனவே, எப்படிப் பார்த்தாலும், வாலியின் பக்கம் எந்தவொரு நியாயமும் இல்லை, இராமரின் செயலில் எந்தவொரு அநியாயமும் இல்லை.

வாலியின் வருத்தமும் உன்னத இலக்கும்
முதலில் ஸ்ரீ இராமரை எதிர்த்து கூக்குரலிட்ட வாலி, இராமரின் அறிவு நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட பின்னர், தனது மோசமான செயல்களை எண்ணி வெட்கப்பட்டான். “மனிதரில் மாணிக்கமே, தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை, இதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் தவறிழைத்தவன், அறியாமையால் கடினமாகப் பேசிய என்னை மன்னித்து கருணையைப் பொழிய வேண்டுகிறேன்,” என்று கூப்பிய கரங்களுடன் வாலி இராமரிடம் வேண்டினான்.

பிறகு, பகவான் இராமர், “நீ செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவித்துவிட்டாய். தற்போது எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டுவிட்டாய்,” என்று வாலிக்கு உறுதியளித்தார். ஸ்ரீ இராமரின் வார்த்தைகளாலும் அம்பினாலும் புனிதமடைந்த வாலி மோக்ஷத்தையும் உன்னத இலக்கையும் அடைந்தான். இவையெல்லாம் வாலிமீது பகவான் இராமர் கொண்ட கருணையே.

ஒரு வழக்கில் எதிரெதிர் தரப்பினர் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அங்கு வழக்கு என்பதே இல்லை. அதுபோல, பகவான் இராமர் தனது செயலின் நியாயத்தை வாலியிடம் தெளிவுபடுத்தினார், வாலியும் அதனை ஏற்றுக்கொண்டு இராமரிடம் சரணடைந்தான். வழக்கு முடிவுற்றது. இதன் பின்னரும் வாதம் செய்வதில் அர்த்தமில்லை. ஒருவேளை வழக்கு முடியவில்லை என்று வாலி நினைத்திருந்தால், சுக்ரீவனை மன்னராகும்படி கட்டளையிட்டிருக்க மாட்டான், சுக்ரீவனுக்கு தனது கழுத்திலிருந்த மணியை வழங்கியிருக்க மாட்டான், மேலும், வாலியின் மகனான அங்கதன் சுக்ரீவனுக்கு உறுதுணையாக செயல்பட்டிருக்க மாட்டான்.

எனவே, அறியாமையிலுள்ள மக்களே இராமரின் மீது குற்றம் சுமத்துவர் என்பதை இதிலிருந்து அறியலாம். வாலிக்கு கருணை வழங்கவும், கடக்கமுடியாத பிறப்பு, இறப்பு எனும் மாபெரும் சமுத்திரத்திலிருந்து அவனை விடுவிக்கவுமே இராமர் வாலியைக் கொன்றார். இதன் மூலமாக, பகவான் தனது லீலைகளின் பூரணமான தன்மையை வெளிப்படுத்துகிறார்–அவரது லீலைகள் அனைத்தும் நன்மைக்காகவே; அவர் ஒருவரை ஆசீர்வதித்து மற்றொருவரை வதம் செய்தாலும் இருவருமே உண்மையில் பலனடைகின்றனர். இதுவே இராம லீலைகளின் உன்னதத் தன்மை.

வாலியை ஸ்ரீ இராமர் கொன்றிருக்காவிடில், சுக்ரீவனுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் வந்திருக்கும்.

ஸ்ரீ இராமரின் தீர்ப்பை ஏற்று வாலி மரணத்தைச் சந்தித்தல்

லீலைகளை யாரால் புரிந்துகொள்ள முடியும்?
இறைவனின் முன்பாக உடலை நீத்தல் மாபெரும் பாக்கியம்; பகவான் கிருஷ்ணரின் முன்பாக உடலை நீத்த பீஷ்மதேவரின் மாபெரும் அதிர்ஷ்டத்தை ஸ்ரீமத் பாகவதம் புகழ்கிறது. அதுபோலவே, பகவான் இராமரால் வதம் செய்யப்பட்டு, அவரிடம் மன்னிப்பை வேண்டிய பின்னர், இராமரைப் பார்த்தபடியே மரணமடைந்த வாலி, தனது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலையடைந்தான். பகவானின் இராஜ்ஜியத்திற்குத் திரும்பிச் செல்லுதல் என்பது மாபெரும் பாக்கியமன்றோ! பகவானிடமிருந்து தான் பெற்ற பாக்கியத்தை ஒரு வானரத்தால்கூட உணர முடிந்தது. ஆனால் நவீன கால மக்களோ பௌதிக நீதியையும் தர்க்கத்தையும் வைத்து இராமரைக் கேள்வி கேட்கின்றனர். என்னே விந்தை!

அத: ஸ்ரீ-கிருஷ்ண-நாமாதி  ந பவேத் கிராஹ்யம் இந்த்ரியை
சேவோன்முகே ஹி ஜிஹ்வாதவ்  ஸ்வயம் ஏவ ஸ்புரத் யத:

“பௌதிகமாக களங்கமடைந்த புலன்களின் மூலமாக பகவானின் உன்னதமான நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகளை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. பகவானின் தொண்டில் ஒருவர் ஈடுபடும்போது, அதனால் அவரிடம் திருப்தியடையும் பகவான், தானே முன்வந்து தன்னை வெளிப்படுத்துவார். அப்போது மட்டுமே அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.” (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.234)

அதாவது, பகவானிடம் சரணடைந்து அவருக்கு சேவை செய்யாத வரை, அவரது லீலைகளின் உன்னதமான தன்மைகள் மர்மமாகவே இருக்கும். பகவான் எதையும் செய்ய வல்லவர், அவரது செயல்களை அதிகாரபூர்வமான பக்தர்களிடமிருந்து கேட்டால் மட்டுமே உணர முடியும், சவாலான கேள்விகளாலோ பௌதிகமான தர்க்கத்தினாலோ அறநெறிகளாலோ இயலாது.

கேள்வி எழுப்புவோரின் நிலை
இராமரைப் பற்றி சவால் விடுவதற்கு முன்பாக சற்று சிந்திக்க வேண்டும். அவர் குற்றவாளி என்றால், “ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்கள் அவரை வழிபட்டது ஏன்? பிரம்மாண்டமான கோவில்களை எழுப்பி அவரது புகழையும் போதனைகளையும் பரப்பியது ஏன்? அவர்கள் அனைவரும் மூடர்களா?” நிச்சயமாக இல்லை. அவர்கள் இராமாயணத்தை முழு நம்பிக்கையுடன் படித்தனர், முறையாகக் கேட்டனர், ஒழுங்காகப் புரிந்து கொண்டனர், இராமரை இதயப்பூர்வமாக வழிபட்டனர்.

ஆனால் இன்றைய மக்களோ, மாமிசம், மது, மாது, சூது போன்ற எல்லாவித பாவச் செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, சாஸ்திரங்களைப் படிப்பதில்லை, பக்தர்களிடமிருந்து கேட்பதில்லை, கோவிலுக்குச் செல்வதில்லை, எந்தவொரு புண்ணியத்தையும் செய்வதில்லை. ஆயினும், பகவான் இராமரிடத்தில் திறமையாக குறை காண்கின்றனர். என்ன ஒரு மூடத்தனம்! மேலும், அவர்கள் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் இழிவாகப் பேசுகின்றனர். நமது முன்னோர்கள், இராமாயணம், மஹாபாரதம் போன்ற “கற்பனை” கதைகளைக் கேட்டு நேரத்தை வீணடித்தார்கள் என்றும், அவர்களைக் காட்டிலும் தாங்கள் புத்திசாலிகள் என்றும் நினைக்கின்றனர். கற்றறிந்த பண்டிதர்களைக் காட்டிலும் “உண்மையான அர்த்தங்களை” தாங்கள் கிரகிப்பதாகவும், தங்களின் தர்க்கங்கள் வேதகால ரிஷிகளைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் எண்ணுகின்றனர். இவர்கள் இராமாயணம், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற எந்த சாஸ்திரத்தையும் படித்ததில்லை; ஆனால் எல்லா வேதங்களையும் தொகுத்த வியாஸதேவரைவிட அதிகம் அறிந்தவராக தம்மை எண்ணிக் கொள்கின்றனர்.

பகவான் இராமரை வழிபட மாபெரும் கோவில்களை எழுப்பிய சேரர், சோழர், பாண்டியர், மற்றும் இதர மன்னர்களெல்லாம் அறிவற்றவர்களா? பகவான் இராமரைப் புகழ்ந்து அவரை வழிபட்டவர்களான சங்கராசாரியர், இராமானுஜாசாரியர், மத்வாசாரியர் போன்ற ஆச்சாரியர்கள் குற்றம் செய்தவர்களா? பிரம்மதேவரும் சிவபெருமானும்கூட தவறானவர்களோ! அவர்களும் இராமரை வழிபட்டு அவரது திருநாமத்தை உச்சரிக்கின்றனரே. நவீன நாகரிகத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் மூடர்களை மட்டுமே இன்றைய மக்கள் பெருமையாக நினைக்கின்றனர்.

சற்று யோசித்துப் பாருங்கள்!
ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியத்தையும் அறிவையும் மறுக்கலாமோ! உங்களின் எண்ணங்கள் தவறாகவும் முன்னோர்களின் எண்ணங்கள் சரியாகவும் இருக்கலாமே! சற்று நேர்மையாக இருந்து நடுநிலையுடன் உண்மையை ஏன் எதிர்கொள்ளக் கூடாது?

நாம் ஏன் சாஸ்திரங்களை ஆராய்ந்து தீர்வு காணக் கூடாது? பகவானின் தெய்வீக வார்த்தைகளான வேதங்களிடம் ஏன் தஞ்சமடையக் கூடாது? ஏன் (அனைத்து இஸ்கான் கோவில்களிலும் கிடைக்கும்) வால்மீகி இராமாயணத்தைப் படிக்கக் கூடாது? ஏன் பகவான் இராமரிடத்தில் சரணடைந்து அவரின் அருளை வேண்டக் கூடாது? கிருஷ்ணர் மற்றும் இராமரின் திருநாமங்களை உச்சரித்து உன்னதமான ஆனந்தத்தை ஏன் அனுபவிக்கக் கூடாது? தூய்மையான, அமைதியான, மற்றும் அர்த்தமான வாழ்க்கையை ஏன் வாழக் கூடாது?

பாரதத்தின் பண்பாடும் பாரம்பரியமும் மோசமானதாக இருப்பின், வெளிநாட்டைச் சேர்ந்த எத்தனையோ பேர் (இஸ்கானில் காண்பதுபோல) இதனை ஏன் பின்பற்ற வேண்டும்? மாயையில் மயங்கி இராமரிடம் சவால் விட்ட இராவணனைப் போல நாமும் மயங்கிவிடலாமா? இராவணனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இராமாயணத்தைப் படித்தோர் அறிவர், படிக்காதோர் முதல் வாய்ப்பிலேயே படிக்க வேண்டும்.

ஷராபிதப்தேன விசேதஸா மயா

ப்ரதூஸித: த்வம் யத் அஜாநதா விபோ

இதம் மஹேந்த்ரபம பீம விக்ரம

ப்ரஸாதித: த்வம் க்ஷம மே நரேஷ்வர

“எம்பெருமானே, மிகச்சிறந்த தைரியம் கொண்டவரே, மக்களின் இறைவனான இராமரே, அம்பினால் துளைக்கப்பட்டபோது முறையாக சிந்திக்க இயலாமல், அறியாமல், தங்களைப் பற்றி பெரிதும் அவதூறாகப் பேசிவிட்டேன். என்னை தயவுசெய்து மன்னித்தருளும்படி பணிவுடன் வேண்டுகிறேன்,” என்ற வாலியின் வார்த்தைகளை இராமர் குற்றவாளி” என்று நினைத்த மற்றவர்களும் உரைப்பார்கள் என்று நம்புகிறோம்.

மாபெரும் கோவில்களைக் கட்டி ஸ்ரீ இராமரை வழிபட்ட மன்னர்கள் முட்டாள்களா? சற்று சிந்தியுங்கள்