||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||
சைவர்கள் தங்கள் சைவாகமத்தை வைத்துக் கொண்டு "எங்கள் ஈசன் தானே வேத முதல்வன்" என்று வாதிடுகிறார்கள்! ஆனால் அனைத்து வேதங்களின் முடிவே ஸ்ரீமந் நாராயணனே(ஹரி) என்று வேதாந்திகளான ஸ்ரீராமானுஜர, மத்துவர், ஆதிசங்கரர் மூவரும் வேதங்கள் சொல்லும் நாயகன் நாராயணனே என்று முற்றுப்புள்ளி வைத்ததை இவர் அறியார்கள் போலும்..!
பிரம்ம ஞானத்தை தரும் இருக்கு, யஜூர், ஸாமம், அதர்வணம் என்ற வேதம் நான்கினையும் அந்தணர்கள் ஓதத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் "ஹரி: ஓம்" என்ற சொல்லைச் சேர்த்துச் சொல்லுவதை இவர்கள் அறிவில்லையோ? உலகிற்க்கு ஆதியாவானும், அந்தமாவானும் அரியே என்பதை உணர்ந்தவன்றோ அவர்கள் அவ்வாறு கூறுகிறனர்.
வேதத்தில் ஆதியிலும், அந்தத்திலும் சொல்லப்படுகிற 'ஹரி:' என்ற சப்தத்திற்கு வியாஸர்
'பிரம்மாவையும், இந்திரனையும், உருத்திரனையும், இயமனையும், வருணனையும் நிக்ரஹித்து ஹரிக்கின்ற காரணத்தாலே ஹரி என்று சொல்லப்படுகிறான்' என்று அருளிச்செய்கிறார். இதற்க்கு சங்கராசாரியர் செய்த அத்வைத பாஷ்யத்திலும் இப்படியே வியாக்யானம் செய்திருக்கிறார்". என்று கூரேச விஜயத்தில் கூறுவதை நோக்குக.
"எல்லா உலகங்களுக்குத் தாயும், தந்தையும், கர்மபலத்தை விதிப்பவனும், அறியவேண்டிய பொருளும், பாவனமானவனும், வேதத்திற்கு முதற்காரணமான ஓங்காரம் என்னும் பிரணவ ஸ்வரூபியும், இருக்கு, யஜூர், சாமவேதங்களும் நானே" என்று ஸ்ரீ பகவத்கீதையில்,
"பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: |
வேத்யம் பவித்ர மோங்கார: ருக் ஸாம யஜூரேவ ச||"
(பகவத்கீதை 9-17) என்று கீதாச்சாரியனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச்செய்திருப்பது காணத்தக்கது.
"வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே|
வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாணாத்மநா||"
[வேதத்தினால் அறியத்தக்க சக்ரவர்த்தித் திருமகன் ஸ்ரீராமனாக அவதரித்தபோது, வேதம் ராமாயணமாக வால்மீகியிடம் இருந்து அவதரித்தது.] என்று ஸ்ரீராமாயணத்தின் பெருமை கூறும் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருப்பது மேலே காட்டிய கீதைப் பொருளை உணர்த்துவதை காணலாம்.
மேலும், தமிழ் இலக்கியங்களில் மிகப்பழைமையான பரிபாடலில் திருமாலைக் கூறுமிடங்கள் தோறும், 'நாவல் அந்தணர் அருமறைப் பொருளே' என்றும், 'முதுமொழி முதல்வ' என்றும்,
'தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்து நீ; வேதத்து மறைநீ; பூதத்துள் முதலும் நீ;"
என்று கூறிச் செல்லுமிடத்து, 'வேதத்தில் மறைந்துநிற்க்கும் பொருள் நீயேயாவாய்' என்று விளக்குவது உணரத்தக்கது.
"வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே"
என்ற நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலின் இறுதி இரண்டடிகளுக்கு, "வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள் குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனேயென்று ஆன்றோர் கூறிநிற்பர்; ஆதலின், யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு." என்று பொருள் கூறி அவனை விளக்குமிடத்து, 'இறைவனது பரத்துவங் கூறுவார் வேதமுதல்வன்றார். எனப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் எழுதும் உரையை நோக்குக.
விடமுண்ட கண்டனே வேதமுதல்வனாபின், அந்தணர்கள் அவ்வேதங்களை ஓதும்போதெல்லாம் 'ஹரி: ஓம்' என்று தொடங்குவதும், முடிக்கும்போதும் 'ஹரி: ஓம்' என்று முடிப்பதும் பொருந்துமோ? "ஹரி: ஓம்" என ஓதுவது உலகிற்கு ஹரியே வேதத்தினுட்பொருள் என்பதை விளக்கவன்றோ? இந்த உண்மையை ராமாயணத்தைத் தொடங்கும்போதே,
"ஆதி யந்த மரியென யாவையும் ஓதி னாரல கில்லன வுள்ளன
வேத மென்பன மெய்ந்நெறி நன்மையன் பாத மல்லது பற்றிலார்"(3)
என்று கவிச்சக்ரவர்த்தி கம்பர் பெருமான் தெளிவுபடுத்தினார்; இராமாயாணத்தின் பிற இடங்களிலும் திருமாலே வேத முதல்வன் என்பதை விளக்கினார்
"வேதங்க ளறைகின்ற வுலகெங்கும் விரிந்தனவுன் பாதங்க ளிவையென்னிற் படிவங்க ளெப்படியோ? ஓதங்கொள் கடலன்றி யொன்றினோ டொன்றொவ்வாப் பூதங்கள்தொறு முறைந்தால் அவையுன்னைப் பொறுக்குமோ"[ஆரணிய-விராதன்வதை - 48]
என வேதங்கள் அறைகின்ற பாதங்கள் திருமாலின் திருவடியே என்று விராதன் துதியிலும், வாலி தன் பிழையினைப் பொறுக்குமாறு இராமனை வேண்டி, சுக்ரீவனுக்குச் சொல்லுமிடத்து,
[வாலிவதைப்படலம் 132]
"மறைகளு முனிவர்யாரு மலர்மிசையயனு மற்றைத் துறைகளின் முடிவுஞ்சொல்லுந் துணிபொருள் நுனிவில் அறைகழலி ராமனாகி யறநெறி நிறுத்தவந்த [லேந்தி இறையொரு சங்கையின்றி யெண்ணுதி யெண்ணமிக்கோய்" என்றும், சுந்தரகாண்டம் காப்புச்செய்யுளில்,
"அலங்கலிற் றோன்றும் பொய்ம்மை அரவெனப்பூத மைந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபா டுற்ற வீக்கம் கலங்குவ தெவரைக் கண்டா லவரென்பர் கைவி லேந்தி இலங்கையிற் பொருதா ரன்றே மறைகளுக் கிறுதி யாவார்" என்று
'மறைகளுக்கிறுதியாவார் எனக்கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. இரணியன் வதைப்படலத்தில் பிரகலாதன் வாயிலாக, "தொல்லை நான்மறை வரன்முறைத் துணிபொருட் கெல்லாம் எல்லை கண்டவ னகம்புகுந் திடங்கொண்ட தென்னுள்"(28) என்றும்,
"ஆரைச் சொல்லுவ தந்தண ரருமறை யறிந்தோர் ஓரச் சொல்லுவ தெப்பொரு ளுபநிட தங்கள் தீரச் செய்வினை தேவரும் முனிவருஞ் செப்பும் பேரைச் சொல்லுவ தல்லது பிறிதுமொன் றுளதோ"(29) என்றும்,
"வேதத் தானும் நல் வேள்வியி னானுமெய் யுணர்ந்த போதத் தானுமப் புறத்துள எப்பொரு ளானும் சாதிப் பார்பெறும் பெரும்பதந் தலைக்கொண்டு சமைந்தேன் ஓதிக் கேட்பது பரம்பொரு ளின்னமொன் றுளதோ" (30)
என்றும் வேதப்பொருளை உணர்த்துவதையும், மேலும், பிரகலாதன் இரணியனது வினாவிற்கு விடையிறுக்கும் பொழுது "வேதத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் கூறும்
"ஹரி: ஓம்" என்ற திருமாலின் திருநாமததையே நான் கூறினேன் எனக் கூறும்.
"சுருதி யாதியில் தொடங்குறு மெல்லையிற் சொல்லும் ஒருவன் யாவர்க்கும் நாயகன் திருப்பெய ருணரக் கருதக் கேட்டிடக் கட்டுரைத் திடர்க்கடல் கடக்க உரிய மற்றிதின் நல்லதொன் றில்லென வுரைத்தான்" (40)
என்னும் செய்யுளில் ஆணித்தரமாக அடித்துச் சொல்லுவதையும் ஐயங்கார் பாடலோடு ஒப்பு நோக்குக. இவை எல்லாவற்றுக்கும் மேலாக விபீஷணன் அடைக்கலப் படலத்தில்(113) இராமன் வாயிலாக,
"போதக மொன்று கன்றி யிடங்கர்மாப் பொருத போரின் ஆதியம் பரமே யானுன் னபயமென் றழைத்த வந்நாள் வேதமு முடிவு காணா மெய்ப்பொருள் வெளிவந் தெய்தி மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார்."
என வேத நாயகனை மெய்ப்பிப்பதையும், தான் இராமபிரான் தூதன் என்று அங்கதன் இராவணனுக்குத் தெரிவிக்குமிடத்தில்,
"பூதநாயகன் நீர்சூழ்ந்த புவிக்கு நாயகன் இப்பூமேற் சீதைநாயகன் வேறுள்ள தெய்வ நாயகன் நீசெப்பும் வேதநாயகன் மேல்நின்ற விதிக்கு நாயகன் தான்விட்ட தூதன்யான் துணித்தமாற்றஞ் சொல்லியவந்தேன் என்றான்."
(உயுத்த - அங்கதன் தூது -21)
என்று 'சீதைநாயகனான திருமாலே வேதநாயகன் என்றுரைப் பதையும் காண்க. "இலட்சுமணன் தன்னாலான மட்டும் முயற்சிசெய்தும் இந்திரஜித்தை வதைக்க முடியாமல் திகைத்துக் கடைசியாக ஒரு பாணத்தை எடுத்து, 'வேதத்தின் முடிவாகக் கூறப்படும் பரம்பொருள் இராமன் என்பது உண்மையானால், இந்த அம்பு இந்திரஜித்தின் தலையை அறுக்கக்கடவது ' என்று சொல்லி ஏவி விட்டான்; அக்கணமே இந்திரஜித்தின் தலையை அவ்வம்பு கொய்தது" என்று பொருள்படும் பின்வரும் பாடலும் நோக்குக:-[உயுத்த -இந்திரசித்து-51
"மறைகளே தேறத் தக்க வேதியர் வணங்கற் பால இறையவ னிராம னென்னு நல்லற மூர்த்தி யென்னில் பிறை யெயிற் றிவனைக்கோறி யென் றொரு பிறைவாய்வாளி நிறையுற வாங்கி விட்டா னுலகெலா நிறுத்தி நின்றான்." வேதநாயகன் திருமாலே எனக் கம்பநாட்டாழ்வார் இராமாயணத்தில் மேலும் பல இடங்களிலும் விளக்குவது கற்றறிந்ததோர் கண்ட உண்மையாகும்.
"மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன் பிறவிப் பெருந்துயர மெல்லாம் -- அறவே
பிழைத்தேன்யான் என்றானப் பேராழி யானை அழைத்தேவல் கொண்ட அரசு"[நளபெண்பா: சுயம்..4] என்று கம்பர் காலத்தவரான புகழேந்திப்புலவர் நளவெண்பா சுயம்வரகாண்டம் 4-வது கவியில் ஆழியானையே 'மறை முதல்வன்' என்று அறுதியிடுவது காண்க.
"அருமறை முதல்வனை ஆழி மாயனைக் கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணணைத் திருமகள் தலைவனைத் தேவ தேவனை இருபத முளரிக ளிறைஞ்சி ஏத்துவாம்"[வில்லிபாரதம்: வாரணா.கடவுள் வாழ்த்து] என வில்லிபுத்தூரார் பாரதத்தில் வாரணாவதச்சருக்கத்தில் கடவுள் வாழ்த்தாகக் கூறும் பாடலில் 'ஆழிமாயனே அரு மறை முதல்வன்' என்பது நோக்குக.
"மொழிமறைமுடிமே, லெழுமுதலவே செழுவடமலைவாழ், விழுமியபொருளே"
[திருவேங்கடக்கலம்பம்]
[சப்தஸ்வரூபமான வேதங்களின் அந்தமாகிய உபநிஷத் துக்களில், விளங்கிக் காணப்படுகின்ற முதற்பொருளாகிய அதுவே வேங்கடமலையில் வாழும் சிறந்த பொருளாகும்] என்று வேதப் பரம்பொருளே வேங்கடத்திலுறையும் திருமால் என்னும் திருவேங்கடக் கலம்பகம் 76 ஆம் பாடலை ஒப்புநோக்குக.
இவற்றை சுமார் 50 வருடங்களுக்கு முன் பாலர்களை முதன்முதல் பள்ளிக்கு வைக்கும்பொழுது ஆசிரியர், ஓலைச்சுவடி ஒன்றில் 'ஹரி: ஓம் நமோ நாராயணா சித்தம்' என்று எழுதி அச்சுவடியில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் மாணவனுடைய விரலைப் பிடித்துக் காட்டிக்கொடுத்துப் படிக்கும்படி செய்து அதன்பிறகே
'அ, ஆ' என்ற உயிரெழுத்து முதலாகக் கற்பிப்பார். அந்த ஏட்டுக்கு 'அரிச்சுவடி' என்று பெயர் அச்சுப் புத்தகத்திலும் முதற்புத்தகம் அரிச்சுவடி என்றே காணப்படும்.
"அரியென்று சொன்னால் அளியென்று சொல்லும் வரிவண்டு பேசி வருமோ"
என்பது அழகர் கிள்ளைவிடுதூது. இதற்கு, "அரி என்பது திருமாலின் பெயர்; அதைக் கூடச் சொல்லத் தெரியாது என்பது, அரிச்சுவடியிலே முதல் வார்த்தையாகிய 'அரி' என்பதே தெரியாதென்பதும்" என்பது டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுடைய குறிப்புரை. ஆகவே சைவர்களும் அரிச்சுவடியை 'அரிச்சுவடி' என்றோ, 'சிவச்சுவடி' என்றோ கூறுவதில்லை. பண்டைச் சான்றோர்கள் முழுமுதற்கடவுளான அரியின் பெயரைக்கொண்டே 'அரிச்சுவடி' என்றார்கள் என்பது இங்கு கருதத்தக்கது. இன்றும் பெரியோர்கள் 'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்று கூறுகின்றனர். அந்தணர்கள் செய்து வரும் சிராத்தங்களில் தத்தம் விடும்போது, 'ஸ்ரீவிஷ்ணு பாதே தத்தம்' என்று கூறி தாங்கள் செய்த கர்மாக்களின் பலனை எல்லாம் ஸ்ரீவிஷ்ணுவின் அடிக்கமலத்தில் அர்ப்பணம் செய்கின்றனர். ஸந்த்யாவந்தனம் செய்பவர்கள் முடிவில் 'சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்' என்று கூறி முடிக்கின்றனர் இதிலிருந்து அரியே வேதமுதல்வன் என்பது தெளிவாகிறது.
"சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்"
ஆதாரம்:-[பரப்பிரம்ம விவேகம்]
ஸ்ரீ சுதர்சணர் திருவடிகளே சரணம்..!
ஆச்சாரியர் திருவடிகளே சரணம்..!
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போன்றது விஷ்ணுவை வேதமுதல்வன் என்பது.
ReplyDeleteசிவபிரான் தேவர்களுள் பிராமணர் விஷ்ணு சத்திரியர் பிரமன் வைசியர் என்று வேதமே கூறும்.
சிவபெருமானே வேதங்களை அருளியவன் என்று புறநானூறே கூறும்
"நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ
மூவேழ் துறையு முட்டின்று போகிய
உரைசால் சிறப்பி னுரவோர் மருக" என்று கூறி வேதங்களும் ஆறங்கங்களும் சிவபிரானின் நாவில் பிரியாது இருக்கின்றன.
"ஆறறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து "என்றது கலித்தொகை.
ஹரி ஓம் என்பதில் அந்த ஓங்காரவடிவம் சிவபிரானுடையதே என்பதை வேதமே கூறும்.
'அமாத்ரஸ் சதுர்த்தோ வய்வஹார்ய: ப்ரபஞ்சோப சமச் சிவோத்வைத ஏவகோங்கார' (மாத்திர யளவில்லாதவனாயும் வாக்கு மனங்களுக் கெட்டதவனாயும் பிரபஞ்சங்களுக்கெல்லாம் லயஸ்தான மானவனாயும் இரண்டற்றவனாயும் நான்காவது தெய்வமாயும் ப்ரமாத்மாவாயுமுள்ள சிவபெருமானே ஓங்காரமாகின்றான்)என்ற மாண்டூக்ய உபநிஷத்தால் அது வெளி.
"ஓங்காரஸ்வரூபிணம் மஹாதேவம்" என்றது பஸ்மசாபால உபநிடதம்
அந்த ஓங்காரத்தால் தான் ஹரி நாமத்திற்குப் பெருமை ஹரிநாமத்தால்
தான் ஓங்காரத்திற்குப் பெருமை என்றால் அது பிரணவநிந்தை.
ஒருவேளை ஹரன் மனைவி ஹரி(பராசத்தி).சத்தியாகிச் சிவமாகி என்று பொருள்கொண்டால் அப்பிரணவநிந்தை நீங்கும்.
வில்லிபாரதம் அருச்சுனன் மகாதேவனை அடித்தகாலத்து வேதங்களும் ஆகமங்களும் பிரம்மவிஷ்ணு முதலான தேவர்களுமடிபட்டனர் என்றது.
"வேதமடியுண்டன விரிந்தபல ஆகமவிதங்கள் அடியுண்டன ஓரைம்பூதம் அடியுண்டன" என்றது அது.
வேதங்கள் சிவபிரானின் திருவடிகளை வணங்கி வேதாரண்ய ஷேத்திரத்தில் பலகாலங்கள் போற்றி வாழ்ந்தது.
இதனைப் போல் அவ்வேதங்கள் விஷ்ணு கோயிலுக்குச் சென்று அவரை வணங்கியதாக வரலாறு இருக்கிறதா?
அதனால் மற்றவரை வேதமுதல்வதன் என்று கம்பராமயணம்,மற்ற நூல்கள் கூறுவதெல்லாம் வெறும் உபசாரமே ஆகும்.
ஸர்வமிதம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த் ராஸ்தே ஸம்ப்ரஸ¤யந்தே| ஸர்வாணி சேந்த்ரியாணி ஸஹபூதைர் ந காரணம் காரணானம் தாதாத்யாதா காரணந்துத்யேயஸ் ஸர்வைச்வர்ய ஸம்பந்நஸ் ஸர்வேச்வரச் சம்புராகாச மத்யே..... சிவ ஏகோத்யேயச் சிவம் கரஸ் ஸர்வ மந்யத் பரித்யஜ்ய ஸமாப்தாதர்வ சிகா' (அந்தப் பிரம்ம விஷ்ணு ருத்ரேந்திரர் முதலியவர்களெல்லாம் உற்பத்தியாகின்றனர். எல்லா இந்திரியங்களும் பூதங்களுடனே கூட உற்பத்தியாகின்றன. காரணமும், காரணங்களைப் படைத்தோரும் கருதினோரு மாகியவர் உற்பவித்தலின்று. காரணமும் சர்வைசுவரிய சம்பந்நரும் சர்வேசுவரரும் சம்புவுமாகியவரே ஆகாயமத்தியில் தியானிக்கற் பாலர் .... மற்றெல்லாம் விடுத்து இன்பஞ் செய்பவராகிய சிவபிரானொருவரே தியானிக்கற்பாலர். அதர்வசிகை முற்றிற்று) என்றது அதர்வசிகோ உபநிஷத்.
இதனால் மற்ற எல்லா தேவர்களையும்விட்டு சிவபிரானையே தியானிக்கவேண்டும் என்று வேதத்தின் முடிந்த முடிவாகலால். அவரே வேதமுதல்வன் ஆவார்
பேயைப் போல் கத்தி நீ எவ்வளவு பொய்யைக் கூறினாலும் அதனை அறிவுடையோர் நாயளவிற்கும் மதிக்கமாட்டர்கள்.
ReplyDelete