Tuesday, February 20, 2018

காசி முக்தி ராம நாமத்தால்

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||

காசியல் இறப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பது ஸ்ரீ ராம நாமத்தாலே!

இதன் வரலாறு:- முன்னொரு காலத்தில் சிவன் பிரமனின் சிரசை அறுக்க, அச்சிரம் அரனின் கையைவிட்டு அகலாதிருக்க; பிரமஹத்தியால் வந்த வினையைத் தீர்க்கப் பிக்ஷாடராய், பூமி எங்கும் சுற்றித் திரிந்து திருமகள் நாதன் உகந்தறைகின்ற காசி நகரை அணுகியதும், அவ்வரன் கையிலிருந்த கபாலம் கழன்று விழுந்தது. இதைக்கண்டு சிவன், திருமாலை வணங்கி "றைவா! நீ உகந்துறைகின்ற இத்திருப்பதியை அடைந்ததும் என்னைப்பற்றிய பாதகம் விலகியது. நீ வாழும் பதிக்கே இவ்வளவு மகிமை என்றால் உன் புகழை யாரால் ஓதமுடியும்?" என்று துதித்தான்.

அப்பொழுது காசிநகர் மாதவனும் பரமசிவனைப்பார்த்து; "சிவனே! இன்றுடன் உமது இன்னல் அகன்றது,இனி நீர் உமது உறைவிடமான கைலைக்குச் செல்வீர்" என்று  அருளிச் செய்தார். சிவனும் பிடைபெற்று தன் விடையின் மீதேறிக் காசிமாநகரை விட்டகன்றார். அந்நகரை நீங்கியதும், முன்பு போல் மண்டையோடு சிவன் கையைப் பற்றிக்கொண்டது. மறுபடியும் காசிப்பதிக்கி வந்து கமலக்கண்ணனை அடி பணிந்து, நடந்த வரலாற்றைக் கூறி; "மாதவா! நீ வசிக்கும் இப்புண்ணிய நகரத்தின் மகிமையால் என் மாபாதகம் நீங்கப் பெற்றேன். இனியும் இப்பதியை விட்டகல்வேனல்லேன்.
எப்பொழுதும் இனி இப்பதியிலேயே இருக்க வரந்தரவேண்டும்" என்று வேண்டினார்.

அரனுக்கிரங்கிய அச்சுதன் காசியம்பதியை சிவனுக்கு அளித்து, தான் பிரயாகையை அடைந்தான். அன்று முதல் சிவன் காசியில் இருந்துகொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்கொடுத்து வரலாயினான். இதை உணர்ந்த அந்தனரும், யோகியரும், ஞானியரும் அப்பதிக்கு வந்து முக்தியை விரும்பத் தவம் கிடந்தனர்.

இவர்களது நிலையைக் கண்ட சிவன், 'யாம் இவர்கள் விரும்பும் முக்தியை எவ்வாறு கொடுக்கவல்லோம்? என்று பிரமனைத் தியானித்தார். அவ்வமயம் நான்முகனும் அங்கு வந்து 'உம் சிந்தையில் உள்ள விஷயம் யாது?' என்றார். சிவ பிரானும் பிரமனை நோக்கி, "இங்குள்ள ஞானியர்கள் என்னை முக்திதரும் தெய்வமாக மதித்துத் தவம் செய்கின்றனர் இவர்கள் கருதுவதை நான் உதவுவதற்க்கு உபாயம் உரைத்தருள்வீர்" என்று வேண்டினார்.

பிரமனும், தாரகமஹாமந்திரமாகிய ஸ்ரீராம மந்திரத்தைச் சிவனுக்கு உபதேசித்து, "இனி கங்கைக் கரையில் சரீரத்தை விடுவோர் காதில் இம்மந்திரத்தை உபதேசித்திடுவீர். இதன் பயனாக அவர்களும் முக்தியைப் பெறுவார்கள்; உமது எண்ணமும் ஈடேறும்" என்று கூறி மறைந்தார். அன்றமுதல் இன்று வரை அரன் காசியில் மரணடைபவர் காதில் ராமநாமத்தை ஓதி அவர்களுக்கு முக்திபேற்றைக் கொடுத்து மகிழ்கின்றனன். இவ்வரலாறு நாரதீயம், அகத்திய இராமசங்கிதை முதலியவற்றில் சொல்லப் பட்டிருப்பதாக இருசமய விளக்கம் விவரிக்கும்.

சான்றுகள்:- அத்வைதமத ஸ்தாபகர் ஆதிசங்கரர். அவர் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்திற்க்கு பாஷ்யமிட்டார். கோவிந்தனையே பூஜிக்கவேண்டுமென்று 'பஜ கோவிந்தம்' என்ற நூலைப் பாடினார். அவராலேயே தாரக மந்திரமாகிய இராமநாமத்தின் ஒப்பற்ற தன்மையும் விளக்கப்பட்டிருக்கிறது. அவர் அவ்வாறு இராமநாமத்தின் பெருமையைக் கூறுமிடத்து, காசியில் பரமசிவன் இராம நாமத்தை எப்போதும் ஜபித்துக் கொண்டு வசிப்பதையும், காசியில் மரணமடைந்த ஜீவனுடைய காதில் சிவன் தாரகமந்திரமாகிய இராம நாமத்தைத் தானே 'ராம ராம ராம' என்று உபதேசிப்பதையும் விளக்கி "ஜனன மரணச் சிறையிலிருந்து விடுவித்துக் காப்பதும், உயிர்பிரியும்போது பரமசிவனால் உபதேசிக்கப்பெறுவதுமான இராம நாமத்தை நான் பஜிக்கிறேன். அதுவும் ஒருமுறையல்ல. நான்கு தடவை பஜிக்கிறேன்" என்று அறுதியிட்டுக் கூறும்
"யத் வர்ணயத் கர்ணமூலேSந்தகாலே
ஸிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம்|
தேகம் பரம் தாரகம் ப்ரஹ்மரூபம்
ஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்||"
என்ற சுலோகத்தின் பொருளுணர்க.

மேலும், சிவன் பார்வதியின் கேள்விக்குப் பதில் சொல்லு மிடத்து. "இராமநாமத்தைச் சொன்னால் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ர நாமத்தைச் சொன்ன பலன் உண்டு" என்றும், தானும் அந்த இராமநாம கீத ஒலியிலே ரமித்துக்கொண்டிருப்பதாகவும் கூறும்

"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே|
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே||"
என்னும் விஷ்ணுஸஹஸ்ரநாம சுலோகம் காண்க. மற்றும்,

"இராமதத் துவத்தை இதயத்தில் வைத்தும் இராமரா மேதி என்றுதான் துதித்தும்".
[சோலைமலைக் குறவஞ்சி பக் 79. வரி 99,100] என்று (ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் வெளியீடான) சோலைமலைக் குறவஞ்சி பாடுவது நோக்குக.

"கையில் துளசிமாலை, நெஞ்சில் இராமதத்துவம், சிரசில் கேசவனுடைய ஸ்ரீபாததீர்த்தம், நாவின் நுனியில் தாரக நாம மாகிய இராம மந்திரம், இவைகளைத் தரித்து நிற்க்கும் சிவனை மஹா பாகவதனாக நினைக்கிறேன்" என்ற கருத்துக்கொண்ட,
"ஹஸ்தேSக்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம்
ஸ்வமஸ்தகே கேஸவபாத தீர்த்தம்
ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்த்ரம்
ஸிவம் மஹாபாகவதம் ஸ்மராமி||" என்ற ச்லோகம் இங்கு கருதத் தக்கது.

[பரப்பிரம்ம விவேகம் என்னும் நூலின் படைப்பில் இருந்து இப்பதிவு]

No comments:

Post a Comment