Tuesday, February 20, 2018

தத்த்வத்ரய ஸம்ப்ரதாயம்

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||
||ஸ்ரீமத் வரவரமுநயே நம||

ஸ்ரீராமாநுஜராலே ஸ்தாபிக்கப்பட்டது தான் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம். இந்த விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் தத்த்வத்ரய ஸித்தாந்தம் என்றும் வழங்கப்படும். தத்த்வத்ரயம் என்றால் என்ன? மூன்று தத்த்வங்கள் என்று பொருள். தத்த்வம் என்றால் என்றும் இருப்பது என்று அர்த்தம். நம் விசிஷ்டாத்வைதத்தின்படி, தத்த்வங்கள் மூன்று. அவை சித் (அறிவும், சைதன்யமுமுள்ள வஸ்துக்கள்)அசித் (அறிவும், சைதன்யமுமற்ற வஸ்துக்கள்), ஈச்வரன் (பரமாத்மா) ஆகியவை. இவற்றை நாம் உண்டு என்றாலும், இல்லை என்றாலும் உண்மையாக உள்ளவை. விசிஷ்ட என்றால் சிறப்புடையது என்றும் கூடியது என்றும் பொருள். த்வைதம் என்றால் இரண்டு. அத்வைதம் என்றால் இரண்டில்லை ( ஒன்று) என்று பொருள். இரண்டு பரமாத்மாக்கள் உண்டு என்றால், எது பெரியது என்று சொல்லமுடியாதாகையால், ஒன்றையொன்று அழித்துக்கொண்டு பரமாத்ம தத்த்வமே இல்லாது போய்விடும். அதனால் ஈச்வரதத்த்வம் ஒன்று தான் இருக்க முடியும்; அது “இதற்கு மேல் உயர்வில்லை” என்று சொல்லலாம்படியாக அனைத்து சிறப்புகளையும் உடையது. ஆக சிறப்புடன் கூடிய ஒறே தத்த்வம் ஈச்வரதத்த்வம் என்பதும், மற்ற இரண்டு தத்த்வங்களான சேதன, அசேதன தத்த்வங்கள் ஈச்வரதத்த்வத்தைக் காட்டிலும் தாழ்ந்தவையாய், ஈச்வரனுக்கு சேஷப்பட்டவையாய் இருக்கும்.

மேலும், வேதங்களைப் பொறுத்து இந்த விசிஷ்டாத்வைதத்தை எப்படி நம் பெரியோர்கள் எடுத்துரைத்தனர் என்று பார்ப்போம்

விசிஷ்டாத்வைதத்தின் உட்பொருள்

சித், அசித், ஈச்வரன் என்று சொல்லப்படும் மூன்று தத்த்வங்களுள்ளன என்றும், அவற்றுள் சிறப்புடைய ஒரே தத்த்வம் ஈச்வரதத்த்வம்என்பதும், அந்த ஈச்வரதத்த்வமான பரமாத்மாஅறிவுள்ள சித்தோடும், அறிவற்ற அசித்தோடும் கூடியது என்பதும் விசிஷ்டாத்வைதம் என்றதுக்கு சாரமான அர்த்தங்கள் என்று பார்த்திருக்கிறோம். இந்த விசிஷ்டாத்வைதத்தின் உட்பொருள் என்னவென்பதை வேதங்களின் வாயிலாகப் பார்ப்போம்.

பரமாத்மாவே உலக முழுமுதற்காரணமென்று வேதங்கள் சொல்லுகின்றன.

ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசான:


என்று முன்னமே பார்த்திருக்கிறோமே, அந்த ப்ரளயகாலத்தில், யாருமே இல்லாத காலத்தில் பரமாத்மாவான எம்பெருமான் மட்டும் இருந்தான். அப்போது, அவன் திருமேனியிலேயே இந்த ப்ரபஞ்சங்கள் அனைத்தும் (சித் அசித் வஸ்துக்கள் அனைத்தும்) அதிஸூக்ஷ்மமாய் (மிக நுண்ணியவையாய்) ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த சமயத்தில் தான் எம்பெருமான் தன் நிர்ஹேதுக க்ருபையாலே உலகங்களைப் படைக்கத் தொடங்குகிறான். ஆக இதனாலே ஸூக்ஷ்ம சேதன, அசேதன விசிஷ்டமான ப்ரஹ்மம் ஜகத்காரணமாகிறது (நுண்ணியவையாய் தன்னுள்ளிருக்கும் சித், அசித் ஆகியவற்றின் படைப்புக்குப் பரமாத்மா காரணமாகிறான்) என்று வேதங்கள் சொல்கின்றன. அந்த பரமாத்மா ஒருமுறை தன் திருமேனியிலே ஒட்டிக்கொண்டிருக்கும் சித் அசித்துக்களை பேர், உருவம் உள்ளவையாக்கி, அவற்றைப் படைத்து, அவற்றுக்குள் இருந்து ரக்ஷிக்கிறான். ஆக இதனாலே, ஸ்தூல சேதன, அசேதன விசிஷ்டமான ப்ரஹ்மம் கார்யமாகிறது (பெரியவையாய், உருவத்தோடு உள்ள சித் அசித் வஸ்துக்களுள் இருக்கும் பரமாத்மாவாலே- அந்த பரமாத்மாவினுடைய சங்கல்பத்தினாலே அந்த வஸ்துக்கள் செயல்படுகின்றன) என்றும் வேதங்கள் சொல்கின்றன.

ஆக, ஜகத்காரணமாகவும், ஜகத்கார்யமாகவும் இருக்கும் ப்ரஹ்மம் (பரமாத்மா) ஒன்றே என்பது விசிஷ்டாத்வைதத்தின் உட்பொருளாகும்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்...!

No comments:

Post a Comment