Monday, February 19, 2018

ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வம்

||ஸ்ரீமதே ராமாநுஜாய நம||
ஸ்ரீமந் நாராயணனே பரமாத்மா
மற்றைத் தெய்வங்களெல்லாம் அவன் அங்கங்களேயாவர்.
ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன், சக்தி, ஸ்கந்தன், வினாயகர், இத்யாதி தேவதைகளால் நம் மதத்தில் தெய்வங்களுக்குப் பஞ்சமில்லை. ஒவ்வொரு தெய்வத்தின் பக்தர்களும் தாம் வணங்கும் தெய்வத்துக்கு முழுமுதற்கடவுள் என்று பேரிட்டுள்ளனர். தங்கள் தெய்வத்துக்குப் பரத்வம் சொல்கிறார்கள் சிலர். சிலர் எல்லாத் தெய்வமும் ஒன்றே என்பர். சிலர் தெய்வமே இல்லை என்பர்.

#யார்_பரமாத்மா?

யார் பரமாத்மா என்பதை நாம் ப்ரமாணங்களைக் கொண்டு அறிய வேண்டும். எவை ப்ரமாணங்கள்? வேதவேதாந்தங்களும், இதிஹாசபுராணங்களும், ஆழ்வார்கள், ஆசார்யர்களுடைய அமுதமொழிகளுமே நமக்கு ப்ரமாணங்கள். இவ்வெல்லா ப்ரமாணங்களைக் காட்டிலும் வேதங்களுக்கே ஏற்றம். ஏனெனில் வேதங்களைத் தழுவியே மற்ற ப்ரமாணங்கள் உள்ளன. அந்த வேதங்கள் ஸ்ரீமந்நாராயணனே பரமாத்மா என்று சொல்கின்றன. ஏன்? அவன் தான் அனைவரையும் படைக்கிறான்; காக்கிறான்; அழிக்கிறான்.

இல்லையே! ப்ரஹ்மா படைக்கிறார், விஷ்ணு காக்கிறார், சிவன் அழிக்கிறார் என்பது தானே உண்மை? என்று யாரேனும் கேட்கலாம். அந்த ப்ரஹ்மா, சிவன் முதலான தெய்வங்களையும் படைத்துக் காத்து, அழிப்பவனே பரமாத்மா. அந்த பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனே என்று வேதம் சொல்கின்றது. இதை வேதத்திலிருந்தே ஒரு ப்ரமாணத்தைக் கொண்டு நாம் அறியலாம்.

#ஏகோஹவை_நாராயண_ஆஸீத்_ந #ப்ரஹ்மா_ந_ஈசான:

என்றொரு வேதவாக்யம். யாருமே இல்லாத காலத்தில் நாராயணன் மட்டுமே இருந்தான்; பிரமனுமில்லை, சிவனுமில்லை என்றது அந்த வேதவாக்யம். "ஒன்றுந்தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர்படைத்தான்" என்று ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்தார். ஆக இத்தால் நாம் என்ன அறிகிறோம்? நாராயணனே ஜகத்காரணம். அவனே ப்ரஹ்மாவைத் தன் உந்தித்தாமரையில் படைத்து, உலகங்களைப் படைக்க நியமித்தான். அந்த ப்ரஹ்மாவே சிவனையும், மற்ற தெய்வங்களையும் படைத்தார். ஆக நாமெல்லாரும் ஸ்ரீமந்நாராயணனாலேயே படைக்கப்பட்டோம். "நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான்படைத்தான்" என்று திருமழிசையாழ்வார் பாசுரம். ஆக ஸ்ரீமந்நாராயணனே பரமாத்மா என்பதை ஒருவாறு விண்ணப்பம் செய்தேன்.

பின் ஏன் எம்பெருமான் மற்ற தெய்வங்களையும், அவர்களை வழிபடும் பக்தர்களையும் படைக்க வேண்டும்?

ஸ்ரீமந்நாராயணனே பரமாத்மா என்றால் அவன் ஏன் மற்ற தேவதைகளையும், அவர்களை வணங்குபவர்களையும் படைக்க வேண்டும்?
வேதத்திலும் அந்த தேவதைகளைப் பற்றி சொல்லப்படுகிறதே? பின் ஏன் ஸ்ரீவைஷ்ணவர்கள் அவர்களை வழிபடக்கூடாது?

என்றிவைபோல் ஐயங்கள் நமக்கெழுகின்றன.

#எம்பெருமானே_எல்லா #ஜீவராசிகளுக்குள்ளும் #அந்தர்யாமியாக_இருக்கிறான்.

ப்ரஹ்மா முதல் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வரைக்கும் அனைத்துள்ளும் உறைகிறான். ஸம்சாரிகள் மேலான மோக்ஷத்தை விரும்பாமல், இவ்வுலக சுகங்களையே விரும்புவதாலே எம்பெருமான் இவ்வுலக இச்சைகளை அருளும் தேவதைகளைப் படைக்கிறான். அந்த தேவதைகளையும், அவற்றை வணங்கும் மக்களையும், தங்களை வணங்கும் அந்த மக்களுக்கு அந்த தேவதைகளுக்குப் பலனளிக்கும் சக்தியையும், அந்த பலனை அடைந்து அனுபவிப்பதினால் அந்த தேவதைகளிடத்தில் அந்த மக்களுக்கு வளரும் நம்பிக்கையையும் நானே படைக்கிறேன் என்றான் கண்ணபிரான். ஆக அந்த தேவதைகளை ஆராதிப்பதினாலும் நானே ஆராதிக்கப்பட்டவன் ஆகிறேன் என்றும் கண்ணபிரான் அருளிச்செய்தான். அந்த பலன்களையே தொடர்ந்து அனுபவிக்கும் அந்த சம்சாரிகள், பிற்காலத்தில் இந்த பலன்களெல்லாம் நிலையற்றது என்றுணர்ந்து நிலையான இன்பம் பெற எம்பெருமானைப் பற்றி, முக்தியடைகிறார்கள். இதனால் தான் பெருமான் இதர தேவதைகளைப் படைத்தான். ஆனால் அந்த தேவதைகளும் நானும் சமம் என்று சொல்லவில்லை. அவர்களும் எம்பெருமான் நியமனத்தாலே செயல்படுமவர்களே ஆவர். "வணங்கும் துறைகள் பலபலவாக்கி, மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பலபலவாக்கி, அவையவைதோறு அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பிவைத்தாய்" என்று நம்மாழ்வாரும், "நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோரருள் தன்னாலே" என்று தொண்டரடிப்பொடியாழ்வாரும் அருளிச்செய்தனர். இத்தால் மோக்ஷமாகிற அந்தமில்லாத பேரின்பத்தை ஸ்ரீமந்நாராயணனே அருளுகிறான். இதர தேவதைகளால் மோக்ஷத்தைத் தரமுடியாது என்று தெரியும்.

மேலும் வேதம் #யோ_ப்ரஹ்மாணம் #விததாதி_பூர்வம்….#முமுக்ஷுர்வை #சரணமஹம்_ப்ரபத்யே
என்று எவன் படைப்பவனான பிரமனையே படைத்தானோ, அவனே பரமாத்மா; அவனையே நாம் சரணமாகப் பற்ற வேணுமென்று தானே சரணாகதி பண்ணிற்று!

இத்தாலே ஸ்ரீமந்நாராயணனே பரமாத்மா என்று ஒருசில ப்ரமாணங்களைக் கொண்டு நாம் ஒருவாறு அறிந்துகொண்டோம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

No comments:

Post a Comment