Tuesday, February 27, 2018

திரிபுரம் எரித்த சிவனே பரம்பொருள் என்பதற்க்கு மறுப்பு

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||

"சர்வம் விஷ்ணு மயம் ஜகத்"

சைவர்கள் அனேகமானவர்கள் கூறும் கதை இது; எங்கள் இறைவனாகிய பரமசிவன் திரிபுர தகனம் செய்து, திரிபுரத்தை அழித்து, திருமால் திசைமுகன் முதலிய தேவர்களைக் காத்தார் என்றும், சிவபெருமான் திரிபுரம் எரித்தபோது திருமால் விருஷப வாகனமாய்த் தாங்கினார் என்றும்!

அதுமட்டுமல்லாது பகவான் ஸ்ரீவிஷ்ணுவை துவேஷித்து சில நையாண்டி பாடல்களையும்  பாடியுள்ளான் (காளமேகம் புலவன்) இப்படிப்பட்ட நையாண்டி பாடல்களுக்கும், திரிபுரம் எரித்தால் சிவன் பரம்பொருள் என்ற பாஷாண்டா வாதங்களை நிர்மூலமாக்கவும் இந்த பதிவு பயனுள்ளதாய் அமையும்.

"ஆவாய் அதன்கன்றாய் அந்தரியா மிப்பொருளாய் ஏவாய்ப் பவுத்தனுமாய் எம்பெருமான்--- காவாக்கால் போரும் பொருமோ, புராந்தகனென் றேபேரும்
சீரும் பெறுமோ சிவன் ?" (என்றும்

"அந்த அரனே அநுமானா கப்பிறந்து
சந்ததமும் வாகனமாய்த் தாங்கியதை--- இந்தவுல(கு)
எல்லாம் அறியமால் ஏறானான் என்பதென்னோ
கல்லா மடமாந்தர் காள்!"

என்றும் கூறி,

"தூளாய்த் தலைசிதறிச் சுட்டவிடம் புன்முளைத்து
வாளாப் பெயரும் மறையாதோ--
தாள்வருந்த
வந்தசிவ னுக்கிரங்கி மாயவிரு காசுரனை
அந்தவரி கொல்லாவிட் டால்"

என்ற செய்யுளைக் கூறி அவர்கள் வாதத்தை மறுப்பது.

'ஆவாய்....சிவன்' என்ற செய்யுளுக்கு, பசுவாகியும், அதன் கன்றாகியும், சிவனுக்கு அந்தர்யாமிகியும் (கரந்துறைந்தும்) அம்பாகியும், பௌத்தனுமாகியும் எம்பெருமானாகிய திருமால் காக்காவிடில், நீங்கள் கூறும் சிவபெருமான் அவ்வசுரர்களுடன் போர் செய்ய முடியுமோ? திரிபுராந்தகன் என்ற பேரும் பெற்றுச் சிறப்புத்தான் அடைவானோ? என்பது கருத்து. இனி வரலாறு.

தாரகாசுரனது புத்திரர்கள் மூவர். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுந்மாலி என்று கூறப்படுபவர்கள்.
இவர்கள் கோரமான தவமியற்றி, பிரம்மனிடம் சிறந்த வரங்களைப் பெற்றனர்.
வேதங்களில் நம்பிக்கை உடையவர்கள். வெள்ளி, பொன்களால் அமைக்கப்பட்ட கோட்டைகளை உடைய ஆகாசத்தில் திரியும்படியான மூன்று நகரங்களை மயன் என்பவனால் அமைக்கச் செய்தனர் அதில் சஞ்சீவி சித்தரஸ கூபம் என்ற அமிர்தம் நிறைந்த கிணற்றையும் படைக்கச்செய்தனர் வீரம் நிறைந்த அசுரர்கள் பலரை அந்நகரத்தில் குடிபுகுத்தினர். தாம் நினைத்த இடங்களில் அந்நகரங்களுடனே பறந்து சென்று  இறங்கி, பல இடங்களையும் பாழாக்கி வந்தனர்.

இவர்களது துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமானும் அவர்களுக்கு அபயமளித்து, தேவர்களிடம் தமக்குப் பசுபதியாகும்படி வரம் கொடுத்தால் திரிபுர சம்ஹாரம் செய்வதாகக் கூறினார். தேவர்களும் அதற்க்கிசைந்தனர். உடனே சிவபெருமான் தேவர்களையும் அழைத்துக்கொண்டு திரிபுரவாசிகளான அசுரர்களுடனே யுத்தம்செய்து அநேக கோடி அசுரர்களைக் கொன்று குவித்தார். அவ்வசுரர்களும் இறந்தவர்களை சித்தரஸ கூபமென்கிற கிணற்றில் தள்ள, அவர்கள் மீண்டும் உயிர்பெற்று மறுநாள் யுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தனர் இதையுணர்ந்த சிவபிரான், ஸர்வாந்தர்யாமியாகிய ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து ஒரு யாகம் செய்தார்.

ஸர்வேஸ்வரனும் சிவபெருமான் முன்தோன்றி திரிபுர தானவர்களை அழிக்கும் உபாயத்தைக் கூறித் தானும் அவருக்கு உறுதுணையாக வருவதாக வாக்களித்தார்.

திருமால் தாம் ஒரு பசுவாகவும், பிரமனை அதன் கன்றாகவும் வரச்செய்து திரிபுரத்தில் நுழைந்து சித்தரஸகூபத்திற்குக் காவலிருந்த அசுரர்களை மயங்கச் செய்தார். பின்பு அமிர்தக் கிணற்றில் இறங்கி அதிலுள்ள அமிர்தத்தை எல்லாம் பருகினார்.

அவ்வசுரர் வேதத்தினிடத்திலே மிக்க பக்தியுடையவர்களாகையால், தான் ஒரு பௌத்தனாகி அவர்கள் முன்சென்று அத்திரிபுரத்தில் உள்ளோர்க்கு மோஹனாகமம் என்ற ஒரு பொய்நூலை உபதேசித்து, வேதங்களித்திலே அவர்கள் கொண்ட நம்பிக்கையைப் போக்கினார். மேலும், அங்குள்ள அசுரர்களின் மனைவியர் மிக்க கற்பொழுக்கமுடையவர்கள்; புத்திரர்களைப் பெறவேண்டி நிற்பவர்கள் அச்சுதனும் அவர்களிடம் சென்று , நீவிர் புத்திரர்களைப் பெற விரும்பினால் அஸ்வத்த மரத்தைப் பூஜித்து ஆலிங்கனம் செய்துகொள் வீராயின் புத்திரர்களை அடைவீர்கள்' என்று உரைத்தான். அந்தப் பெண்களும் அவ்வாறே செய்ய; தானே விருக்ஷ ரூபமாய் இருந்து அர்களுடைய கற்பை அழித்தான். அதன் பின் , திருமால் சிவபெருமானை நோக்கி, பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைத் தேர்ச் சக்கரங்களாகவும், வேதங்கள் நான்கினையும் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மஹா மேருபர்வத்தை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவுங்கொண்டு அசுரர்களை அழிக்கும்படி கூறினார்.

மேலும; தானே சிவபெருமானுக்கு அந்தர்யாமியாக இருந்து ஒருவராலும் அசைக்க முடியாத மகாமேருவை எடுத்து, அக்நி தேவனை அம்பாக்கி அதன் நுனியில் தானிருந்தும், திரிபுராசுரர்களுடன் போர்செய்கையில் தேரின் அச்சு முறியவே, தான் ஓர் விருஷபமாகித் தேரைத் தாங்கியும்  சிவபெருமானுக்குப் பிரமனைக் கொண்டு அரிபஞ்சரம் என்ற மந்திரத்தை உபதேசிக்கச் செய்தும் திரிபுரத்தைச் சிவபெருமான் அழிக்கும்படியாகச் செய்தார் திருமால் என்பது வரலாறு.

சிவன் திரிபுர ஸம்ஹாரத்தில் பொருட்டு, தன் சடையைச் சமித்தாகக்கொண்டு திருமாலை நோக்கி வேள்வி செய்ததும், திருமால் பசுவாகித் திருபுரத்தி லுள்ள அமிர்த கூபத்தின் அமிர்தத்தைப் பருகியதும் பாகவதத்திற் கூறப்பட்டன.

விஷ்ணு பரமசிவனுக்கு ஆத்மாவாய் இருந்தமையால்தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்யும்பொழுது, வில் நாணி யைத் தொடவும் வல்லவரானார் என்பதும், பிரமன் சாரதியானதும் பாரதத்தில் கர்ணபர்வத்தில் பரக்கக் காணலாம்.

திருமால் பௌத்தாவதாரம் எடுத்து திரிபுரத்திலுள்ளவர்களின் விரதத்தை அழித்ததுபற்றிப் பாத்மமும் அரிவம்சமும் உணர்த்தும். 'அரிபஞ்சரம்' என்ற மந்திரத்தை அயன் உபதேசித்தது பற்றி நாரதீயம், மந்திரசாலம் என்ற நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.

சிவன் தேவர்கள்பால் 'பசுபதி' என்ற வரத்தைப் பெற்றனன் என்பது யஜூர்வேதத்தில் ஆறாம் காண்டம் இரண்டாம் பருச்சத்தில்
(ப்ரஸ்னத்தில்) காணலாம். இவை வடமொழிச் சான்றுகள். இனி நந்தம் தமிழ்மொழிச் சான்றுகளை க்காண்போம்.

தமிழர் சமயத்தையும், கொள்கை களையும், வாழ்க்கை நெறிமுறை களையும் தெள்ளத் தெளியக் காட்டுவன சங்க கால இலக்கியங்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, மற்றும் இதன்பின் எழுந்த சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் தமிழர்களது சமயத்தை அறிய மிகவும் பயனுள்ளவை களாகத் திகழ்கின்றன. அவற்றுள் சிலவற்றில் சிவபிரான் திரிபுரம் எரித்த வரலாறு வருகிறது.
"மூலவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும்" எனத் திருமுருகாற்றுப் படையிலும்;

"ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்து."

என்று கலித் தொகையிலும்;

"ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீ இ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
றைமிடற் றண்ணல்."..........
[புறம் 55;-1-4]

என்றும் புறநானூற்றிலும் இவ்வரலாற்றினைக் காணலாம். இப்புறநாநூற்றுச் செய்யுளில்,
'ஒருகணை கொண்டு மூவெயிலுடற்றி' என்ற இடத்தில், முன்பு பல கணைகளினாலே அழிக்க முடியாமல், அசுரர்களைத் திருமாலாகிய ஒரே அம்பினால் அழித்தான் என்பது பெறப்படும்.

எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் ஒன்று. பரிபாடலை, 'ஓங்கு பரிபாடல்' என்று உயர்வாகக் கூறுவர். சிறப்பு மிக்க அப்பரிபாடலில், சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாறு கூறப்படுகிறது. அதனை அடியிற் காண்போம்.

"ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர்எயில் ஓர் அழல்-- அம்பின் முளிய மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்"
[பரிபாடல் 5]

சிவபெருமான் பூமியைத் தேராகவும், நான்கு வேதங்களையும் நான்கு குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவுங்கொண்டு, அக்னிவடிவமான(திருமாலாகிற) ஒரே அம்பினால் திரிபுரத்தை எரிததார் என்று மேலே கண்ட பரிபாடல் விளக்குகிறது. தக்ஷன் சாபத்தினால் யாகத்தில் சிவனுக்கு அவிர்பாகம் இல்லா மலிருந்தது, இத்திரிபுர சம்ஹாரம் செய்ததற்குப் பிரதியுபகாரமாகத் தேவர்களிடம் 'பசுபதி' என்ற பேரைப் பெற்று யாகத்தில் அவிர்ப்பாகமும் பெற்றார் என்பதை
"அம்பின் முளிய மாதிரம் அழல எய்து அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்" என்ற வரிகள் தெளிவுறுத்துகின்றன.
இதில் சிவபெருமானுக்குச் சாரதியான பிரமனைக் கூறுமிடத்து 'ஆதி அந்தணன்' என்றும் சிவபெருமானைக் கூறுமிடத்து 'பைங்கட் பார்ப்பான்' என்றும் கூறப்படுகிறது. பிரமன் முதலில் தோன்றியவனாகையி னாலே 'ஆதி அந்தணன்' என்றார். பிரம்மனுக்குப் பிறகு தோன்றியத னாலே சிவபெருமானை 'பைங்கட் பார்ப்பான்' என்றார் ஆகவே, சிவனிலும் பெரியோனாகிய பிரமன் சாரதியானதினாலும்,

"செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி
கல் உயிர் சென்னி இமய வில் நாண் ஆகி தொல் புகழ் தந்தாரும் தாம்"[பரிபாடல் திரட்டு 1]

என்ற பரிபாடல் திரட்டின்படி, ஆதிசேஷன் நாணாகியதனாலுமே சிவபெருமான் திரிபுரம் எரித்த புகழை அடைந்தார் என்று தெளிவு பெறுகிறது. மேலும்,

"ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல்
மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமும் நீ" [பரிபாடல் 1]

என்ற பரிபாடல் அடிகளில், திருமாலே சிவனுக்கு அந்தர்யாமியாயிருந்து உலகங்களை ஸம்ஹரித்தார் எனக் கூறுகையாலே, அவரே சிவனுக்கு அந்தர்யாமியாயிருந்து திரிபுரங்க ளையும் அழித்தார் என்பதும் விளங்கும். பிரமன் படைப்பும், சிவன் அழிப்பும் அவர்களுக்கு அந்தர்யாமிருந்து திருமால் ஒருவனே செய்கிறான் என்பதே மேலே கண்ட பரிபாடற் பகுதிக்குப் பொருள் என்பதை---"ஐந்து தலையைத் தோன்று வித்த அணங்குடை அருந்திறலையுடைய ஈசன்; மடங்கல்--- அவனினாய உலகுயிர்களின் ஒடுக்கம். பூவில் நான்முகனும் அவனினாய உலகுயிர்களின் தோற்றமும் நீ. அழிப்பும் படைப்பும் கூறியவாறு" என்னும் பரிமேலழகர் உரைகொண்டு தெளிக.

அன்றியும், நற்றிணைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் மாயோனே வேதமுதல்வன் எனவும், அவன் உயிர்கள் எல்லாவற்றினும் அந்தர்யாமியாக விளங்குகிறான் எனவும் பாரதம் பாடிய பெருந்தேவனார் கூறுவதையும் அடியிற் காண்க.

"மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
ளைநரல் பௌவம் உடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே"[நற்றினை:க.வா]

இப்பாடலில் "இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் --தீதற விளங்கிய திகிரியோன்(சக்ரதாரி)" என்ற அடிகளில் ஸர்வேஸ்வரனின் ஸர்வாந்தர்மித்வத்தை ஆசிரியர் ஆணித்தரமாக அடித்துக் கூறுவது காண்க.

"பாரதி யாடிய பாரதி யரங்கத்துத் திரிபுர மெரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம் பேவல் கேட்ப
மையவ ளொருதிற னாக வோங்கிய
மையவ னாடிய கொடுகொட்டி யாடலும்" [சிலம்பு:கடலாடுகாதை 36-43]

என்று சிலப்பதிகாரம் கடலாடுகா தையில் சிவபெருமான் திரிபுரம் எரித்தது பற்றிய செய்தி காண்கிறது. இவ்வடிகளுக்கு;

"தேவர் புரமெரிய வேண்டுதலால் வடவையெரியைத் தலையிலே யுடைய பெரிய அம்பு ஏவல்கேட்ட வளவிலே அப்புரத்தில் அவுணர் வெந்து விழுந்த வெண்பலிக்கு வையாகிய பாரதியரங்கத்திலே உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று பரணி, தூக்கு, சீர் என்னும் தாளங்களைச் செலுத்தத் தேவர் யாவரினும் உயர்ந்த இறைவன் சயானந்தத்தாற் கைகொட்டி நின்று ஆடிய கொடுகொட்டியென்னு மாடலும்"  "முகம்---தலை. பேரம்பு-- பரமபுருடன். ஏவல்கேட்ப--- சுட்ட வளவிலே" என்ற அடியார்க்கு நல்லார் உரைனையும் காண்க. இக்கூற்றிலிருந்தும் பரமபுருட னான திருமாலே அம்பாயிருந்து திரிபுரம் எரித்தார் என்பது விளங்கும்.

இனி அருளிச்செயலை நோக்குவோம்,

"சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும் வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன் புரமொரு மூன்றெரித்து அமரர்க்கு மறிவியந்து அரனய னென உலகழித் மைத்துளனே"
[திருவாய் 1-1-8]

என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் திருமாலே சிவனுக்கு அந்தர்யாமியாக இருந்து முப்புரத் தையும் எரித்தான் என்பது விளங்கும். இப்பாசுரத்தின் ஈடுமுப் பத்தாறாயிரப்படி வியாக்கியானத் தில்-- "தான் பூட்டின நாணி தன் கழுத்தையறுத்துக் கொண்டு போகாதொழியும்போதும் ஈச்வரன் அந்தராத்மாவாய் நிற்கவேணும்" என்பது நோக்கத்தக்தாகும். இதன் கருத்தாவது;--"வாயு,இந்திரன், வருணன், அக்நி முதலானவர்க ளோ, மனிதர்களோ யாராயினும் சரி, எனக்கு ஈடல்லர்" என்று உருத்திரன் செருக்குற்றிருந்தார் ஒருசமயம். அந்த உருத்திரன் தனது வில்லை ஊன்றிக்கொண்டு நின்றார். அந்த வில்லின் ஒருமுனை மண்ணிலும், மற்றொரு முனை விண்ணிலுமாகியது. இதையுணர்ந்த இந்திரன் செல்லு (கரையான்) வடிவம்கொண்டு அந்த வில்லின் நாணியை மென்று தின்றுவிட்டான். நாணியற்ற அந்த வில் உடனே எழும்பி மேகமண்ட லத்தில் பாய்ந்து விட்டது. அப்படி அது மேலே எழும்பும்போது உருத்திரனுடைய தலையை அரிந்துகொண்டு போயிற்று. இன்றும் அந்த வில் நாணி இல்லா ததாக மேகமண்டலத்தில் தோன்று வது காணலாம். இக்காரணத்தினா லேயே அது "இந்திர தனுசு" என்று சொல்லப்படுகிறது. இந்த வரலாறு தைத்திரீய ஆரண்யகத்தில் [1-5] கூறப்பட்டிருக்கிறது. இதைக் கருத் தில்கொண்டு தான் மேலே கண்ட ஈட்டு ஸ்ரீஸூக்தி அவதரித்திருக் கிறது என்று முன்னோர் மொழிவர் அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு துணை செய்யாமையால் உருத்திரன் தலை இழந்துபோகும்படியாக நேர்ந்தது. திரிபுர சம்ஹார காலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு துணைசெய்தமையால் அப்படிப் பட்ட ஆபத்து ஒன்றுமில்லாமல் சிவன் வெற்றி பெற்றார் என்பது விளங்கும்.
இதைத் திருவுள்ளம்பற்றி,

"குழல்நிற வண்ண நின்கூறு கொண்ட தழல்நிற வண்ணன் நண்ணார் நகரம் விழ நனிமலை சிலைவளைவு செய்து, அங் கழல்நிற அம்பது வானவனே"
[பெரியதிருவாய் 6-1-3]

என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்வதிலிருந்தும் திருமாலே தீயுமிழும் அம்பாக இருந்து திரிபுர தகனம் செய்தார் என்பது பெறப்படுகிறது.

"கள்ளவேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்கவாறும் கலந்த உள்ளம் பேதம்செய்திட் டுயிருண்ட வுபாயங்களும் [சுரரை
வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்தென்னுயிரை யுருக்கியுண்ணுமே" [திருவாய் 5-10-4]

என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில், பௌத்தாவதாரம் எடுத்து, திரிபுரம் சென்று அங்குள்ள அசுரர்களின் உள்ளத் தைப்பேதித்துத் திருமாலே திரிபுரம் எரிய உதவினன் என்று நம்மாழ்வார் கூறுவதை ஒப்புநோக்குக.

திரிபுர சம்ஹார காலத்தில் சிவபெருமானுக்குப் பிரமன் சாரதியானது பற்றி,

"செங்கோல மலரிலிருந் தனைத்து
மீன்ற திசைமுகன்தான் அறம் வளர்க்குஞ் செல்வப்பாவை பங்கோனுக் காதிமறைப் புரவி பூண்ட படிக்கொடித் தேர் கடவு தனிப்பாகனானான் பொங்கோதப் பாற்கடலா னிவனென்றியாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து வெங்கோப விசயனுக்குச் சூதனானான் விசயனுமன்(று) உத்தரன்தேர் விசையி னூர்ந்தான்"
[வில்லிபாரதம்:கர்ண 28]
என வில்லிபாரதம் கர்ணபர்வம் 28ஆம் பாடல் விவரிக்கிறது.

இனி; "அந்த அரனே....மாந்தர்காள்"
[பக்கம்35] என்ற செய்யுளுக்கு விளக்கம்; திருமால், சக்கரவர்த்தித் திருமகனாக அவதரித்த காலத்தில் சிவபெருமான் அநுமனாகப் பிறந்து இராமபிரானுக்கு வாகன மாகத் தாங்கித் தொண்டு செய்ததை இந்த உலகமே அறியும். இதனைக் கற்றுணராத நீவிர், திருமால் சிவனை விருஷபமாகத் தாங்கினார் என்று சொல்லுவது எக்காரணம் பற்றி? என்பது கருத்தாகும். இதற்குச் சான்று;

"வாயுமற் றெனது கூறு மாருதி யெனலு மற்றோர் காயுமர்க் கடங்க ளாகிக் காசினி யதனின் மீது  போயிடத் துணிந்தோ மென்றார் புராரிமற் றியானே வாத சேயெனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க் கவதி யுண்டோ".
[கம்ப: பாலகாண்டம்; திருவவதார 27]
எனும் பாடலில், கம்பநாட்டாழ்வார்
'புராரி மற்றியானே வாத சேய் எனப் புகன்றான்' [திரிபுரமெரித்த சிவன் 'வாயுபுத்திரனான அனுமன் யானே' எனக் கூறினார்] என்று கூறுவது காண்க.

"தூளாய்த் தலைசிதறி....கொல்லாவிட்டால்".
[பக்கம் 35] என்ற செய்யுளை இனி விளக்குவோம்.

விருகாசுரன் என்பவன் சிவபெருமானைத் துரத்திக் கொண்டு வந்தான். சிவனும் அவன் செயலுக்கு அஞ்சித் திருமா லிடம் கால்கள் நோவ ஓடி வந்தார். வந்த சிவனிடம் இரக்கம் கொண்டு மாய விருகாசுரனைத் திருமால் மாயும்படி செய்தார். திருமால் அவ் வாறு செய்யவில்லையானால் சிவபெருமானது தலைதூளாய்ச் சிதறி அவர் இருந்த இடம் தெரியா மல் புல் முளைத்துப் போய் அவரது பேரும் மறைந்திருக்காதோ? என்பது இதன் கருத்து.

இனி இதன் வரலாறு:---

முன்னொரு காலத்தில் விருகாசுரன் என்ற அசுரனொரு வன் முக்கண்ணீசனைக் குறித்துச் சிறந்த தவமியற்றினான். கறை மிடற்றண்ணலும் அவனது கடுந்தவத்தைக் கண்டு மகிழ்ந்து அவன்முன் தோன்றினார். விருகா சுரனும் சிவபெருமானை நேரில் கண்டு துதித்தான். சிவபெருமான் அவ்வசுரனை நோக்கி, 'அப்பா! நீ செய்தற்கரிய தவத்தைச் செய்தாய், உன் தவத்தை மெச்சினேன்; நீ விரும்பிய வரத்தைக் கேள் தருகிறேன்" என்றார். அசுரன், "அண்ணலே! யான் எவர் தலையில் கையை வைத்தாலும் அவர் தலை தூள் தூளாய்ச் சிதறும்படி வரந்தந்தருள்க" என்று பிரார்த்தித்தான். சிவனும் பின் விளைவதை ஓராமல் 'அங்ஙனமே தந்தோம்' என்றார். விருகாசுரன் மிகவும் களிப்புற்றான். முக்கண்ணன் தந்த வரத்தைச் சோதிக்க முனைந்தான். முதன் முதலில் யார் தலையில் கை வைப்பது? என்று எண்ணினான் . 'ஏன்.? வரமீந்த சிவபெருமான் தலையிலேயே கையை வைத்துப் பார்ப்போமே' என்று துணிந்தான். எழுந்தான். சிவன் தலையில் கையை வைக்கச் சென்றான். சிவபிரானும் 'இந்தக் கொடியவனு க்கு வரம் கொடுத்ததாலல்லவோ இந்த விளைவு? என்று அச்சமுற்றார். அவ்வசுரன் தன்பால் வருமுன்பே உலகமெங்கும் ஓடினார். அசுரனும் அரனைத் துரத்திக்கொண்டே வந்தான். புராரி வேறு புகலிட மில்லாமல் புயல்நிற வண்ணனாகிய திருமாலிடம் ஓடி வந்தார் திருமறு மார்பனும் நிகழ்ந்ததை அறிந்தார்.

உடனே பைந்துளப மார்பனாகிய பரமன் ஓர் பிரம்மசாரிவடிவினனாய் விருகாசுரன் முன் தோன்றினான். அசுரனும் அவனது வடிவழகில் மயங்கினான். அங்கு வந்தவன் யார் என்பதை உணராமல் அசுரன் அப்பிரம்மசாரியை நோக்கி இன்னுரை சொல்லலுற்றான்.

ஐயா! நீர் யார்? எந்த ஊரிலிருந்து வருகிறீர்? எவ்வழியாக வருகிறீர்? உமது அழகிய முகமும் திருமேனியும் யாவரையும் கவரும் படியாக இருக்கிறது. நீர் வந்த வழியில் எங்காவது சிவபெருமானைக் கண்டீரா?' என்று வினவினான்.

அவனுரையைக் கேட்ட பிரம்மசாரி அவ்வசுரனை நோக்கி, ஐயா! நீர் ஏன் மெய்யில் வியர்வை சிந்த இவ்வாறு ஓடிவருகிறீர்? சிவபெரு மானைத் தேடும் காரணம் யாது? சொல்லத் தக்காதால் என்னிடம் கூறும்' என்று தன் புன்முறுவல் பூத்த முகத்தினால் அவ்வசுரனை மயக்கினான். அவனது மதுரமான சொல்லைக் கேட்ட விருகாசுரன்
'இப்பிரம்மசாரி சிறந்த அறிவுடைய வனாக இருக்கிறான்' என்று தான் சிவனை நோக்கித் தவம் செய்ததும், அவர் வரமீந்ததும், அவர் தந்த வரத்தைச் சோதிக்க அவர் தலையிலேயே கைவைக்க வந்ததும் விளக்கிக் கூறினான்.

அசுரனது உரையினைக் கேட்ட திருமால் முறுவல்செய்து. 'அவுணர் தலைவ! சிவனுடைய வரத்தை உண்மை என்றா நீ்ர் நம்புகிறீர்? அவர் கபடமுடையவர ன்றோ.? அவ்வாறில்லை யாகில் தக்ஷனிடம் சாபம் பெறுவரோ? அவரது சாபத்தினால் பிசாசுகளோடு கூடி மயனத்தில் திரிவதை நீர் உணரவில்லையா? அந்தச் சிவனுடைய கதியே இங்ஙனமாயின் அவர் தந்த வரம் எங்ஙனம் பலிக்கும் ? இதற்கு நீர் சிவபெருமானையா தேட வேண்டம்? அவர் தந்த வரம் உண்மைதானா? என்று பார்க்க உம் கையினால் உம் தலையையே தொட்டுப்பார்த்தலே அது பொய் யென்று உணர்ந்துகொள்வீர்; அவர் வரம் ஒருநாளும் பலிக்காது' என்று கூறினார். விருகாசுரனும் பிரம்மசாரியின் சொற்களிலே மனம் மருண்டு, தன் கரத்தைத் தன் தலையிலே வைத்தான். உடனே அவன் தலை தூள் தூளாய்ச் சிதறி விழுந்தது. பிறைசூடியாகிய சிவனும்,  'நம் துன்பம் இன்றோடு நீங்கியது' என்று மாயனை வாயார வாழ்த்தினார் என்பது வரலாறு.

இனி இதன் சான்று;..

"வாய்விரி யெருக்கமலர் மாலைதலை சூடாக் காயழல் பரந்தசுடு காடெழி லரங்காப் பேயொடு நடிக்குமொரு பித்தனுரை மெய்யோ? ஆயிர முடித்தலை யனந்தனை நிகர்ப்பாய்!"

"மின்னொழுகு கொற்றவடி வேலுழவ! மற்றுன் சென்னி கரம் வைத்தது தெளிந்திடுத லன்றே நன்னிலைமை யித்திற(ம்)முன் நாடுதி யெனத்தன் மன்னிய தடக்கைதலை வைத்தவுணன் மாண்டான்."

"நன்றென மகிழ்ந்தமரர் நாண்மலர் பொழிந்தார் வென்றிமழு வாளனும் வியந்தன னடைந்தான் மன்றகமழ் தண்டுளவ மாயனு மகன்றான் என்றுமுனி புங்கவ னெடுத்தன னிசைத்தான்."

என பாகவதம் தசமஸ்கந்தம் விருகாசுரனைக் கொலைபுரி அத்தியாயத்தில் கூறப்படுவது காண்க.

எனவே, திரிபுரம் ஸ்ரீமந் நாராயணன் துனையோடுதான் அவன் பங்கேற்றதால்தான் சிவன் தகனம் செய்தார் என்பது விளங்கும் இதனால் ஸ்ரீமந் நாராயணனே அனைத்து தேவர்களுக்கும் அந்தர்யாமி என்பதும் புலப்படும்.

"சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

ஆதாரம்:-[ திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய "பரப்பிரம்ம விவேகம்" என்னும் உன்னத படைப்பில் இருந்து]

16 comments:

  1. நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
    ஆறு கோடி நாராயண ரங்ஙனே
    ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
    ஈறி லாதவன் ஈச னொருவனே

    Sivane potri Sivaya nama.

    ReplyDelete
  2. சங்கரனா கபடமுடையவன்? ஜயோ! என்ன கொடுமை? அந்த சங்கரரின் புன்முறுவலால் அல்லவா முப்புரங்களும் எரிந்தது.ஐடத்துவமான விஷ்ணு பாணத்தைக் கொண்டா அவர் முப்புரங்களையும் எரித்தார்?
    முப்புர அசுரர்களை அழிப்பதற்காக தேவர்கள் அனைவரும் நீலகண்டரை நோக்கி தவம் புரிந்தார்கள் என்று மகாபாரதமே கூறுகிறது.

    ReplyDelete
  3. சிவபராக்கிரமம் விஷ்ணு பராக்கிரமத்தை விட ஏற்றமுடையது என்பதால் அல்லவா தேவர்கள் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள்

    ReplyDelete
  4. சிவன் கண்ணனை நோக்கி தவம் புரிந்ததாக மகாபாரதத்திலும் சொல்லப்படவில்லையே

    ReplyDelete
  5. பஸ்மாசூரனை வரம் கொடுத்த நாமே கொல்லக்கூடாது என்ற இரக்கத்தினால் அல்லவா அவர் அவ்வாறு மறைந்தார்

    ReplyDelete
  6. விஷ்ணு உண்மையாகவே பலமுடையவர் என்றால் சங்கு சக்கரத்தோடு பஸ்மாசூரனை எடுருத்திருக்கலாமே.ஏன் பேடி வடிவத்தை எடுக்க வேண்டும்?சிவம் கொடுத்த வரத்திற்கு அஞ்சி அல்லவா திருமால் மோகினி வடிவமெடுத்தார்

    ReplyDelete
  7. மகாபாரதம் கர்ணம் 27 ஆவது அத்தியாயம்
    "பிறகு, ருத்திரர் வில்லில் நாணேறிட்டு அவ்விதமான பாணத்தைப் பூட்டிப்பாசுபதாஸ்திரத்தோடுசேர்த்துத் திரிபுரத்தை அழிக்கவேண்டுமென்று எண்ணினார்' "என்ற அத்தியாயப்படி விஷ்ணுவாகிய பாணம் தன்னளவில் வலியற்றதாய்ப் பாசுபதாஸ்திரத்தின் ஸாநித்தியம் பெற்றே திரிபுரத்தை யெரித்தது பெறப்படும். ஆகவே அவ்விஷ்ணு பாணத்தின் சாமானியத்துவம் பாரத சம்மதமாதல் காண்க

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. தன் பக்தனாகிய மாபலியை வஞ்சித்தவனும் சலந்தராசூரனின் மனைவியாகிய பிருந்தையை
    அவன் இறந்தவுடன் அவன் உடலில் புகுந்து கற்பழித்தவனும் திரிபுரத்தவர்களின் மனைவியரை அரச மரத்தில் புகுந்து அவர் அறியாதவாறு அவர்களைக் கற்பழித்தவனும்
    வாலியை நேரில் எதிர்க்க வலிமையின்றி மறைந்திருந்து கொன்றவனும் ஜராசந்தனிடம்
    பதினெட்டு முறை போரில் தோற்றுப் புறமுதுகிட்டு ஓடியவனும் மாயமானையும் மாயாசீதையையும் மாயாவசுதேவனையும் உண்மையென்று மயங்கி மூர்ச்சையானவனும்
    துர்வாசரின் எச்சில் பாயசத்தால் உடல் வலிமையானவனான திருமாலா பரம்பொருள்?
    அவரையா திரிகுணரஹிதரான சங்கரர் வணங்குவார்?வெட்கம்!வெட்கம்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நரகம்செல்வது உறுதி...

      சைவர்கள் யாவருக்கும் நர கமே

      Delete
    2. சிவபெருமானே மோட்சம் தர வல்லவர்
      பஸ்ம ருத்ராஷத்தை இகழும் மாபாவிகளான வைவணவர்களுக்கு நரகம் உறுதி

      Delete
    3. சைவர்களுக்கு நரகமா வைணவர்களுக்கு நரகமா என்பதை நீ செத்த பிறகு தெரிந்து கொள்வாய்

      Delete
  10. இராமர் ஏய்த பிரம்மாஸ்திரமே இராவணனை கொன்றது அப்படியேனில் பிரம்மா தான் ராவணனை அழித்தாரா ? திருஅதிகை அ.சந்திரசேகர்

    ReplyDelete