||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||
ஸ்ரீமந்நாராயணனே பரமாத்மா என்றும், அந்த பரமாத்மாவே, அனைத்துலகுக்கும் ஸ்ருஷ்டி,ஸ்திதி,ஸம்ஹார கர்த்தாவாக விளங்குகிறான் என்றும், அந்த எம்பெருமானுக்கு சேஷப்பட்டவைதாம் சித்தும், அசித்தும் என்று பார்த்திருக்கிறோம். மேலே, அந்த எம்பெருமான் எழுந்தருளியுள்ள நிலைகள் என்னென்னவென்பதைப் பார்ப்போம். எம்பெருமானுடைய ஐந்து நிலைகள் என்னென்னவென்றால்,
பரத்வம்
வ்யூஹம்
விபவம்
அந்தர்யாமித்வம்
அர்ச்சாவதாரம் ஆகியனவாம்.
பரத்வம்:
பரத்வம் என்பது எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் நிலையாகும். வைகுண்டேது பரேலோகே ச்ரியாஸார்த்தம் ஜகத்பதி:, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ என்று புராணங்கள் கொண்டாடும்படியும், தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதாபச்யந்தி ஸூரய: என்று வேதங்கள் கொண்டாடும்படியும், எம்பெருமான் திருநாட்டில் எழுந்தருளியுள்ள நிலை பரத்வமாகும். ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழி தொடக்கத்திலேயே அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று பெருமானைக் கொண்டாடுகிறாரே! அந்த ஸ்ரீவைகுண்டத்திலே கொள்ளமாளா இன்பவெள்ளமான பெருமான், தன் அடியவர்களான நித்யஸூரிகளோடும், முக்தாத்மாக்களோடும் ஸாமகானம் கேட்டுக் களிக்கிறான். ஸம்சாரத் துன்பத்தில் உழன்றவன், எம்பெருமானை சரணமாகப் பற்றி, தன் எல்லாக் கர்மங்களும் நீங்கப்பெற்று, ஸ்ரீவைகுண்டத்தை அடைகிறான். ஆங்கே எம்பெருமானோடு சேர்ந்து, அவன் குணங்களை அனுபவித்து மகிழ்கிறான். மீண்டும் பிறப்பதே இல்லை. அந்த ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானை அடைந்தவன் திரும்புவதே இல்லை. அந்த ஸ்ரீவைகுண்டத்தை அடைவிக்கும் உபாயமாகவும், அடையவேண்டிய இலக்கான உபேயமாகவும் எம்பெருமான் தானே இருக்கிறான்.
எம்பெருமானுடைய பரத்வத்தை எவ்வளவு விரிவாக உரைத்தாலும், பேசித் தலைக்கட்ட முடியாதாகையால், விரிவுக்கஞ்சி ஒருவாறு விண்ணப்பம் செய்தேன். எம்பெருமானுடைய வ்யூஹாவஸ்தையைப் பற்றித் தொடர்ந்து அனுபவிப்போம்.
வ்யூஹம்:
எம்பெருமான் திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ள நிலை வ்யூஹம் எனப்படும். வ்யூஹம் என்றால் பிரிவு என்று பொருள். அடியவர்களை ரக்ஷிக்க பரவாஸுதேவனான எம்பெருமான் தன்னையே வ்யூஹவாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் ஆகிய நால்வராகப் பிரித்துக்கொண்டு, திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ளான். ஜீவத்மாக்களிடம் வைகுந்தத்தை அடையும் ஆசை வளர்வதற்காக அவர்களைப் படைத்து, காத்து, சாஸ்த்ரத்தையும், அதனாலே வரும் தத்வஞானத்தையும் கொடுத்து, தர்மஸ்தாபனம் பண்ணவே பகவான் தன்னை நால்வராகப் பிரித்துக்கொண்டு விளங்குகிறான் என்று ஸ்ரீபாஞ்சராத்ர சாஸ்த்ரம் சொல்கிறது.
பகவான் என்ற சொல்லுக்கு ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் ஆகிய ஆறு குணங்களையும் உடையவன் என்று பொருள். இதில் ஆறுமே ஸ்ரீவைகுண்டநாதனிடமும், வ்யூஹத்தில் முதல் மூர்த்தியான வாஸுதேவனிடமும் முழுமையாக விளங்கும். மற்ற மூவரிடமும் இரண்டிரண்டு குணங்கள் காணப்படும்.
1)ஸங்கர்ஷணன்- ஞானம், பலம்.
2)ப்ரத்யும்நன்- ஐச்வர்யம், வீர்யம்
3)அநிருத்தன்- சக்தி, தேஜஸ்.
ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்(படைத்தல், காத்தல், அழித்தல்) ஆகியவையே முத்தொழில்கள். இவை மூன்றையும்ஸ்ரீவைகுண்டநாதனும், வ்யூஹவாஸுதேவனும்பண்ணுவர்கள். ப்ரளயத்தின் போது உலகைத் தன்னுள் ஒடுக்கும் ஸங்கர்ஷணன் வேதங்களைக் கொடுக்கிறான். உலகைப் படைக்கும் ப்ரத்யும்நன் ஜீவாத்மாக்களை வேதமார்க்கத்தைப் பின்பற்ற வைக்கிறான். உலகைக் காக்கும் அநிருத்தன் வேதத்தின் வழிநடப்பவர்களுக்குத் தத்வஞானத்தைக் கொடுக்கிறான். இந்த நாலு வ்யூஹமூர்த்திகளும் முறையே நிறம், திருக்கரங்கள், திருவாபரணங்கள், திவ்யாயுதங்கள் ஆகியவற்றில் வேறுபட்டிருப்பர்.
ஆக, பரமபதநாதனான எம்பெருமான் நம்மை ரக்ஷிக்க வேணும் என்பதற்காகவே திருப்பாற்கடலில் தன்னையே நால்வராகப் பிரித்துக்கொண்டு விளங்குகிறான்.
விபவம்:
எம்பெருமான் பண்ணும் அவதாரங்களெல்லாம் தன் அடியார்கள் தன்னை அனுபவிக்கைக்காக. நம்போல்வார் அவனிடத்தில் ஈடுபட்டு, அவனை அடைய ஆசைப்பட வேணும் என்பதற்காகவே அவன் நம்மிடையே வந்து அவதரிக்கிறான். இப்படி அவன் பண்ணும் அவதாரங்கள் இரண்டு வகைப்படும். அவை:
(1) முக்யாவதாரங்கள்
(2) கௌணாவதாரங்கள்
முக்யாவதாரங்கள்: பகவான் தனக்கே உரியதான திவ்யமங்கள விக்ரஹத்தோடு,அப்ராக்ருதமான திருமேனியோடு நேரே திருநாட்டிலிருந்து இவ்வுலகில் அவதரித்தால் அவை முக்யாவதாரங்கள் எனப்படும். முக்யாவதாரத்துக்கு எடுத்துக்காட்டு – வராஹன், நரஸிம்ஹன், ராமன், கண்ணன் முதலான அவதாரங்கள். இந்த முக்யாவதாரங்களே நாம் த்யாநிக்க உகந்தவையாகும்.
கௌணாவதாரங்கள்: பகவான் நேரே இவ்வுலகில் தன் திருமேனியோடு அவதரிக்காமல் ஒரு ஜீவாத்மாவினுள் தான் புகுந்து பண்ணும் அவதாரங்கள் தான் கௌணாவதாரங்கள் எனப்படும். கௌணாவதாரத்துக்கு எடுத்துக்காட்டு – பலராமன், பரசுராமன் முதலான அவதாரங்கள். இவை நாம் த்யாநிக்க உகந்த அவதாரங்கள் அன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கௌணாவதாரங்களும் ஸ்வரூப ஆவேச அவதாரங்கள் என்றும், சக்தி ஆவேச அவதாரங்கள் என்றும் இரண்டு வகைப்படும்.
எம்பெருமான் தன்னுடைய முக்ய குணங்களான ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் ஆகிய ஆறு குணங்களையும் ஒரு ஜீவாத்மாவினுள் புகுத்தி அவதரித்தான் என்றால் அது ஸ்வரூப ஆவேச அவதாரமாகும் (எடுத்துக்காட்டு- பரசுராமர்)
எம்பெருமான் தன் சக்தியை மட்டும் ஒரு ஜீவாத்மாவினுள் புகுத்தி அவதரித்தான் என்றால் அது சக்தி ஆவேச அவதாரம். (எடுத்துக்காட்டு- கார்த்தவீர்யார்ஜுநன்).
சக்தி ஆவேச அவதாரங்கள் ஸ்வரூப ஆவேச அவதாரங்களிடம் தோற்கும். ஸ்வரூப ஆவேச அவதாரங்கள் முக்யாவதாரங்களிடம் தோற்கும். (எடுத்துக்காட்டு- கார்த்தவீர்யார்ஜுநன் பரசுராமரிடம் தோற்றான். பரசுராமர் ராமபிரானிடம் தோற்றுப் போனார் என்னும் புராண சரித்ரம் காண்க).
ஆக இப்படிகளாலே எம்பெருமான் விபவாவதாரம் பண்ணுவதெல்லாம் ஸாதுக்களை ரக்ஷிப்பதற்கும், துஷ்டர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் ஆகும்.
அந்தர்யாமித்வம்
எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் நிலைகள் ஐந்தினையும், அவற்றுள் பரம், வ்யூஹம், விபவம் ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும் முன்பு நாம் பார்த்திருக்கிறோம். மேலே நான்காம் நிலையான அந்தர்யாமித்வத்தைப் பார்ப்போம். அந்தர்யாமித்வம் என்பது எம்பெருமான் நம் அனைவருள்ளும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையாகும். தன்னாலே படைக்கப்பட்டுள்ள அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறான். முன்னம் நாம் விசிஷ்டாத்வைதம் விஷயமாகப் பார்க்கும்போது ப்ரஹ்மமான எம்பெருமான் தன் திருமேனியில் ஸூக்ஷ்மமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சேதன, அசேதனங்களுக்கு உருவம், பெயர் ஆகியவற்றைத் தந்து, அந்த ஸ்தூலமான (பெரியதான) சரீரங்களுக்குள்ளும், ஆத்மாக்களான நமக்குள்ளும் இருந்து ரக்ஷிக்கிறான் என்று பார்த்திருக்கிறோம். ஆக எம்பெருமான் நம் ஒவ்வொருவருள்ளும் எழுந்தருளியுள்ளான். நாம் எல்லாரும் ஆத்மாக்கள். ஆத்மா அணுமாத்ர ஸ்வரூபன் – மிக நுண்ணிய வஸ்து என்று சாஸ்த்ரங்கள் சொல்லும். அந்த மிகமிக நுண்ணிய வஸ்துவான ஆத்மாக்களான நமக்குள் எம்பெருமான் இருக்கிறான். நம்மோடு இருந்துகொண்டு, நம்மை வழிநடத்துகிறான். ஆக நம்மோடே எம்பெருமான் எப்போதும் இருக்கிறான் என்பதால் நாம் பாபங்களில் ஈடுபடக்கூடாது என்பது புலனாகிறது. அவன் நமக்குள் இருந்து சங்கல்பிக்கவே நம்மால் செயல்பட முடிகிறது. நாம் பண்ணும் நற்கார்யங்கள் எல்லாவற்றையும் எம்பெருமானே செய்விக்கிறான் என்று நாம் உணரவேண்டும். எல்லாம் நாம் செய்கிறோம் என்றிராதே பெருமாள் செய்விக்கிறார் என்றிரீர் என்று பராசரபட்டர் அருளிச்செய்வர்.
இங்கு ஓர் ஐயம் எழுகிறது. எம்பெருமான் தான் எல்லாவற்றையும் செய்விக்கிறான் என்றால், பாபகர்மாக்களையும் அவனே பண்ணுவிக்கிறானோ? அவன் பாபகர்மாக்களைப் பண்ணுவித்தால், அதற்கு நாம் ஏன் பாபகர்மபலனை அனுபவிக்க வேண்டும்?
எம்பெருமான் இச்சையால் தான் உலகனைத்தும் உள்ளன. ஆத்மாக்களான நமக்கு இருக்கும் ஸ்வாதந்த்ர்யம் (ஒரு செயலை செய்வதற்கான சுதந்திரம்) என்னும் தன்மை அவன் அளித்ததே ஆகும். “நித்யர்களான இந்த ஆத்மாக்கள் நன்மை தீமைகளை அறியும் ஞானத்தை உடையவர்கள் ஆதலால் தம் விருப்பப்படி செயல்புரியட்டும்” என்று எம்பெருமான் சங்கல்பித்துள்ளான். இந்த பகவத்சங்கல்பமே ஆத்மாக்களான நாம் கர்மங்களில் ஈடுபடக் காரணமாகிறது. இது தான் அவன் நமக்கு அமைத்துக் கொடுக்கும் ஸ்வாதந்த்ர்யம். இவ்வாறு எம்பெருமான் நமக்குள் எழுந்தருளியிருந்து, தன் சங்கல்பத்தினால் நம்மை செயல்பட வைக்கிறான். நம் முய்ற்சியை அவன் பொருட்படுத்தாமல் இருக்கிறான். எனவே, பகவான் ஏன் ஆத்மாக்களை பாபவினைகளிலும் தூண்டுகிறான் என்ற கேள்விக்கு இடமில்லை. எம்பெருமான் நம்மை நல்வழியிலேயே செலுத்துவான். ஆனால் நம் மனத்துக்கு நாம் வசப்படுவதாலே தான் பாபகர்மங்களை செய்கிறோம்.
மனத்துக்கு வசப்பட்டு நாம் பாபங்களைப் பண்ணுகிறோம் என்றால் அந்த மனதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஏன் நம்மைத் தடுப்பதில்லை? என்றொரு சந்தேகம் வரும். எம்பெருமான் நம்மை நம் கர்மவினைகளின் அடிப்படையில் வழிநடத்துகிறான். ஒரு உதாரணம் காட்டுகிறோம். ஒருவன் மற்றொருவனை அடித்தும், உதைத்தும் ஹிம்ஸிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஹிம்ஸையைப் பண்ணுபவன் மனதிலும் பெருமான் இருக்கிறானே, ஏன் அவர்க்கு நன்மையை உணர்த்தி, அந்த ஹிம்ஸையினால் வரப்போகும் பாபத்திலிருந்து அவனைக் காக்கவில்லை? என்னில், பகவானே அந்த ஆத்மாவை அந்த ஹிம்ஸையைப் பண்ணவைத்து, அந்த ஹிம்ஸையைப் பண்ணினதுக்கான தண்டனையையும் அவனுக்குப் பெற்றுத்தருவான். பின், பெருமான் அந்த பாபத்தைப் பண்ணவும் வைத்து அதுக்கு தண்டிக்கவும் வேணுமோவென்னில், அந்த ஆத்மா பூர்வஜன்மத்தில் பண்ணியிருந்த ஒரு பாபத்துக்கான பலனை இந்த ஜன்மத்தில் அனுபவித்துக் கழிக்க வேணும் என்று அவன் சங்கல்பித்ததினாலே இப்படி இந்த ஆத்மாவை செயல்படச் செய்து, பூர்வஜன்ம கர்மத்துக்கு சேர அதுக்கான கர்மபலனான தண்டனையையும் பெற்றுத் தந்தான். ஆக எம்பெருமான் நம் கர்மவினைகளுக்கு சேரவே நம் ஹ்ருதயத்தில் எழுந்தருளியிருந்து, நம்மை செயல்படச் செய்து, நம்மை ரக்ஷிக்கிறான் என்பது புலனாகிறது.
ஆக இப்படிகளாலே எம்பெருமானுடைய அந்தர்யாமித்வத்தை ஒருவாறு அனுபவித்தோம். மேலே அடுத்த கடைசி நிலையான அர்ச்சாவதாரம் பற்றி பார்ப்போம்.
அர்ச்சாவதாரம்:
எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் நிலைகளில் இறுதியானது அர்ச்சாவதாரம் ஆகும். அர்ச்சாவதாரம், எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், நம் ஒவ்வொருவருடைய அகங்களிலும் விக்ரஹரூபத்தில் சேவைசாதிக்கும் நிலையாகும். எம்பெருமான் விக்ரஹரூபத்தில் இருந்தாலும், சாளக்ராமரூபத்தில் இருந்தாலும், ஒரு சித்ரரூபத்தில் (படத்தில்) கூட இருந்தாலும் அவையெல்லாம் அவனுடைய அர்ச்சா ரூபங்களாகும். இந்த அர்ச்சாரூபத்தில் எழுந்தருளியிருக்கும்எம்பெருமான் தான் நம்போல்வார் எளிதாக பூஜிக்கலாம்படி எழுந்தருளியுள்ளான். ஆராதனைக்கு எளியவனாக எம்பெருமான் தன்னைக் காட்டிக்கொடுப்பது அர்ச்சாவதாரத்திலேயாம். கண்ணன் கீதையில் நாலாவது அத்யாயத்தில் அருளிச்செய்த ச்லோகம்-
யேயதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
என்று. இந்த ச்லோகத்துக்கு வ்யாக்யானம் அருளிச்செய்கிறார் எம்பெருமானார் – ஸ்தோத்ரம் செய்யும் அடியவர்கள் எப்படி என்னை வழிபடுகிறார்களோ, அப்படியே தன்னைத்தான் காட்டித்தருவதாக எம்பெருமான் அருளிச்செய்கிறான் என்று காட்டியருளுகிறார். இதையே பொய்கையாழ்வார் தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமருகந்தது எப்பேர் மற்றப்பேர்- தமருகந்து எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே அவ்வண்ணம் ஆழியானாம் என்று முதல் திருவந்தாதியில் அருளிச்செய்தார். அடியவர்களால் உகக்கப்பட்ட திருவுருவம் எதுவோ, அவ்வுருவாகவே எம்பெருமான் தன்னை அமைத்துக்கொள்கிறான்; அடியவர்களால் உகக்கப்பட்ட திருநாமம் எதுவோ அந்தத் திருநாமமே தனக்காம்படி இருக்கிறான்; அடியவர்கள் உகப்புடன் எந்த குணசேஷ்டிதங்களை உடையவன் எம்பெருமான் என்று நினைத்து ஓயாமல் அவனை த்யானிக்கிறார்களோ, அவ்வண்ணமே அந்த குணசேஷ்டிதங்களோடே எம்பெருமான் விளங்குகிறான் என்று ஆழ்வார் அருளிச்செய்தார். ஆக அர்ச்சாவதாரம் என்பது நம்போல்வார் எளிதாக அவனை பூஜிக்க வேணும் என்பதற்காக அவன் எழுந்தருளியுள்ள நிலையாகும்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்...!
No comments:
Post a Comment